அரசியல் சாசனத்தில் சிறுபான்மையினரின் உரிமைகள் பொருளும், விளைவும்!

அரசியல் சாசனத்தில் சிறுபான்மையினரின் உரிமைகள் பொருளும், விளைவும்!

டிசம்பர் 18 ஐக்கிய நாடுகள் அவை சர்வதேச சிறுபான்மையினர் உரிமைகள் தினமாக அறிவித்த நாள். உலகெங்கிலும் உள்ள மத, மொழி மற்றும் இன சிறுபான்மையினரை பாதுகாக்கவும், அவர்களின் உரிமைகளை உறுதி செய்வது குறித்தும் உலக சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதே இந்த நாளை கடைப்பிடிப்பதன் நோக்கமாகும். இந்த தினத்தை உலக நாடுகள் அதிகாரப்பூர்வமாக கொண்டாடுகின்றன. அதன் ஒரு பகுதியாக, விவாதங்கள் மற்றும் கருத்தரங்குகள் தவறாமல் நடத்தப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக, அரசாங்கமும் அதன் இயந்திரங்களும் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கு உறுதிப்பூண்டுள்ளதாக ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகின்றன. அன்று சூரியன் மறையும் நேரத்தில், எல்லாம் காணாமல் போய்விடும¢. உறுதிமொழிகளும் அறிவிப்புகளும் காகிதங்களிலேயே தேங்கி விடுகின்றன. உண்மையில், அவை அவ்வாறு தேங்கிக்கிடப்பதையே அதனை தயாரித்தவர்கள் விரும்புகிறார்கள் என்று பொருள். ஐக்கிய நாடுகள் அவை இந்த தினத்தை சிறுபான்மையினரின் நலனை பாதுகாப்பதற்காக அறிவித்தபோதிலும் உலக நாடுகள் அதனை கடைப்பிடிப்பதன் நோக்கம் ஐ.நா.வின் ஆணைக்கு கட்டுப்படுவதாக ஒரு போலியான தோற்றத்தை உருவாக்கவே.
ஐ.நா.வின் தலைமையிடம் அமைந்திருக்கும் அமெரிக்காவில் வாழும் சிறுபான்மையினரிடம் கூட, இந்த நாள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. கறுப்பர்கள், முஸ்லிம்கள் மற்றும் ஆப்-ர¤க¢க – ஆசிய நாடுகளில் இருந்து குடியேறியவர்கள் அமெரிக்காவில் பல வகையான பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர். சிறுபான்மை தினத்தன்று அதை அகற்ற அந்த நாடு எந்தவொரு நடைமுறை திட்டங்களையும் முன்வைப்பதில்லை. ஐரோப்பிய நாடுகளின் நிலைமையும் இதிலிருந்து மாறுபட்டது கிடையாது. பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு அதிகரித்து வருகிறது. நரயார்வேயில் வலதுசாரி தீவிரவாதிகள் குர்ஆனின் நகலை எரியூட்டும் நிகழ்வை பகிரங்கமாக அரங்கேற்றினர்.
ஆசிய நாடுகளின் நிலைமை இன்னும் மோசம¢. மியான்மரில் அப்பட்டமான முஸ்லிம் இனப்படுகொலை, இலங்கையில் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது. சிங்களவர்களிடமிருந்து முஸ்லிம்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். சீனாவில் சிறுபான்மையின உய்கூர் முஸ்லிம்கள் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாகின்றனர். மில்லியன் கணக்கான உய்கூர் முஸ்லிம்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் சித்ரவதைக்கும், அரசியல் ரீதியான மூளைச்சலவைக்கும் ஆளாகின்றனர்.
