ஆப்பிள் மொபைல்களில் அரசுகள் நிறுவும் பிகாசஸ் வைரஸ்

0

ஸ்பைவேர் எனப்படுவது ஒருவரது போனில் நிறுவப்பட்டதும் அவரது போனையே ஒரு உளவு கருவியாக மாற்றி விடும் மென்பொருள். அந்த போன்களின் காமிரா மூலம் சுற்றுபுறத்தை நோட்டமிடவும், அதில் உள்ள மைக் மூலம் சப்தங்களையும் உரையாடல்களையும் கேட்கவும், போனில் உரிமையாளர்களை குறித்து கிட்டத்தட்ட அனைத்து தகவல்களையும் திருடி அந்த ஸ்பைவேரை நிறுவியவருக்கு அனுப்பி வைக்கும் ஒருவகை வைரஸ்.

தற்போது ஐ போன்களின் அனைத்து மாடல்களும் பெகாசஸ் என்ற ஸ்பைவேரினால் பாதிக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது. இந்த பெகாசஸ் ஸ்பைவேர் இஸ்ரேலிய நிறுவனமான NSO Group நிறுவனத்தின் கண்டுபிடிப்பு. இந்நிறுவனம் Cyber War எனப்படும் கணினி போர் கருவிகளை (Software) தயாரிக்கும் நிறுவனமாகும். பெகாசஸ் ஸ்பைவேர் போன்ற தனது தயாரிப்புகளை பல கோடி ரூபாய்களுக்கு உலக அரசுகளிடம் இந்நிறுவனம் விற்றுவிடும். அரசாங்கங்கள் தங்களின் எதிரிகளையும் தங்கள் நாட்டில் உள்ள போராளிகள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், இன்னும் பிற மக்களை உளவு பார்க்க இந்த மென்பொருட்களை பயன்படுத்தும்.

பெகாசஸ் வெளிவந்த கதை:
ஐக்கிய அரபு அமீரகத்தின் பத்திரிகையாளர் ஒருவருக்கு வந்த sms மூலம் இந்த பெகாசஸ் ஸ்பைவேரின் இருப்பு உலகிற்கு தெரியவந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த பத்திரிகையாளரும், மனித உரிமை ஆர்வலரும், மனித உரிமைகளின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் மார்டின் என்னல்ஸ் விருது பெற்றவருமான அஹ்மெத் மன்சூர் என்பருக்கு ஒரு sms வந்துள்ளது. அந்த sms இல் அமீரக சிறைகளில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் கைதிகள் குறித்த ரகசிய தகவல்கள் என்று கூறி ஒரு லிங்க் ஒன்று அனுப்பப் பட்டுள்ளது.

புத்திசாலியான அஹமத் மன்சூர் அந்த லிங்கை பார்வையிடாமல் சிட்டிசன் லேப் என்ற மென்பொருள் ஆய்வு நிறுவனத்திற்கு அந்த smsஐ அனுப்பி வைத்துள்ளார். அதன் பின்னரே இத்தகைய ஸ்பைவேர் ஆப்பிள் போன்களில் உலாவுவது ஆப்பில் நிறுவனத்திற்கே தெரிய வந்துள்ளது. அதனை அடுத்து இந்த மென்பொருள் ஓட்டையை (Security Flaw) சரி செய்ய ஆப்பிள் நிறுவனம் பாதுகாப்பு மேம்பாட்டை (Security Update) அனைத்து ஆப்பிள் போன்களுக்கும் அனுப்பி வருகிறது.

பெகாசஸ் ஸ்பைவேரின் செயல்பாடு / பாதிப்புகள்:
பெகாசஸ் ஸ்பைவேரை ஒருவரது ஐ போனில் நிறுவ போனின் உரிமையாரை ஒரு லிங்கை திறக்க வைப்பது போதுமானது. அந்த லிங்கை திறந்ததும் ஸ்பைவேர் குறிப்பிட்ட போனை ஜெயில்பிரேக் செய்து தானாக தன்னை நிறுவிக்கொள்ளும். பின்னர் அந்த போனின் காமெரா, மைக், அழைப்புகள், SMS, வாட்ஸ்அப், மின்னஞ்சல், GPS, போனில் உள்ள தரவுகள் என அனைத்தையும் உளவு பார்க்கும்.

இதனால் கவலைகொள்ள வேண்டியவர்கள் யார்?
என்னுடைய வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்று கூற விரும்பாத ஐ போன் பயன்படுத்தும் அனைவரும் இந்த ஸ்பைவேர் குறித்து கவலைகொள்ள வேண்டும். பெகாசஸ் அரசாங்கத்திற்கு மட்டுமே விற்கப்படும் ஸ்பைவேர் என்றாலும் கூட தங்களை குறித்த அந்தரங்கங்கள் பிறர் பார்வைக்கு செல்லக் கூடாது என்று நினைப்பவர்கள் இது குறித்து கவலைகொள்ள வேண்டும்.

இதில் இருந்து பாதுகாப்பு பெறுவது எப்படி?
தற்போது ஆப்பிள் நிறுவனம் இந்த பாதுகாப்பு ஓட்டையை சரி செய்ய தங்கள் தரப்பில் இருந்தே மென்பொருள் பாதுகாப்பு மேம்பாட்டை (Software Security Update) வழங்குகிறது. அதனை பயன்படுத்திக்கொள்ள உங்களது ஐ போனில் Settings>General>Software Update சென்று மென்பொருளை அப்டேட் செய்து கொள்ளுங்கள்.

வெளிவராத இது போன்ற மற்ற தாக்குதல்களில் இருந்து உங்களை பாதுகாத்துகொள்ள சர்வதேச பாதுகாப்பு கவசமான “சந்தேகத்தை” பயன்படுத்துக்கங்கள். நமக்கு அறிமுகமில்லாத எவரிடம் இருந்தும் பெறப்படும் இது போன்ற லிங்குகளை திறக்காதீர்கள். நமக்கு நன்கு அறிமுகமான / குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து பெரும் லிங்குகளை அவரிடம் ஒரு முறையேனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறுதிபடுத்திக் கொண்டு பார்வையிடுங்கள். இலவசமாக கிடைக்கும் எதையும் நம்பாதீர்கள். அதற்காக பின்னாளில் நீங்கள் கொடுக்க வேண்டிய விலை அதிகமாக இருக்க நேரிடும்.

Comments are closed.