ஆடை கலாச்சாரம்

ஆடை கலாச்சாரம்

ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக. (அல்குர்ஆன் 7: 26)
பழங்காலத்தில் பருவநிலை மாற்றங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவே மனிதன் ஆடைகளை அணிந்தான். மறைவான உறுப்புக்களை மறைக்க வேண்டும் என்பது அவர்களது நோக்கமல்ல. அரபிகளும் அவ்வாறு தான். அவர்களில் ஆண்களும், பெண்களும் புனித கஃபாவை நிர்வாணமாக சுற்றி வருவதை வழிபாடாகவே கருதி வந்தனர். நாகரீகமற்ற இந்த கலாச்சாரத்தை நோக்கித்தான் தற்போதைய உலகமும் பயணித்துக் கொண்டிருக்கிறது.
ஆடை, நாட்டின் கால நிலைக்கு ஏற்றவாறு அமைய வேண்டும்; அடிக்கடி மாறிக் கொண்டிருக்கும் ஃபேஷனுக்கு பொருத்தமாக இருக்க வேண்டும் ஆகிய இரண்டு காரணங்களை மட்டுமே பொதுவாக பலரும் ஆடைகளுக்கான அளவுகோல்களாக கூறுகின்றனர்.
எதார்த்தத்தில் மறைவான உறுப்புக்களை மறைப்பது என்பது முஸ்லிம்களின் ஆடையாக சுருங்கி, அதற்காக வாதிடுபவர்கள் தீவிரவாதிகளாக முத்திரைக்குத்தப்படும் சூழல் தான் நிலவுகிறது. அண்மைக்காலத்தில் உருவான பர்தா குறித்த விவாதங்களை கவனித்தால் இது உங்களுக்கு புலப்படும்.
நவீன காலக்கட்டத்தின் ஆடை ஒழுங்குகளை ஆராயும்போது காலநிலையைக் கூட பொருட்படுத்தாமல் இறுக்கமான ஆடைகளுக்கே முன்னுரிமை வழங்குவதை காண்கிறோம். ஃபேஷன் ஆடை தயாரிப்பாளர்கள் மற்றும் அதனை நுகர்வோர் ஆடையை அணிந்து கொண்டு அரை நிர்வாணமாக காட்சியளிப்பதற்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர். பெண்களின் மானத்தை கவர்ச்சிகரமான காட்சிப் பொருளாக்கி ஆடவர் கண்களுக்கு விருந்தாக்கும் வகையில் ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. பெண்களை அலங்கரித்து நுகர்வுப் பொருளாக மாற்றுவதில் சந்தை முதலாளிகள், போலியான மதச் சார்பற்ற வாதிகளின் பங்கு மிகப்பெரியது.இதன் காரணமாக பெண்ணின் உடல் சந்தையில் மிகப்பெரிய விற்பனைப் பொருளாக மாறியிருக்கிறது.
இங்குதான் பிரபஞ்சத்தின் பாதுகாவலன் அல்லாஹ்வின் கட்டளை முக்கியத்துவம் பெறுகிறது. ஆடைகள் என்பது உங்களுக்கு மானத்தை மறைப்பதற்கும், பாதுகாப்பளிக்கவும், அலங்காரத்திற்குமானது. ஆனால், ஆடையை அணிவதும், அழகுப்படுத்துவதும் அரை நிர்வாணமாக காட்சி தருவதற்கோ, ஆடைகளை அணிந்து கொண்டே பரஸ்பர கலந்துறவாடல்களில் இறையச்சத்திற்கு பொருந்தாத நடத்தைகளுக்கோ திசை மாறிவிடக் கூடாது.
மானத்தை மறைக்காமல் மறைவான உறுப்புக்களை வெளிப்படுத்துவது மனித குலத்திற்கு பொருந்தாத செயலாகவே நடைமுறையில் பலரும் ஒப்புக்கொள்கின்றனர். மானத்தை மறைப்பதற்கும், கண்ணியமான ஆளுமைத் தன்மைக்கும் ஆடை மிகவும் அவசியமாகும்.
ஆனால், அந்த ஆடைகளில் கூட துளைபோடுவது, கிழித்து விடுவது போன்றவை மனிதனை அவமானப்படுத்தும் மோசமான நடத்தைகளாகும்.அவற்றிலிருந்து ஒரு மனிதன் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கும் போதே கண்ணியமான ஆளுமையாக உருவாக முடியும். அதுதான் இறையச்சத்தின் ஆடை.
இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புடைய கோட்டை அணியும் ஆட்சியாளர் அதனை அரசு கஜானாவிலிருந்து எடுத்து செலவழித்தால் அல்லது அவரது கரத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் ரத்தக் கறைகள் படிந்து இருந்தால் உண்மையில் அந்த ஆட்சியாளர் நிர்வாணியாக மாறுகிறான்.
நாணம் (வெட்கம்) தான் சமூக மதிப்பீடுகளின் மிகப்பெரிய பாதுகாப்பு சுவர். அது தகர்ந்துவிட்டால் எல்லாமே தகர்ந்துவிடும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘மக்கள் இறைத்தூதர்களின் சொற்களிலிருந்து அடைந்து கொண்ட (அறிவுரைகளில்) ஒன்று தான் நீ வெட்கப்படவில்லை என்றால் விரும்பியதையெல்லாம் செய்து கொள் என்பதாகும்.” (நூல்: புகாரி)