புத்தக தினமும் இளைய சமுதாயமும்!

0

“கண்டதை படி பண்டிதனாவாய்” – என்பது பழமொழி. ஆனால், இன்றைக்கு நம்மில் பலருக்கு வாசிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. காலம் போகும் வேகத்தில் உண்பதற்கும், வசதியாக வாழ்வதற்கும் உழைக்க வேண்டும். அப்பொழுதுதான் சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்கும் என்ற பொதுப்புத்தி பலருக்கு ஆளப்பரவி இருக்கின்றது. இதை நோக்கியே மனிதர்களின் கால்கள் அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆனால், சமூகத்தில் இதுபோன்ற வசதி வாய்ப்புகளுக்கு கிடைக்கக் கூடிய அங்கீகாரங்கள் சில நாட்களில் காணாமல் போய்விடுகின்றன. அவர்களின் வாழ்க்கை குறித்து கிடைக்கும் அங்கீகாரமே நிலைத்து நிற்கும்.
அந்த வகையில் ஒரு மனிதன் தன்னை மட்டுமின்றி, தன்னுடைய சமூகத்தைப் பற்றி எப்பொழுது சிந்திக்க தொடங்குகின்றானோ, அப்பொழுதுதான் அவன் வரலாறுகளில் பதியப்படும் நபராக மாறுகின்றான். அப்படி, ஒரு மனிதனை உருவாக்குவதில் பெரும் பங்கு ‘வாசிப்பு’க்கு இருக்கின்றது. எந்த ஒரு மனிதன் வாசிப்பதில் அலாதியான அக்கறை காட்டுகிறானோ, அவன் வரலாற்றில் இடம்பெற முயற்சி செய்கின்றான் என்றே அர்த்தம் கொள்ளலாம்.
ஒரு வடிவமே இல்லாத கல்லை, சிற்பி எவ்வாறு செதுக்கி அதை சிலையாக மாற்றுவாரோ, அதைப் போன்றுதான் இலக்கே இல்லாத ஒரு மனிதனை இலக்கை நோக்கி இட்டுச் செல்கிறது இந்த வாசிப்பு பழக்கம்.
ஒவ்வொரு வருடமும் மக்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஏப்ரல் 23ம் தேதி உலக புத்தக தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினம் புகழ்பெற்ற நாடக ஆசிரியரும் இலக்கியவாதியு மான ஷேக்ஸ்பியர் பிறந்த நாள் ஆகும். இந்த தினத்தில் வாசிப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கு ஏற்பாடு செய்கின்றனர். இன்று, இளைஞர்களிடம் படிக்கும் பழக்கம் என்பது காணாமல் போய்விட்ட ஒன்றாக மாறிவிட்டது.
அதனால், அவர்களிடம் சமூக சிந்தனையை (Social Thought) எதிர்பார்க்க முடியவில்லை . இதை கருத்தில் கொண்டு எதிர்கால இளைய தலைமுறையை வாசிப்பு பழக்கம் உள்ள சமுதாயமாக உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இக்கட்டுரை உங்களை சந்திக்கின்றது.
கடந்த காலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது ‘வாசித்தல்’ என்னும் அற்புதமான பழக்கம் இப்போது குறைந்து கொண்டே வருகின்றது.
இன்றைய மக்களிடம் அது ஒரு பழக்கமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தொழில் வளர்ச்சியிலும், விஞ்ஞான வளர்ச்சியிலும் முன்னேற்றம் கண்டு, அனைத்தையும் நம்முடைய வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ளலாம் என்ற அளவிற்கு முன்னேற்றத்தை கண்டு இருக்கும் நம்மவர்களிடம், வாசித்தல் என்ற பழக்கம் எந்தளவிற்கு இருக்கின்றது என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஐபேட், ஆன்ட்ராய்ட் செல்போன், லேப்டாப், டேப்லட், கம்ப்யூட்டர் என்று வாசிப்பதில் பல இலகுவான வழிகள் இருந்தும், மக்கள் வாசிப்பதில் போதிய முன்னேற்றம் அடையவில்லை என்றே சொல்ல வேண்டும். எத்தனை வளர்ச்சிகளை கண்டபோதும் புத்தகத்தின் மூலம் ‘வாசித்தல்’ என்பது மிகவும் இன்றியமையாததும் தனித்துவம் கொண்டதுமாகும்.
வளர்ந்து வரும் இந்த காலக்கட்டத்தில் ஊர்களில் நூலகங்கள் என்பது குறைந்து கொண்டே வருகின்றது. நூலகத்தின் முக்கியத்துவத்தைப்பற்றி கூறும்போது “கோவில் இல்லாத ஊரில் கூட குடியிருக்கலாம், ஆனால் நூலகம் இல்லாத ஊரில் குடியிருக்கக்கூடாது” என்று கூறுவார்கள். உண்மைதான்! சமூகத்தை பற்றிய செய்திகளை தெரிந்து கொள்ளவும், நம் முன்னோர்களின் வாழ்க்கை வரலாறுகளை அறிந்து கொள்ளவும் நூலகத்தை தொடர்பு கொள்வதன் மூலமே நம்மால் அறிய முடியும்.
புத்தக வாசிப்பு நம்மை ஒரு புது உலகிற்கு அழைத்து செல்கிறது. புத்தகம் வாசிப்பு என்பது நாம் ஒரு தனி உலகத்தில் வாழ்வது போன்றதாகும்.
