இஸ்லாமைத் தழுவிய ஆஸ்திரிய குத்துச்சண்டை வீரர்!

0

இந்தக் கொரோனாவில் ஏற்பட்டுள்ள சில நன்மைகளில் இதுவும் ஒன்று. குவாரண்டின் என்னும் தனிமைப்படுத்தலில் இருந்த ஆஸ்திரியாவைச் சார்ந்த வில்ஹெல்ம் ஓட் என்ற குத்துச்சண்டை வீரர் இஸ்லாமை ஆரத் தழுவியுள்ளார்.

வில்ஹெல்ம் ஓட் கடந்த16.04.2020 வியாழன் அன்று ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் தான் இஸ்லாமுக்கு மாறுவதாக அறிவித்தார்.

இவர் ஓர் ஆஸ்திரிய தொழில்முறை கலப்பு மார்ஷியல் ஆர்ட்ஸ் [எம்.எம்.ஏ.] குத்துச்சண்டை வீரர். தனிமைப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தபொழுது இஸ்லாம் குறித்து தான் விரிவாகப் படித்ததாகவும் பின்னர் இஸ்லாமுக்கு மாறியதாகவும் இவர் தெரிவிக்கிறார்.

வில்ஹெல்ம் ஓட் ஆன்லைனில் தான் இஸ்லாமியப் பிரகடனத்தை அறிவிக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டார். ஒரு முஸ்லிமாக தனது பயணத்தின் தொடக்கத்தை அதிகாரப்பூர்வமாகக் குறிக்கும் “ஷஹாதா” கலிமாவை அவர் அந்த வீடியோவில் மொழிகிறார்.

“இது எனது மார்க்கம். நான் இப்போது ஒரு பெருமைமிக்க முஸ்லிம்” என்று அவர் வீடியோவில் கூறுகிறார்.

உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடி, இறைவன் மீதான தனது நம்பிக்கையைப் பிரதிபலிக்கவும் கண்டுபிடிக்கவும் தனக்கு வாய்ப்பளித்ததாக குறிப்பிட்ட வில்ஹெல்ம் ஓட், “இஸ்லாம் பல ஆண்டுகளாக தனது மனத்தின் ஆழத்தில் உள்ளது” என்று கூறினார்.

“ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியாத நேரங்களும் இருந்தன. நான் அரசியல் ரீதியாக செல்வாக்கு செலுத்த அனுமதித்தேன். ஆனால் நான் கடினமான காலங்களைக் கடக்க வேண்டியிருந்தபோது இஸ்லாம் எனக்குத் தேவையான பலத்தை அளித்தது” என்று அவர் மேலும் கூறினார்.

2008-ம் ஆண்டு முதல் தொழில்ரீதியாக குத்துச்சண்டையில் ஈடுபட்டுள்ள ஓட், கலிமா மொழிந்து இஸ்லாமைத் தழுவிய பதிவுக்கு மறுநாள் இரண்டாவது பதிவை ஏற்றினார். அதில் புனித குர்ஆனுடன் அவர் காட்சியளித்தார். இந்தக் குர்ஆனை அவருக்கு சக முஸ்லிம் எம்.எம்.ஏ குத்துச்சண்டை வீரர் புராக் கிசிலிர்மாக் பரிசளித்ததாகக் கூறினார்.

தன்னை ஆரத் தழுவி வரவேற்ற முழு முஸ்லிம் சமூகத்திற்கு நன்றி தெரிவித்த ஓட், இப்போது புனித முஸ்லிம் நோன்பு மாதமான ரமழான் மாதத்திற்கு முதல் முறையாக தயாராகி வருகிறேன் என்றார்.

2018-ம் ஆண்டில், ஆஸ்திரியாவின் தீவிர வலதுசாரி சுதந்திரக் கட்சியின் உள்துறை அமைச்சர் ஹெர்பர்ட் கிக்ல் நாட்டில் “அரசியல் இஸ்லாம்” மீதான ஒடுக்குமுறையை அறிவித்ததையடுத்து அங்கே பதற்றம் நிலவியது.

அவர் 2018-ல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அதனை அறிவித்த பிறகு, வெளிநாட்டு நிதியுதவியுடன் நிறுவப்பட்ட “அரசியல் இஸ்லாமிய” மஸ்ஜித்களை ஆஸ்திரிய அரசு துடைத்தெறிந்தது. அதில் குறைந்தது 150 பேர் ஆஸ்திரியாவிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் ஏழு மஸ்ஜித்கள் மூடப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

“இந்த நடவடிக்கைகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களின் வட்டம் சுமார் 60 இமாம்களைக் கொண்டுள்ளது” என்று கிக்ல் கூறினார். ஆஸ்திரிய வலதுசாரி அரசில் இவரது தீவிர வலதுசாரிக் கட்சி பங்குபெற்றுள்ளது.

அத்துடன் துருக்கிய-இஸ்லாமிய கலாச்சார சங்கத்தின் இமாம்கள் ஏற்கனவே ஆஸ்திரியாவிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதேபோன்று ஆறு மஸ்ஜித்களை நடத்தும் அரபு மதச் சமூகமும் கலைக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைகள் ஆஸ்திரியாவின் “மதச் சமூகங்கள் மற்றும் அமைப்புகளின் வெளிநாட்டு நிதியைத் தடை செய்யும் 2015” சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஒடுக்குமுறைச் சட்டம் ஆஸ்திரியாவில் முஸ்லிம் நிகாபைத் தடை செய்கிறது. 10 வயதுக்குட்பட்ட பெண்கள் ஹிஜாப் அணிவதையும் தடை செய்கிறது.

ஆஸ்திரியாவின் வலதுசாரி அரசாங்கம் குடியேற்றத்திற்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், நாட்டில் “அரசியல் இஸ்லாம்” மீதான ஒடுக்குமுறைகளை அமல்படுத்துவதாகவும் உறுதியெடுத்துள்ளது.

இப்படி இஸ்லாம் மீதும் முஸ்லிம்கள் மீதும் அடக்குமுறைகள் அரசாலேயே நடைமுறைப்படுத்தும் ஒரு நாட்டில்தான் இஸ்லாமை ஆரத் தழுவி தங்கள் மார்க்கமாக ஏற்கும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

“அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்துவிட நாடுகின்றனர். ஆனால் காஃபிர்கள் வெறுத்தபோதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.” (அல்குர்ஆன் 61:8)

MSAH

Comments are closed.