இந்தியா 2047 திட்ட ஆவணம் வெளியீடு

0

இந்தியா 2047: மக்களை வலிமைப்படுத்தல்’ என்ற வரலாற்று சிறப்பு மிக்க திட்ட ஆவணம் புது டெல்லியில் வெளியிடப்பட்டது. இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை ஒட்டி தலைநகரில் எம்பவர் இந்தியா ஃபவுண்டேஷன் அமைப்பு நடத்திய விழாவில் ஆகஸ்ட் 15 அன்று இத்திட்டம் வெளியிடப்பட்டது. முன்னாள் டெல்லி உயர்நீதி மன்ற நீதிபதி ராஜேந்தர் சச்சார் இத்திட்டத்தை வெளியிட்டார்.
சச்சார் கமிட்டி மதிப்பீடு கமிட்டியின் தலைவர் பேராசியர் அமிதாப் குண்டு சிறப்புரையாற்றினார். 250 பக்க ஆணவத்தை வெளியட்ட நீதிபதி ராஜேந்திர சச்சார், ‘இந்தியாவில் முஸ்லிம்கள் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட மக்களை வலிமைப்படுத்துவதற்கான கருவியாக இந்தியா 2047 திட்டம் இருக்கும்’ என்று தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். ‘சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு அவர்களுக்கு சம வாய்ப்புகள் வழங்கும் ஒரு தேசத்தைதான் நாகரிக தேசம் என்று அழைக்க முடியும் என்றும் தெரிவித்தார். தனது சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளின் குறிப்பிடப்பட்ட சம வாய்ப்பு கமிஷனுக்கான ஒப்புதலை முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வழங்கிய பின்னும் அது செயல்படுத்தப்படாமல் இருப்பது குறித்து தனது கவலையை அவர் வெளியிட்டார்.
முஸ்லிம்கள் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு இத்திட்டம் வழிவகுக்கும் என்று கூறிய முஸ்லிம் தனியார் சட்ட வாரிய பொதுச் செயலாளர் மௌலானா வலி ரஹ்மானி, இன்றைய நிகழ்ச்சியை ஒரு விடியலுக்கான தொடக்கம் என்று வர்ணித்தார்.
‘சமூக நீதியை கேள்விக்குறியாக்கி மேற்கொள்ளப்படும் வளர்ச்சியும் முன்னேற்றமும் மிகப் பெரிய சவாலாகும். இந்தியாவில் செல்வந்தர்களுக்கும் ஒதுக்கப்பட்டவர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த சமநிலையற்ற வளர்ச்சியால் முஸ்லிம்கள், தலித்கள் மற்றும் ஆதிவாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்று எம்பவர் இந்தியா ஃபவுண்டேஷனின் தலைவர் இ.எம்.அப்துல் ரஹ்மான் தெரிவித்தார். ‘வலிமையான இந்தியாவே நமது கனவு. குடிமக்களின் வலிமைதான் ஒரு நாட்டின் உண்மையான வலிமை. அனைத்து தரப்பு மக்களும் முன்னேற்றம் அடையாதவரை நமது நாட்டின் வளர்ச்சி குறையுள்ளதாகவே இருக்கும்’ என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இத்திட்டம் கடந்து வந்த பாதையை எம்பவர் இந்தியா ஃபவுண்டேஷனின் செயலாளர் முகம்மது ராஃபி விளக்கினார். நவம்பர் 2013ல் இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டதாக தெரிவித்த அவர், ஆறு தேசிய கருத்தரங்குகள், இந்தியாவின் பதினைந்து மாநிலங்களில் ஐம்பதிற்கும் மேற்பட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அதன் பின்னரே இத்திட்டம் வரைவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
திட்டம் குறித்த சுருக்கமான அறிமுகத்தை திட்ட ஆவணத்தின் எடிட்டர் பேராசிரியர் பி.கோயா வழங்கினார். நாடு முழுவதும் இருந்து பல்வேறு துறைகளை சார்ந்த ஏறத்தாழ நூறு நபர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Comments are closed.