இந்தியா, சிறுபான்மையினரின் வளமான நிலமாகும். இங்கு மொழி சிறுபான்மையினர் ஏராளம் உள்ளனர். மத சிறுபான்மையினர் சுமார் 12 பிரிவினர் உள்ளனர். இந்தியாவில் மிகப்பெரிய சிறுபான்மையினராக முஸ்லிம்கள் உள்ளனர். நாட்டில் ஒவ்வொரு சிறுபான்மையினருக்கும் பிரச்சனைகள் உள்ளன. சீக்கியர்களும் கிறிஸ்தவர்களும் அடிக்கடி தாக்கப்படுகிறார்கள் என்றாலும், பாகுபாடு மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகுபவர்கள் முஸ்லிம்கள்தான். சுதந்திரத்திற்குப் பிறகு தொடங்கிய முஸ்லிம் எதிர்ப்பு கலவரம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக சங்பரிவாரம் அடித்துகொல்லுதல் (lynching)
என்ற புதிய தாக்குதல் முறையை கையாண்டு வருகிறது. சிறுபான்மையினருக்கு ஆதரவாகப் பேசுவோரின் மீதும் வெறுப்பு விதைக்கப்படுகிறது; தேர்தல் நலனுக்காகப் பெரும்பான்மையின் வாக்குகளைப் பெறுவதற்காக முஸ்லிம்கள் மீது வெறுப்பு விதைக்கப்பட்டு வேகமாக பரப்புரைச் செய்யப்படுகிறது. இதேபோல தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிகள் மீதும் தொடர்ந்து தாக்குதல்கள் நடப்பது அதிகரித்து வருகிறது. மொத்தத்தில் இன்றைய இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பற்றச் சூழலில் அச்சத்துடன் வாழும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
சிறுபான்மையினரின் தனித்துவமான இருப்பும், உரிமைகளும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு தடையாக கருதும் நிலைப்பாட்டை ஆர்.எஸ்.எஸ்.ஸும், பா.ஜ.க.வும் எக்காலத்திலும் கடைப்பிடித்துள்ளன. அதனால் சிறுபான்மையினரின் உரிமைகளை அவர்கள் அங்கீகரிப்பதில்லை. இந்து தேசியவாதத்தில் உட்கிரகிக்காதவர்கள் இந்திய தேசத்திலிருந்தும், குடியுரிமையிலிருந்தும் வெளியேறலாம் என்று ஆக்ரோஷமாக கோஷம் எழுப்பியவர்கள் தற்போது அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பதும் அதனால் தான்.
சிறுபான்மையினரின் உரிமைகள் என்பது இந்தியாவுக்கு மட்டுமான சிறப்பு அல்ல.உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட கொள்கையாகும். ஐக்கிய நாடுகள் அவையின் புள்ளி விபரப்படி உலகில் 10- – 20 சதவீதம் பேர் சிறுபான்மை சமூகங்களாவர். மிக அதிகமான அநீதிகளுக்கும், சமூக, பொருளாதார, அரசியல் பாகுபாட்டிற்கும் மட்டுமின்றி இனப்படுகொலைகளிலும் அவர்கள்தான் குறி வைக்கப்படுகின்றார்கள். அவர்கள் பொதுவான அரசியல் வாழ்க்கையிலிருந்து திட்டமிட்டே விலக்கி வைக்கப்படுகிறார்கள்.எனவே சிறுபான்மையினர் உரிமை என்பது அவர்களின் அடையாளத்தையும், கலாச்சாரத்தையும், கண்ணியத்தையும் அங்கீகரிப்பதற்கான முயற்சியாகும்.
இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் சிறுபான்மையினரின் உரிமைகளை குறித்த விவாதங்களில் எப்போதும் எழும் கேள்வி என்னவெனில் சிறுபான்மையினருக்கு தனியாக உரிமைகளை வழங்க வேண்டுமா அல்லது பெரும்பான்மையினரில் சிறுபான்மையினரை உட்கிரகிக்க வேண்டுமா? பெரும்பான்மை ஆதிக்கம் நிலவும் சமூகத்தில் பொருளாதார, சமூக, அரசியல் துறைகளில் தீர்மானங்கள் எடுக்கும் இடங்களிலிருந்து முஸ்லிம்கள் வேண்டுமென்றோ, இயல்பாகவோ விலக்கப்படுகின்றனர். பெரும்பான்மை சமூகத்தின் முன்னால் அவர்களின் வரலாறும், கலாச்சாரம், மொழி என அனைத்தும் அன்னியப்படுத்தப் படுகிறது.சிறுபான்மையினர் பொது சமூகத்தில் இடம் கிடைக்காமல் விளிம்புநிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதனால் தான் சிறுபான்மையினருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கி அவர்களை சுரண்டலிலிருந்தும், பெரும்பான்மையினரில் கட்டாயமாக உட்கிரகிக்கப்படும் சூழலிலிருந்தும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கென பிரத்யேக கொள்கைகளையும், செயல் திட்டங்களையும் உருவாக்க வேண்டும் என்பதும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அரசியல் சாசனத்தில் சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை குறித்து பேசும் பிரிவுகளை தவிர 29, 30, 350கி ஆகிய பிரிவுகள் சிறுபான்மையினருக்கான உரிமைகளை குறித்து தனியாக கூறுகின்றன. பிரிவு 29(1) இந்தியாவில் எப்பகுதியில் வாழ்பவராக இருப்பினும் தனி மொழி ஒன்றை அல்லது எழுத்துமுறையை, தனிக் கலாச்சாரம் ஒன்றை பெற்றிருக்கும் சமூகத்தினர் அம்மொழி, எழுத்து, கலாச்சாரம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் அரசியலமைப்பு சட்ட உரிமையைப் பெற்றுள்ளார்கள் என்று கூறுகிறது. மேலும், அரசு அதன் கல்விக் கூடங்களிலும், அரசின் உதவி பெற்று நடத்தப்படுகின்ற கல்விச் சாலைகளிலும் எந்தவொரு குடிமகனும் மதம், இனம், சாதி, மொழி அல்லது ஏதேனும் ஒன்றினால் கல்வி பெறும் வாய்ப்பை இழக்க முடியாதபடி அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு 29 (2) வகை செய்கிறது. பிரிவு 30, மொழி மற்றும் மத அடிப்படையிலான எல்லா வகையான சிறுபான்மையினருக்கும் அவர்கள் விருப்பப்படி கல்வி கூடங்கள் ஏற்படுத்துவதற்கும், நிர்வகிப்பதற்கும் உரிமை வழங்குகிறது. இந்த பிரிவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை பின்னர் பார்ப்போம். பிரிவு 350கி மொழி சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தாய் மொழியில் அடிப்படை கல்வியை வழங்குவதற்கு அரசு எடுக்க வேண்டிய முயற்சிகளை குறித்து கூறுகிறது.
இந்திய அரசியல் நிர்ணய அவையும், சிறுபான்மை உரிமைகள் குறித்த விவாதமும்
இந்திய அரசியல் நிர்ணய அவையில் சிறுபான்மை உரிமைகள் குறித்த விவாதமும், இந்திய பிரிவினை எவ்வாறு அதில் தாக்கம் செலுத்தியது என்பதும் ஆய்வுக்குரியதாகும்.
இந்திய அரசியல் நிர்ணய அவையில் 292 உறுப்பினர்களை மாகாண சட்டமியற்றும் அவைகளிலிருந்தும் (Provincial Legislative Assemblies) 93 பேர் இந்தியாவில் இருந்த குறுநில அரசுகளின் பிரதிநிதிகளாகவும், 4 பேர் தலைமை ஆணையரின் (Chief Commissioner) மாகாணங்களின் பிரதிநிதிகளாகவும் இருந்தனர். இவற்றில் பிரிவினைக்கு பிறகு பல மாகாணங்கள் கலைந்து மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 389இல் இருந்து 299 ஆக குறைந்தது. 1946 டிசம்பர் 9-ம் தேதி டெல்லியில் நடந்த முதல் கூட்டத்தில் பங்கேற்ற 210 உறுப்பினர்களில் 155 பேர் இந்துக்களும், 4 பேர் மட்டுமே முஸ்லிம்களும், அட்டவணை சாதியினர் 31 பேரும், கிறிஸ்தவர்கள் ஐந்து பேரும், பிற்படுத்த வகுப்பினர் ஆறு பேரும், சீக்கியர்கள் நான்கு பேரும், ஆங்கிலோ- – இந்தியன் மூன்று பேரும், பார்சிகள் மூன்று பேரும் பிரதிநிதிகளாக இருந்தனர்.
