அல்குர்ஆனின் தனிப்பெரும பண்புகள்

0

அல்குர்ஆனின் தனிப்பெரும பண்புகள்

  1. அனைவருக்கும் புரியும் வேதம்

அல்குர்ஆன் முழு மனித சமுதாயத்துக்கும் நேர்வழிகாட்ட வந்த இறைவேதம் ஆகும். எனவே அது மனிதர்களில் குறிப்பிட்ட சாராருக்கு மாத்திரம் விளங்க முடியுமான ஒரு நூலாக இருக்க முடியாது. உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்துடனும் உணர்வுடனும் பேசி அவனது உள்ளத்துக்கு ஒளியூட்டி சத்திய இஸ்லாத்தில் வாழ்வதற்கான வழிகாட்டலை வழங்கும் அல்குர்ஆன் எல்லா மனிதர்களாலும் இலகுவாக புரிந்துகொள்ளக் கூடிய அமைப்பில் உள்ளது. இது அல்குர்ஆனின் மற்றொரு தனிப்பண்பாகும். ஏனெனில் உலகில் வேறு எந்தவொரு நூலுக்கும் இவ்வியல்பு  இல்லை. சாதாரண மக்களுக்கு பொருத்தமான இலகுவான நூல்கள் அறிவுத்தரம் கூடிய மக்களுக்கு பொருத்தமற்றவையாகவும், தரம்வாய்ந்த உயர் சிந்தனைகளையும் தத்துவங்களையும் கொள்கைகளையும் பேசுகின்ற நூல்கள் சாதாரண மக்களால் புரிய முடியாத சிக்கலான அமைப்பிலும் காணப்படுகின்றன.

ஆனால் அல்குர்ஆன் அறிவுதத்தரம் குறைந்த ஒருவராலும் இலகுவாக புரிந்து கொள்ளக் கூடிய ஒரு நூலாக இருக்கும் அதேவேளை உயர்ந்த அறிவுத்தரம் மிக்க துறைசார் அறிஞர் ஒருவரையும் திருப்திப்படுத்துகின்ற தன்மையுடையதாகவும் இருக்கின்றது.

அல்குர்ஆனிய வசனங்களை எந்தப் பார்வையில் அணுகினாலும் அதற்கேற்ப புரிந்து கொள்ள முடியும். அதனை சாதாரணப் பார்வையில் புரிந்து கொள்ள முடியும் அதேவேளை அந்த வசனங்களை ஆழமாக விளங்கி ஆராய்ந்து புரிந்து கொள்ளவும் முடியும். உதாரணமாக ஒரு குர்ஆனிய வசனமான “நாம் பூமியை (வாழ்வதற்கு வசதியாக) தொட்டிலாக ஆக்கவில்லையா?” (அந்நபஉ : 6) என்ற வசனத்தை இரு நிலைகளில் புரிந்து கொள்ளலாம். மனிதன் வாழ்வதற்குப் பொருத்தமான எல்லா வசதிகளையும் அல்லாஹ் உலகில் ஏற்படுத்தியிருக்கிறான் என்று சாதாரணப் பார்வையில் ஒருவரால் இவ்வசனத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

அதேவேளை பூமியினுடைய அமைப்பை ஆராய்ந்து அது எந்தளவு நுணுக்கமாக சூரியனை விட்டும் ஒரு குறிப்பிட்ட தொலைவில் கோல் மண்டலத்தில் ஏனைய கோல்களுடன் மோதாமல் ஒரு சீரான வேகத்தில் நீள்வட்டப் பாதையில் பயணிக்கின்றது! இரவுப் பகல் ஒழுங்கு எவ்வளவு கணகச்சிதமாக மாறிமாறி வருகின்றது! பூமியை சூழ வளிமண்டலத்தை இறைவன் உருவாக்கி அதில் வாயுக்களை குறிப்பிட்ட வீதத்தில் சமநிலைப்படுத்தி புவியில் ஈர்ப்பு விசையை வைத்து பூமியில் பருவ காலங்களை ஏற்படுத்தி எவ்வளவு நுட்பமான முறையில் இறைவன் பூமியை மனிதனுக்கு வாழ்வதற்காக உருவாக்கியுள்ளான்! பூமியின் இருப்பிடத்திலிருந்து அது ஓர் அங்குலம் முன்பின் அசைந்தால் கூட முழுமொத்த பிரபஞ்ச ஒழுங்கும் நிலைகுலையும். வளிமண்டலத்திலுள்ள வாயுக்களின் வீதத்தில் ஒரு சிறிய ஏற்றத்தாழ்வு நிகழ்ந்தாலும் பூமி உயிர்வாழ முடியாத கோளாக மாறும். இவ்வாறு ஆழமான இந்த அல்குர்ஆனிய வசனத்தை புரிந்து கொள்ளவும் முடியும்.

