இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – பா.ஜ.க நிர்வாகி லலிதா குமாரமங்கலம்

நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பா.ஜ.க நிர்வாகிகளுள் ஒருவரான லலிதா குமாரமங்கலம் தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற மகளிர் சங்கம விழா ஒன்றில் பேசிய பொழுது இதனை அவர் தெரிவித்தார்.

தேசிய மகளிர் ஆணைய தலைவரான லலிதா குமாரமங்கலம் பா.ஜ.க. வின் முக்கிய நிர்வாகிகளுள் ஒருவராவர். அவர் சார்ந்த கட்சியான பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும் போதே விழாவில் அவர் இவ்வாறு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் கூறியதாவது, “நம் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என நான் பேசியது குறித்து கேட்கிறீர்கள். பொதுவாக நாட்டில் தனியாக நடக்கக்கூட பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. அதை வைத்துதான் நான் பேசினேன். தமிழகம், டெல்லி, ஹரியானா என சில இடங்களை குறிப்பிட்டு சொல்ல முடியாதபடி, நாடு முழுவதும் பரவலாக பெண்கள் மீதான வன்முறைகள் தடுக்கப்பட வேண்டும். அதற்காக நிறைய விழிப்புணர்வு நடவடிக்கைகள் நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. அதேபோல் சமுதாயத்திலும் மாற்றங்கள் வர வேண்டி இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

பா.ஜ.க ஆட்சியில் இருந்தாலும் நாட்டின் யதார்த்தத்தை கூற வேண்டிய நெருக்கடியான நிலையில் லலிதா குமாரமங்கலம் தள்ளப்பட்டு இருக்கிறார் என்றே கூற வேண்டும்