ஊழல் குற்றச்சாட்டில் மீண்டும் எடியூரப்பா!

0

கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான எடியூரப்பா பாஜக மூத்த தலைவர்களுக்கு 1800 கோடி ரூபாய் கொடுத்ததற்கான ஆதாரங்களை கேரவன் இணையதளம் வெளியிட்டுள்ளது.

பாஜக மத்திய கமிட்டிக்கு ஆயிரம் கோடி ரூபாய், மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி மற்றும் நிதின் கட்காரி ஆகியோருக்கு தலா 150 கோடி, ராஜ்நாத் சிங்கிற்கு நூறு கோடி, பாஜக தலைவர்கள் எல்.கே அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு தலா 50 கோடி ரூபாய் கொடுத்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக கேரவன் இணையதளம் குறிப்பிடுகிறது.

நிதின் கட்காரியின் மகனின் திருமணத்திற்கு 10 கோடியும் நீதிபதிகளுக்கு 250 கோடியும் வழக்கறிஞர்களுக்கு 50 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் அது மேலும் தெரிவிக்கிறது. 2009ஆம் ஆண்டு கர்நாடகா சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் டைரியில் இந்த விபரங்களை எடியூரப்பா தனது கைப்பட கன்னட மொழியில் எழுதியதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

வருமான வரித்துறையிடம் ஆகஸ்ட் 2017 முதல் இத்தகவல்கள் உள்ளதாகவும், ஆனால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகவும் கேரவன் அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
பிரதமர் தொடங்கி அனைத்து பாஜக தலைவர்களையும் இதில் விசாரிக்க வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள லோக்பால் கமிட்டி இந்த வழக்கிலிருந்து தனது வேலையைத் தொடங்க வேண்டும் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

Comments are closed.