அரசியல் நிர்ணய அவையில் ஜவஹர்லால் நேரு முன்வைத்த தீர்மான வரைவின் மீது தான் சிறுபான்மையினருக்கான உரிமைகள் குறித்த விவாதம் துவங்கியது. 1946 டிசம்பர் 13ல் தாக்கல் செய்யப்பட்ட இந்த தீர்மானத்தில் சிறுபான்மையினரின் நலன்களை பாதுகாப்பது அரசியல் சாசனத்தின் நோக்கங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டது. அதன் பிறகு அரசியல் நிர்ணய அவை அடிப்படை உரிமைகளுக்கும், சிறுபான்மையினரின் உரிமைகளுக்குமாக சர்தார் வல்லபாய் படேலின் தலைமையில் ஒரு ஆலோசனை குழுவையும், அதன் கீழ் சிறுபான்மையினரின் உரிமைக்காக ஒரு துணை குழுவையும் நியமித்தது. இந்த துணை குழு சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்து ஒரு கேள்வி- – பதில் அறிக்கையை தயாரித்தது.அதில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து பொதுவாகவும், அவர்களின் அரசியல், பொருளாதார, மத, கல்வி, கலாச்சார ரீதியான பாதுகாப்புகளை குறித்து தனியாகவும் கேள்விகள் இடம் பெற்றிருந்தன. இவ்வாறு துணைக் குழு மட்டத்தில், ஆலோசனை குழு மட்டத்தில், பின்னர் அரசியல் நிர்ணய அவையில் என மூன்றடுக்காக சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து விரிவான விவாதங்கள் நடந்தன.
அரசியல் சாசனத்தின் வரைவை தயாரித்த வேளையில் 292 – 301 வரையிலான 10 பிரிவுகளும் சிறுபான்மையினர் தொடர்பான சிறப்பு பிரிவுகள் என்ற நிலையில் இடம் பெற்றிருந்தன. மாநில சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் முஸ்லிம்கள், அட்டவணை சாதியினர், பழங்குடியினர், இந்திய கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு, பொது நியமனங்களில் இட ஒதுக்கீடு, சிறுபான்மையினருக்கான சிறப்பு அதிகாரிகள் நியமனம், சமூக மற்றும் கல்வி ரீதியான பின்தங்கியுள்ள பிரிவினரை குறித்து ஆராய்வதற்கான ஆணையம் முதலானவை இடம் பெற்றிருந்தன. ஆனால், இந்திய பிரிவினை அரசியல் நிர்ணய அவையில் தாக்கம் செலுத்தியதோடு சிறுபான்மையினரின் உரிமைகளும், பாதுகாப்பும் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகின.
முதலில் தனித்தொகுதி என்பது நிராகரிக்கப்பட்டது. பின்னர் சிறுபான்மையினருக்கு சட்டப் பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் இட ஒதுக்கீடும், வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடும் படிப்படியாக கைவிடப்பட்டன. இந்திய பிரிவினை அரசியல் நிர்ணய அவையின் உறுப்பினர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதோடு அரசியல் பிரதிநிதித்துவம், சமூக பொருளாதார பாதுகாப்பு முதலானவற்றை யெல்லாம் நீர்த்துப்போகச் செய்தது. வெறும் கல்வி மற்றும் பண்பாட்டு உரிமைகளாக சிறுபான்மையினரின் உரிமைகள் சுருக்கப்பட்டன.
இன்றும் சிறுபான்மை சமூகங்களின் சமூக, பொருளாதார, அரசியல் பிற்படுத்தப்பட்ட சூழலை குறித்து நடத்தப்பட்ட பல ஆய்வுகளின் முடிவுகளிலிருந்து அன்றைய விலக்கல்கள் ஏற்படுத்திய விளைவின் தீவிரத்தை புரிந்துகொள்ள முடியும். சிறுபான்மையினருக்கு சிறப்பு கவனம் அளித்து அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது, சமூக, பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்வது என்ற அரசியல் நிர்ணய அவையின் துவக்க கொள்கை படிப்படியாக நீர்த்துப்போய் அரசியல் சாசனம் இறுதி வடிவத்தை பெற்றபோது கைவிடப்பட்டதை காண முடியும்.
