ஆமாம், நான் மோடி பக்தன் தான்: தணிக்கை குழு தலைவர் பஹ்லஜ் நிஹாலனி

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்த பின் நாட்டின் முக்கிய பொறுப்புகளில் தங்கள் ஆதரவாளர்களை நியமித்தது. அந்த வகையில் திரைப்பட தணிக்கை குழு தலைவராக பஹ்லஜ் நிஹாலனி நியமிக்கப்பட்டார். இவர் இந்த பதவிக்கு நியமனம் செய்யும் போதே பெரும் சர்ச்சை உண்டானது. தற்பொழுது வெளியாக காத்திருக்கும் உட்தா பஞ்சாப் என்கிற திரைப்படத்தை தணிக்கை செய்வதை ஒட்டி எழுந்த சர்ச்சையில் பஹ்லஜ் நிஹாலனி தான் ஒரு பா.ஜ.க ஆதரவாளர் தான் என்றும் மோடியின் பக்தன் என்றும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குனர் அனுராக் கஷ்யப் தயாரித்துள்ள உட்தா பஞ்சாப் என்கிற திரைப்படத்தில் 89 காட்சிகளை வெட்டியுள்ளது திரைப்பட தணிக்கைத்துறை. இன்னும் திரைபப்டத்தின் பெயரில் இருந்து பஞ்சாப் என்கிற வார்த்தையையும் நீக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது தான் இந்த சர்ச்சைக்கு காரணம்.

இந்த சர்ச்சை குறித்து தனியார் தொலைகாட்சி சானல் ஒன்றிற்கு பேட்டியளிக்கையில் பா.ஜ.க உடனான தனது ஆதரவு நிலையை பஹ்லஜ் நிஹாலனி வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் இந்த திரைப்பட தயாரிப்பாளர் அனுராக் கஷயப் தனக்கு எதிராக மும்பை உயர்நீதி மன்றத்தை நாடியிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று அவர் கூறியுள்ளார்.