ஒரு மனிதனுக்கு சுவாசிப்பு என்பது எவ்வாறு முக்கியமோ, அதேப்போன்றுதான் வாசிப்பு பழக்கமும் முக்கியம் என்பதை நாம் உணர வேண்டும். ஒரு மனிதன் சுவாசிப்பதன் மூலம் எவ்வாறு அவனுடைய ஆன்மா இயங்கிக் கொண்டிருக்கின்றதோ, அதேப்போன்று, அவனிடம் வாசிப்பு பழக்கம் இருக்கும் வரை அவன் எந்த தடங்கள் வந்தாலும், அதையெல்லாம் தாண்டி வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருப்பான் அந்த வகையில் வாசிப்பு பழக்கத்தின் முக்கியத்துவம் என்ன என்பதையும், அதன் மூலம் நம்மால் எவ்வாறு வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏன் உலக புத்தகம் தினம் கொண்டாடப்படுகிறது? ஷேக்ஸ்பியரின் பிறந்தநாளை ஏன் உலக புத்தக தினமாக கொண்டாட வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பு வரையே படித்த ஷேக்ஸ்பியரின் தொகுப்புகளை, இன்றும் உலக மக்கள் படிக்கும் அளவுக்கு பிரசித்தி பெற்றதென்றால் அது மிகையல்ல.
1592ம் ஆண்டு லண்டன் மாநகரை ‘பிளேக்’ எனும் கொடிய நோய் அலைக்கழிக்க தொடங்கியது. அண்மையில் ஏற்பட்ட ‘சார்ஸ்’ நோய் எப்படி சில நகரங்களை முடக்கியதோ அதேபோல் பிளேக் நோயால் முடங்கிப் போனது லண்டண் மாநகரம். அதனால், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் அனைத்து பகுதிகளும் முடங்கிக் கிடந்தன.
லண்டனை அலைக்கழித்த அந்த நோய்தான் பல அமரக் காவியங்களை படைக்கும் வாய்ப்பையும், கால அவகாசத்தையும் ஷேக்ஸ்பியருக்கு தந்தது. அந்த இரண்டு ஆண்டுகளில் அவர் நிறைய நாடகங்களையும், கவிதைகளையும் எழுதிக் குவித்தார். ‘சோனட்’ எனப்படும் புதுவகை கவிதைகளையும் அவர் புனைந்தார்.
பிளேக் நோய் முடிந்தவுடன் அவரது நாடகங்கள் புத்தகமாக வெளிவரத்தொடங்கின. 24 ஆண்டுகள் இலக்கியப்பணியில் அவர் மொத்தம் 37 நாடகங்களை எழுதினார் என்று சொல்வதை விட, இயற்றினார் என்றுதான் சொல்ல வேண்டும். ‘துன்பியல்’, ‘இன்பியல்’ என இரு பிரிவுகளாக அவரது நாடகங்களை வகைப்படுத்தலாம். உலகம் முழுக்க இவருடைய இலக்கியம் போற்றப்படும் அளவுக்கு பெயர் பெற்றது.
அவரால் இலக்கியத்தை எழுத முடிந்ததென்றால், அவரிடம் இருந்த வாசிப்பு பழக்கம்தான் அதற்கு முக்கிய காரணம். நூலகத்திற்கு செல்லக்கூடிய முதல் நபராகவும், நூலகத்ததில் இருந்து கடைசியாக வெளிவரக்கூடியவரும் இவராகத்தான் இருப்பார். இவர் பிறந்ததும் ஏப்ரல் 23ம் தேதிதான், இறந்ததும் ஏப்ரல் 23ம் தேதிதான். அதனால்தான், இந்த இலக்கியவாதியின் பிறந்த தினத்தையே உலக புத்தக தினமாக வைத்து, உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
புத்தகத்தைப்பற்றி அன்றும், இன்றும் ஜெர்மனியின் விடுதலைக்காக போராடி பல்வேறு தியாகங்கள் மற்றும் சிறைக்கொட்டிகளை அனுபவித்து வரலாற்றில் இடம் பிடித்த மாஜினி “என் மனதுக்கு உகந்த நூல்களை மட்டும் கொடுத்து, என்னை என் வாழ்நாள் முழுவதும் சிறையிட்டாலும் நான் கஷ்டப்படமாட்டேன்” என்று புத்தகங்கள் குறித்து கூறினார்.
அந்த அளவுக்கு அவர்கள் புத்தகத்தின் மீது அன்பு கொண்டிருந்தார்கள். அதனால்தான் அவர்களால் வரலாற்றில் இடம் பெற முடிந்தது. அவர்கள் புத்தகத்தை படிப்பதில் கொண்டிருந்த ஆர்வம் நம்மவர்களிடத்தில் எப்படி இருக்கின்றது என்ற ஒரு கேள்வியும் எழுகின்றது.
இன்று புத்தக வாசிப்பு குறைவுதான் என்றாலும், வாசிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைப்பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நாமும் புத்தகத்தை வாசிப்பதில் ஆர்வம் காட்டுவோம். பிறரையும் ஆர்வப்படுத்துவோம்.
ஒரு பெண் பட்டிமன்ற பேச்சாளர், கிட்டதட்ட 1200 தடவைக்கு மேல் பட்டிமன்றத்தில் பேசியவர். இவரின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கின்றது. இவரிடம் உள்ள தனிச் சிறப்பு என்னவென்றால், இவர் ஒரு மேடையில் பேசிய தகவலை மற்றொரு மேடையில் பேசமாட்டார். ஒவ்வொரு மேடையிலும் ஒவ்வொரு தகவலை கூறி மக்களை கவருவதில் வல்லவர். ஒவ்வொரு மேடையிலும் புதுப்புது தலைப்புகளை பேசி அசத்துவார். இது அவருக்கே உண்டான சிறப்பு. இதன் பின்னணியை பார்த்தால் நமக்கும் அந்த ஆர்வம் ஏற்படும் என்பதில் எள்ளளவும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