‘சிறுபான்மையினர்’ என்பதற்கான வரையறை
சர்வதேச அமைப்புகளும், உடன்படிக்கைகளும் ‘சிறுபான்மையினர்’ என்பதை குறித்து வரையறுக்காததைப் போலவே இந்திய அரசியல் சாசனமும் ‘சிறுபான்மையினர்’ என்பதற்கு ஒரு வரையறையையும் வழங்கவில்லை. மக்கள் தொகை அடிப்படையில் தான் வழக்கமாக சிறுபான்மையினர் அறியப் படுகிறார்கள். 1992-ம் ஆண்டு சிறுபான்மையினருக்கான தேசிய ஆணைய சட்டத்தில் கூறப்படுவது என்னவெனில் ‘சிறுபான்மையினர்’ என்பது மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 1993 அக்டோபர் 23-ல் மத்திய அரசு முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்சி ஆகிய பிரிவினரை சிறுபான்மையினர் என்று அறிவிக்கை வெளியிட்டது. அதுபோலவே மாநில சிறுபான்மை ஆணைய சட்டத்திற்கேற்ப மாநில அரசுகள் அந்தந்த மாநிலத்தின் சிறுபான்மையினரை நிச்சயிக்கலாம்.
சிறுபான்மையினர் என்பவர்கள் யார்? சிறுபான்மையினரை எவ்வாறு தீர்மானிக்கலாம்? ஆகிய கேள்விகளை முதன் முதலாக உச்சநீதிமன்றம் 1957ல் கேரள கல்வி மசோதா தொடர்பான வழக்கில் எதிர்கொண்டது. 1957ல் கேரள சட்டப்பேரவை கல்வி மசோதாவை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆளுநர் இந்த மசோதாவை குடியரசு தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பினார். குடியரசு தலைவர் இந்த மசோதாவின் சில ஷரத்துகளின் அரசியல் சாசன ஏற்புடைமை குறித்து சந்தேகத்தை வெளிப்படுத்தி உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்பினார்.
மக்கள் தொகையின் 50 சதவீதத்திற்கு குறைவான எண்ணிக்கையில் உள்ள பிரிவினரை சிறுபான்மையினர் என்று வரையறுக்கலாம் என்றால் அடுத்த கேள்வி அந்த 50 சதவீதம் என்பது இந்தியாவின் மக்கள் தொகையின் அடிப்படையிலா? மாநிலத்தின் மக்கள் தொகை அடிப்படையிலா? அந்த பிரதேசத்தின் மக்கள் தொகை அடிப்படையிலா? கேரள அரசு அந்த கல்வி நிறுவனம் நிலைப்பெற்றிருக்கும் பகுதியின் மக்கள் தொகை அடிப்படையில் வரையறுக்க வேண்டும் என்று வாதிட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியில் இந்த மசோதா கேரள மாநிலம் முழுமைக்கும் பொருந்தும் என்பதால் மாநில மக்கள் தொகையின் அடிப்படையில் சிறுபான்மையினரை நிர்ணயிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. கேரள கல்வி மசோதா தீர்ப்பிற்கு பிறகு உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் சிறுபான்மை அந்தஸ்து என்பதை மாநில அளவில் என்ற கொள்கையின் அடிப்படையிலேயே பின்பற்றின.
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் ஆரிய சமாஜத்தை பஞ்சாபில் சிறுபான்மையினராகவும், பாட்னா உயர்நீதிமன்றம் ஆரிய சமாஜத்தையும், பிரம்ம சமாஜத்தையும் சிறுபான்மையினராகவும் அறிவித்ததை உறுதி செய்தது. ஆனால், மத சிறுபான்மையினர் என்ற வரையறையில் ஒரு மதத்தின் உட்பிரிவுகளை உட்படுத்தலாமா? என்ற கேள்வி எஞ்சியுள்ளது. உச்சநீதிமன்றமும், பாட்னா உயர்நீதிமன்றமும் அளித்த தீர்ப்புகளுக்கு முரண்பட்டு டெல்லி உயர்நீதிமன்றம் ஆரிய சமாஜத்தை மத சிறுபான்மையினராக அங்கீகரிக்க இயலாது என்று தீர்ப்பளித்தது.
