எழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!

0

எழுத்தாளர் தமிழ்மாமணி அதிரை அஹ்மத் அவர்கள் அல்லாஹ்வின் பால் மீண்டார்கள் என்ற செய்தியை கேட்டவுடன் நெஞ்சம் கனத்தது. கண்களில் கண்ணீர் கசிந்தது. இருப்பினும், அல்லாஹ்வின் முடிவை பொருந்திக் கொண்டுதானே ஆக வேண்டும். ஆம்! அல்லாஹ் அவரை பொருந்திக் கொள்வானாக என்று “துஆ” செய்கின்றோம், செய்திடுவோம்.

முதன் முதலாக 2007ம் ஆண்டில்தான் அதிரை அஹ்மத் அவர்களை பற்றி அறியும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் அந்த நேரத்தில் அவர்களுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்த இயலவில்லை. பின்னர் 2013 -14 கால கட்டத்தில் தொலைபேசி வழியாக தொடங்கிய உரையாடல் படிப்படியாக வளர்ந்து அஹ்மத் காக்காவுடனான தொடர்பு நெருக்கமான நட்பாக மாறி அவர்களின் அன்பிற்கு பாத்திரமானோம்.

பின்பு 2017 ல் இலக்கியச் சோலை பதிப்பகத்தால் அவர்கள் மொழிபெயர்த்த “அண்ணலார் கற்றுத்தந்த தலைமைத்துவம்” என்ற நூல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நபி (ஸல்) அவர்களின் வரலாறை வெளியிடுவது குறித்தும் நம்முடன் உரையாடிக் கொண்டு இருந்தார்கள். அல்லாஹ்வின் அளப்பரிய உதவியைக் கொண்டு நபி (ஸல்) வரலாறு இலக்கியச் சோலை மூலம் 2018ம் ஆண்டில் முதல் பதிப்பாகவும் 2019ல் இரண்டாவது பதிப்பாகவும் வெளியிட்டோம்.

அதன் பின் நபி (ஸல்) வரலாறு நூல் அறிமுக விழா நடைபெற்ற இரண்டு நிகழ்வுகளில் பங்குபெற்ற போது காக்கா அவர்கள் பல செய்திகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்கள். அந்த சமயத்தில் அஹ்மத் காக்கா அவர்கள் இந்த வரலாற்று நூலை எழுதிட தான் எடுத்துக் கொண்ட 15 ஆண்டுகால அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்கள். அப்படியானால், காக்கா நீங்கள் 15 ஆண்டுகாலம் அல்லாஹ்வின் தூதரோடு வாழ்ந்திருக்கின்றீர்கள் என்று அப்போது நாம் சொன்னோம். இந்த வார்த்தைகளை கேட்ட காக்கா அவர்கள் நெஞ்சுருகி கண்ணீர் வடித்து ‘துஆ’ செய்யுங்கள் என்று சொன்னார்கள்.

இதனிடையே, 2016ல் நல்ல தமிழ் எழுதுவோம் என்ற நூலும், இலக்கியச் சோலை வெளியீட்டு உரிமையை வாங்கி வைத்திருந்த ‘சூரா குர்ஆனிய வழிகாட்டலில் கலந்தாலோசனை’ என்ற நூலை அஹ்மத் காக்கா மொழிபெயர்ப்பில் வெளியிட்டோம்.

தற்போது அஹ்மத் காக்கா எழுதியுள்ள “கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை” மற்றும் என் பெயர் “சாஜிதா” (சிறுவர் கதைகள்) ஆகிய இரு நூல்கள் வெளியீட்டிற்கு தயராக இருக்கின்றது.

தமிழ், ஆங்கிலம் மற்றும் அரபியில் புலமை பெற்றிருந்த காக்கா அவர்களுடன் உரையாடும் போதெல்லாம் இவர்களுடனான நட்பு நமக்கு முன்பே ஏற்பட்டிருக்கக் கூடாதா என்று நினைத்தது உண்டு.

அதிரை பக்கம் சென்றால் காக்காவை சந்தித்து உரையாடி விட்டு வருவது பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் இலக்கியச் சோலை நிர்வாகிகளின் வழக்கம். அதேபோன்று, “கஜா” புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கொடுக்கும் நிகழ்விற்கு சென்றிருந்த பொழுது காக்கா அவர்கள் எங்களை வந்து சந்தித்து பல நூல்களை அன்பளிப்பாக கொடுத்து தன்னுடைய அடுத்தடுத்த எழுத்துப் பணிகளை பற்றி அளவளாவிச் சென்றார்கள்.

குறிப்பாக, இந்த ரமலானில் காக்கா எழுதிய நபி (ஸல்) வரலாறு நூலை எடுத்து மீளாய்வு செய்து கொண்டிருந்த பொழுது அந்த நூல் குறித்தான சில செய்திகளை ரமலான் மற்றும் கொரோனா லாக்டவுடனுக்கு பிறகு காக்காவை சந்தித்து உரையாடலாம் என்று திட்டமிட்டிருந்தேன். இப்போது அதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அல்லாஹ் அவரை பொருந்திக் கொள்வானாக.

பாக்கியாத்தில் ஓதிய சில உலமா பெருந்தகைகள் அதிரை அஹ்மத் காக்கா அவர்களிடம் தமிழ் கற்றுக் கொண்ட நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டிருக்கின்றார்கள். மேலும், நானும் காக்காவிடம் அவரின் தமிழ் மீதான ஆர்வம் குறித்து உரையாடியிருக்கின்றேன். மிகவும் மென்மையான இயல்பு கொண்ட எழுத்தாளர், பன்னூல் ஆசிரியர் தமிழ்மாமணி அதிரை அஹ்மத் அவர்கள் இன்று நம்முடன் இல்லை என்ற செய்தி கனத்த வருத்தத்தை கொடுத்தாலும் மரணம் என்பது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருவது என்பதை நாம் ஏற்றுக் கொண்டு அவருக்காக ‘துஆ’ செய்திடுவோம்.

இலக்கியச் சோலை பதிப்பகம் அதிரை அஹ்மத் அவர்களின் மரணத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்து கொள்வதுடன் அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொறுத்துக் கொண்டு அவரை பொருந்திக் கொள்ள வேண்டுமெனவும் அஹ்மத் காக்கா அவர்களின் குடும்பத்தினருக்கு அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுத்திட வேண்டும் என்றும் ‘துஆ’ செய்கின்றோம்.

இப்படிக்கு

மு. முஹம்மது இஸ்மாயில்,
காப்பாளர்,
இலக்கியச் சோலை.

Comments are closed.