குறிப்பிட்ட துறையுடன் தொடர்பான கலைச் சொற்கள் எதுவும் அதில் இல்லை. அவ்வாறு விஞ்ஞான, பொருளாதார, அரசியல் சார் கலைச் சொற்கள் இடம்பெற்றிருந்தால் பலருக்கு அல்குர்ஆனை புரிந்து கொள்ள முடியாது போயிருக்கும்.

அதேபோன்று அல்குர்ஆனில் இறுக்கமான, சிக்கலான வசன நடை எந்தவொரு இடத்திலும் கையாளப்படவில்லை. எல்லா வசனங்களும் எளிமையான வசன நடையில் அனைவராலும் புரிந்து கொள்ள முடியுமான அமைப்பில் உள்ளன.

அரபுமொழியை கற்கின்ற ஒருவருக்கு முதன்முதலில் இலகுவாக வாசிக்க முடியுமான நூலாக அல்குர்ஆனே காணப்படுகின்றது. பொதுவாக ஏனைய அரபு நூல்களை வாசிப்பதற்கு அரபு மொழியில் கொஞ்சம் கூடுதல் பரிட்சயம் அவசியமாகின்றது. அல்குர்ஆனை பொருத்தவரையில் அவ்வாறன்றி மிக எளிமையாக புரிந்து கொள்ள முடியுமான அரபுமொழியே அல்குர்ஆனிய மொழிநடையில் இருக்கின்றது.

அல்குர்ஆனே அதன் எளிமைத் தன்மையை பின்வருமாறு பறைசாற்றுகின்றது. “நிச்சயமாக நாம் அல்குர்ஆனை நினைவு கூர இலகுவாக (மொழிநடையில்) ஆக்கியிருக்கிறோம். எனவே நல்லுணர்வு பெறுவோர் உண்டா?” என ஸுரா கமரில் நான்கு இடங்களில் இவ்வசனம் திரும்பத் திரும்ப இடம்பெறுகின்றது.

மேலும் ஸுரா துகானின் 55வது வசனத்தில் “நிச்சயமாக நாம் (குர்ஆனாகிய) இதனை உமது மொழியில் இலகுவானதாக ஆக்கியிருக்கிறோம். சிலவேளை அவர்கள் (அதன் காரணமாக) நினைவு கூரலாம்” என அல்லாஹ் கூறுகின்றான்.

இந்த வகையில் அல்குர்ஆன் கொள்கைகளையும் சட்டங்களையும் பேசும் தத்துவ நூல்களைப் போன்று தெவிட்டுகின்ற மொழிநடையில் வெறும் கோட்பாடுகளையும் தத்துவங்களையும் மாத்திரம் விளக்காமல் வாசிப்பதற்கு ஆர்வம் ஏற்படுத்தும் விதத்தில் இனிமையான மொழிநடையில் அழகான உதாரணங்களுடனும் சிந்திக்கத் தோன்றும் வரலாற்று நிகழ்வுகளையும் கதைகளையும் உள்ளடக்கியதாகவும் அமைந்திருக்கின்றது. அதன் ஒவ்வொரு வசனமும் இடத்துக்கேற்ப பொருத்தமான நீளத்தில், பொருத்தமான தொனியில் உள்ளதால் எத்தனை தடவை வாசித்தாலும் ஒருபோதும் தெவிட்டாத ஒரு நூலாக அல்குர்ஆன் திகழ்கின்றது.

எனவே உலகில் எந்தவொரு நூலுக்கும் இல்லாத சிறப்பியல்பாக அல்குர்ஆனின் இலகுத் தன்மை எனும் பண்பு தனித்துவமாக விளங்குகின்றது.

தொடரும்.

Comments are closed.