கல்வியும், இட ஒதுக்கீடு உரிமையும்
சிறுபான்மை உரிமைகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இரண்டு முக்கிய வழக்குகளில் ஒன்று டெல்லி ஸ்டீஃபன்ஸ் கல்லூரி வழக்கு, இன்னொன்று அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வழக்காகும். இரு வழக்குகளிலும் கிட்டத்தட்ட சமமாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் எடுத்த நிலைப்பாட்டின் அடிப்படையில் தான் இவ்வழக்குகளின் தீர்ப்புகள் கவனத்தை ஈர்த்தன. ஸ்டீஃபன்ஸ் கல்லூரி எதிர் டெல்லி பல்கலைக்கழக வழக்கில் செயின்ட் ஸ்டீஃபன்ஸ் கல்லூரி ஒரு சிறுபான்மை கல்வி நிறுவனமா? மாணவர்களை நுழைவுத் தேர்வில் மதிப்பெண்கள் மற்றும் அவர்களின் திறமையின் அடிப்படையில் சேர்க்க வேண்டும் என்ற டெல்லி பல்கலைக்கழகத்தின் கட்டளைகளை கடைப்பிடிக்க கல்லூரி கடமைப்பட்டுள்ளதா? தங்களுடைய சமுதாயத்திற்காக இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கு இந்த கல்லூரிக்கு உரிமை உள்ளதா? முதலான கேள்விகள் உச்சநீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.
செயின்ட் ஸ்டீஃபன்ஸ் கல்லூரியின் வரலாறு, சின்னம், குறிக்கோள், பிரார்த்தனை அறை, மத ரீதியான பயிற்சி, நிர்வாகம், முதல்வர் நியமனம் முதலான காரணிகளை பரிசீலித்து உச்சநீதிமன்றம், செயின்ட் ஸ்டீஃபன்ஸ் கல்லூரி ஒரு சிறுபான்மை கல்வி நிறுவனம் என்றும், டெல்லி பல்கலைக்கழகத்தில் இணைத்துக் கொண்டதன் காரணமாக அதன் சிறுபான்மை அந்தஸ்து இழக்கப்படாது என்றும் தீர்ப்பளித்தது. ஒருங்கிணைந்த மதிப்பெண் முறையை கடைப்பிடித்தால் கிறிஸ்தவ சமுதாயத்தில் பல மாணவர்களுக்கும் கல்லூரியில் சேரும் வாய்ப்பு மறுக்கப்படும் என்பதால் பல்கலைக்கழகத்தின் சுற்றறிக்கையை கடைப்பிடிப்பது கல்லூரிக்கு கடமை அல்ல என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த 50 சதவீத மாணவர்களை சேர்க்கவும் உச்சநீதிமன்றம் அனுமதித்தது.
ஆனால், உச்சநீதிமன்றத்தின் இந்த கண்டுபிடிப்புகளும், கருத்துக்களும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக விவகாரத்தில் நிகழவில்லை. அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சட்ட திருத்தங்களை குறித்து அஸீஸ் பாஷா உள்ளிட்ட மனுதாரர்கள் கேள்வி எழுப்பினர். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மை கல்வி நிறுவனம் என்றும் சட்டத்திருத்தங்கள் மூலம் புதிய நிர்வாக அமைப்புகளை உருவாக்குவது அரசியல் சாசனத்தின் பிரிவு 30 (1)ஐ மீறுவதாக அமையும் என்ற மனுதாரர்களின் வாதத்தை உச்சநீதிமன்றம் அங்கீகரிக்கவில்லை.
