“அரசு அலுவலர்கள் எங்கள் செருப்புகளை தூக்கவே இருக்கிறார்கள்” சர்ச்சை கருத்தை தெரிவித்து விட்டு மன்னிப்புக் கோரிய உமா பாரதி.!

பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவருமான உமா பாரதி அரசு அலுவலர்களின் நிலைபற்றி பேசிய காணொளியால் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

கடந்த சனிக்கிழமை போபாலில் தமது இல்லத்தில் பிற்படுத்தப்பட்டோர் மகாசபாவைச் சேர்ந்த குழுவினரை சந்தித்தார். அப்போது உமா பாரதியிடம் ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது, தனியார் துறைகளில் ஜாதிவாரி இடஒதுக்கீடு உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை அந்த குழுவினர் விடுத்தனர். தங்களுடைய கோரிக்கைகளை ஆளும் பா.ஜ.க அரசு நிறைவேற்ற மறுத்தால், மாநில அளவில் போராட்டம் நடத்தப்போவதாகவும் அந்த குழுவினர் எச்சரித்திருந்தனர்.

அப்போது அவர்களிடையே உமாபாரதி பேசும் காணொளி தான் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதில் “உங்களுக்கு தெரியுமா? அரசுப்பணித்துறை என்பது ஒன்றுமே இல்லை. அது எங்களது செருப்புகளை எடுக்க உள்ளது. அவர்கள் எங்கள் செருப்புகளை எடுக்கிறார்கள். நாங்கள் அதற்கு மட்டுமே ஒப்புக்கொண்டோம்” என்று பேசியிருந்தார். மேலும், “அரசு அதிகாரிகள் தலைவர்களைக் கட்டுபடுத்துவதாக நினைக்கிறீர்களா? இல்லை, முதலில் அவர்கள் தனிப்பட்ட முறையில் பேசுவார்கள். அதன்பின்னரே, அதிகாரிகள் கோப்புகள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். நான் 11 ஆண்டுகாலம் ஒன்றிய அமைச்சராக இருந்துள்ளேன். முதலமைச்சராகவும் இருந்துள்ளேன். நாங்கள் முதலில் அதிகாரிகளோடு பேசுவோம் பின்னரே கோப்புகள் நகரும்.” என்றும் தெரிவித்திருந்தார்.

உமா பாரதியின் இந்த பேச்சு மத்திய பிரதேசத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் அரசு அதிகாரிகள் மத்தியில் கடும் கோபத்தை எழுப்பியது பலர் தங்களுடைய கண்டனங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இவரது கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடும் கண்டனங்கள் எழுந்த வந்த நிலையில், டிவிட்டரில் “எதேச்சையாக வெளியிட்ட கருத்துகள் அவை என்று கூறி தாம் பயன்படுத்திய வார்த்தைகளுக்காக மன்னிப்பை வேண்டுகிறேன்” என மன்னிப்புக் கோரினார் உமா பாரதி.