இதுபற்றி அந்தப் பெண் கூறும் போது, “மாதம் ஐந்தாயிரம் ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்குகிறேன். நிறைய படிக்கிறேன். புதிய விஷயங்களை தெரிந்துகொள்கிறேன். இதனால் ஒரு மேடையில் சொன்ன உதாரணம் இன்னொரு மேடைக்கு வராது.
என் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பவர்கள் இதையே என்னிடம் ஆச்சரியமாக பகிர்ந்து கொண்டதுண்டு. சமீபத்தில் கூட 17, 18ம் நூற்றாண்டுக்கான ‘இந்திய சரித்திர களஞ்சியம்’ என்ற புத்தகத்ததை ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினேன். என் சக பேச்சாளர் ஒருவர் கூட என்னிடம் ஐந்தாயிரம் ரூபாய் செலவு செய்து இப்படி ஒரு புத்தகம் வாங்குவது அதிகப்படி இல்லையா? என்று கேட்டார்.
இதன் மூலம் நமக்கு கிடைக்கிற புதிய விஷயங்கள் மேடைக்கு பயன்படலாமே என்றேன். அதுதான் உண்மை . இந்த வகையில் நான் புடவை, நகைகளுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை விட புத்தகங்களுக்கு கொடுக்கிற முக்கியத்துவமே அதிகம்” என்கிறார் சாதனைப் பெண்மணியான கவிதா ஜவகர்.
(தினத்தந்தி, குடும்பமலர் 10.11.2013) இந்தப் பெண் மட்டுமல்ல; இன்று எத்தனையோ பெண்கள் சாதிக்க வேண்டும் என்ற ஈடுபாட்டோடு முன்னேறிக் கொண்டு செல்கிறார்கள். அவர்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று நிற்கும்பொழுது, நீங்கள் இதை செய்தால் சாதிக்க முடியும் என்று புத்தக வாசிப்பு வழிகாட்டுகிறது.

 

– அஹமது சலீம்

Comments are closed.