சிறுபான்மை கல்வி நிறுவனத்திற்கும், நிர்வாகத்திற்குமான உரிமை சிறுபான்மையினருக்கு கிடைக்க வேண்டுமென்றால் அது சிறுபான்மையினரால் நிறுவப்பட்டதாக இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தை நிறுவியது சிறுபான்மையினரல்லர்; அரசு தான் நிறுவியது என்ற விசித்திரமான கருத்தை உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியது. துவக்கத்தில் முஹம்மதன் ஆங்கிலோ இந்தியன் கல்லூரி நிறுவப்பட்டாலும், 1920ல் அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் சட்டத்தின் மூலம் அரசினால் தான் நிறுவப்பட்டது என்பது உச்சநீதிமன்றத்தின் கண்டுபிடிப்பு. 1920ல் சட்டத்தின் மூலம் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டதால் முஹம்மதன் – ஆங்கிலோ இந்தியன் கல்லூரி முஸ்லிம்களால் நிறுவப்பட்ட நிறுவனம் என்ற அந்தஸ்து இல்லாது போனதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டதன் வரலாற்றை உச்சநீதிமன்றம் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை அல்லது சரியான பொருளில் விளக்கவில்லை என்பதுதான் உண்மை. முஸ்லிம்கள் மத்தியில் மேற்கத்திய கல்வியை ஊக்குவிக்கவே சர் செய்யத் அஹ்மத் கான், முஹம்மதன் ஆங்கிலோ இந்தியன் கல்லூரியை நிறுவினார். கல்லூரியை நிறுவிய பிறகு அதனை ஒரு பல்கலைக்கழகமாக மாற்றுவதே அவரது நோக்கமாகும். முஸ்லிம் சமுதாயம் எவ்வாறு 30 லட்சம் ரூபாயை (அன்றைய மதிப்பில்) திரட்டி பல்கலைக்கழகத்தை நிறுவ அரசிடம் ஒப்படைத்தது? என்பது குறித்தெல்லாம் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் விரிவாக கூறுகிறது. 1920ல் பல்கலைக்கழகம் நிறுவும் சட்டத்தின் நோக்கமாக விவரிப்பது, அலிகரில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும் என்பதாகும்.
முஹம்மதன் ஆங்கிலோ இந்தியன் கல்லூரியை கலைத்து விட்டு சொசைட்டி மற்றும் முஸ்லிம் பல்கலைக்கழக அறக்கட்டளை கமிட்டியின் அனைத்து சொத்துக்களும், உரிமைகளும் பல்கலைக்கழகத்தின் நோக்கத்திற்காக ஒப்படைக்கவேண்டும் என்று சட்டத்தின் முன்னுரையில் கூறப்பட்டுள்ளது.முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி மேம்பாட்டுக்காக முஸ்லிம் சமுதாயமே நிறுவியதுதான் முஸ்லிம் பல்கலைக் கழகம் என்ற உண்மையை துரதிர்ஷ்டவசமாக உச்சநீதிமன்றம் கண்டுகொள்ள வில்லை. முஸ்லிம் பல்கலைக்கழகத்தை நிறுவுவதில் எந்தவொரு தடைகளும் இல்லாத போதும் அதற்கு முயற்சிக்காமல் புதியதொரு பல்கலைக்கழகத்தை நிறுவ முஸ்லிம் சமுதாயம் அரசிடம் கோரிக்கை விடுத்ததாக உச்சநீதிமன்றம் கூறியது உண்மைக்கு புறம்பானதாகும். உண்மையில், புதியதொரு பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு அவர்கள் கோரிக்கை விடுக்கவில்லை. மாறாக, அப்போதிருந்த முஹம்மதன் ஆங்கிலோ இந்தியன் கல்லூரியை முஸ்லிம் பல்கலைக்கழகமாக மாற்றம் செய்யவே கோரினார்கள். அதற்காக அரசு உத்தரவிட்ட 30 லட்சம் ரூபாய் தொகையை முதலீடாக செலுத்தவேண்டும் என்ற நிபந்தனையை முஸ்லிம் சமுதாயம் நிறைவேற்றியது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கடுமையான விமர்சனங்களை பெற்றுத்தந்தது. பி.வி. சீர்வை போன்ற அரசியலமைப்புச் சட்ட நிபுணர்கள் கடுமையான வார்த்தைகளால் தீர்ப்பை விமர்சித்தனர். முஸ்லிம் சமுதாயம் போராட்டத்தில் இறங்கியது. இறுதியில் அன்றைய அரசு 1972, 1981 வருடங்களில் சட்டத்திருத்தங்கள் மூலம் அலிகர் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்தை மீண்டும் நிறுவ முயற்சித்தது.
2005-06 வருடத்தில் மருத்துவ பட்டமேற்படிப்பு படிப்புகளில் 50 சதவீத இடங்களை முஸ்லிம்களுக்காக ஒதுக்கவேண்டும் என்ற பல்கலைக்கழகத்தின் தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.டாக்டர் நரேஷ் அகர்வால் எதிர் யூனியன் ஆஃப் இந்தியா என்ற இந்த வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்த சட்டத்திருத்தங்களுக்கு பிறகும் அஸீஸ் பாஷா வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லும் என்றும் அலிகர் பல்கலைக்கழகத்திற்கு சிறுபான்மை அந்தஸ்துக்கான தகுதி கிடையாது என்றும் தீர்ப்பளித்தது.
அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பல்கலைக்கழகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. செயின்ட் ஸ்டீஃபன்ஸ் வழக்கில் கட்டிடம், சின்னம், பிரார்த்தனை அறை முதலானவற்றை யெல்லாம் பரிசீலித்த உச்ச நீதிமன்றம் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வெளிப்படையாக தெரிந்த முஸ்லிம் அடையாளங்களை புறக்கணித்தது. பல்கலைக் கழகத்தை நிறுவியது, சட்டத்தின் உத்தேச நோக்கங்கள், மதரீதியான பயிற்சி முதலான எத்தனையோ காரணிகள் சிறுபான்மை அந்தஸ்துக்கு அனுகூலமாக இருந்தன. ஆனால், உண்மைக்கு புறம்பான விளக்கங்கள் மூலம் உச்சநீதிமன்றம் விபரீத திசையை நோக்கி நகர்ந்தது என்பது இந்திய ஜனநாயகத்தின் பண்பட்ட தன்மைக்கு இணக்கமாக இல்லை என்றே கூறவேண்டும்.
சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் சிறுபான்மை அந்தஸ்தை தீர்மானிப்பது மக்கள் தொகையின் அடிப்படையில் அல்ல. சமூகத்தில் ஒரு பிரிவினரின் தனித்துவம் மற்றும் சமூகத்தில் அவர்களுக்கான சார்புத்தன்மை யையும் பொறுத்தே தீர்மானிக்கப்படும்.பெருமான்மை யினரின் ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு தனித்துவம் வாய்ந்த பிரிவினரே சிறுபான்மையினர் ஆவர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்தியாவின் உச்சநீதிமன்றம் இந்த சட்டக் கோட்பாட்டின் புதிய விளக்கங் களையும், முன்னேற்றத்தையும் இதுவரை கவனத்தில் கொள்ள வேயில்லை.
‘‘தேசியத்தின் பெரும்பான்மை விளக்கத்தை அங்கீகரித்து தங்களின் மதம், மொழி, கலாச்சாரம் மற்றும் தங்களின் அனைத்து வேறுபாடுகளையும் கைவிடும் வரை அவர்கள் தேசத்தோடு நல்லிணக்கத்தை பேணினாலும், இல்லாவிட்டாலும் அவர்கள் வெளிநாட்டினரே” என்று இந்திய தேசியத்தை இந்து தேசியமாக வரையறுப்பவர்கள் விளக்கமளிக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ்.ஸின் இரண்டாவது சர்சங்க் சாலக்கும், அந்த அமைப்பின் சித்தாந்தவாதியுமான எம்.எஸ்.கோல்வால்கரின் ‘‘We or Our Nationhood defined” (நாம் அல்லது நமது தேசியம்) என்ற 1939ல் வெளியிட்ட புத்தகத்தில் இந்த கருத்தை காணமுடியும்.
இந்து தேசியவாதத்தை இந்திய தேசியமாக வரையறுப்பதும், அதற்கு அரசின் அங்கீகாரமும் கிடைக்கும் இக்காலக்கட்டத்தில் பன்முகத்தன்மையையும், சிறுபான்மை உரிமைகளையும் பாதுகாப்பதே பெரிய சவாலாகும். இன்று சிறுபான்மை முஸ்லிம்களின் தனித்துவமான பண்பாடு, அடையாளம், இருப்பு, நிலைத்த வாழ்வு முதலானவை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி அவர்களை பெரும்பான்மை தேசியவாதத்தில் உட்கிரகிக்கும் முயற்சிக்கு சங்பரிவார் அரசு வித்திடுகிறது. இது இந்திய ஜனநாயகத்தை இருண்ட காலத்தை நோக்கியே அழைத்துச் செல்லும் என்பது மறுக்க முடியாத உண்மை.