இந்திய சுதந்திர போரில் மத்ரஸாகள், மௌலவிகள்

 – செ.திவான்

அகிலத்தில் வரலாற்றினை நிலைநாட்டிய மாமனிதர்கள் அச்சரித்திரத்தின் கதையைக் கூற முடியாது போவது துரதிருஷ்டவசமானதாகும்.

இந்திய முஸ்லிம்களின் சரிதை மிக மிகத் தப்பான எண்ணத்தோடுதான் சொல்லப்படுகிறது; வரையப்படுகிறது; சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

வகுப்புவாத நோக்கங்களாலும், அரசியல் குரோதங்களாலும் பாதிக்கப்படாத ஆதாரப்பூர்வமான சரித்திர நூல்கள் இல்லாமையினால் தப்பு அபிப்பிரõயங்கள் தோன்றுவதற்கு ஏதுவாக இருந்திருக்கிறது; இன்றளவும் அந்த நிலையே

நீடித்து வருகிறது.

முகலாயசக்கரவர்த்தி ஆலம்கீர் ஔரங்கஜேப் (16181707) மறைவிற்குப்பிறகு இந்தியாவில் மகாராஷ்டிரர்கள், ஜாட் இனத்தினர், இன்னபிற சமூகத்தினர் பேராசைக்கு இலக்காயினர். பலவித நோக்கங்களினால் தூண்டப்பட்டனர். வணிகக் கொடி பிடித்து வஞ்சக வலைவிரித்து, வளமார்ந்த திருநாட்டை, வேறுபாடுகளை உருவாக்கி வளைத்துக் கொண்டது வெள்ளை ஏகாதிபத்தியம்.

முஸ்லிம் சக்கரவர்த்தியின் சேவகர்களாக வங்காளத்தில் காலடி வைப்பதற்கு இடங்கேட்டு பெற்றுக் கொண்ட இங்கிலாந்து தேசத்தவர் இரக்கம் காட்டாது இருந்ததுமல்லாமல், தங்களது எஜமானர்களான முஸ்லிம் அரசர்களை மிதித்துத் தள்ளினார்கள்.

ஆளும் வர்க்கத்தினரான முஸ்லிம்களின் அரசியல் அழிவினை, ஆங்கிலேயர்கள் தங்களது ஆக்கிரமிப்பினால், ஆட்சிக்குரிய வித்தினை விதைத்தார்கள். அது வளர்ந்தது; விருட்சமானது. இராணுவ பலத்தினால் முக்கிய இடங்களைப் பெற்றுக் கொண்ட வணிகக் கும்பலின் யுத்தக் கொடுமைகளினாலும் சைன்யங்களின் சேட்டைகளினாலும் சீர்கேடான ஆட்சி முறையினாலும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதனை எதிர்த்து நாடெங்கும் உரிமைப் போர் எழுந்தது. இந்திய சுதந்திரப் போரில் மதரஸாக்கள், மௌலவிகள் ஆற்றிய பங்கு மகத்தானது.

அகிலத்திற்கோர் அருட்கொடையாகத் தோன்றிய அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே மதீனாவில் முதல் அரபிக்

கலாசாலை உருவானது. பெருமானார் (ஸல்) அவர்கள் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களை மதீனா மக்களுக்கு இஸ்லாத்தை போதிப்பதற்கும் திருக்குர்ஆனை கற்றுக் கொடுத்திடவும் அனுப்பி வைத்தார்கள். (அல்பாக்கியத்துஸ் ஸாலிஹாத்தின் அழகிய சரிதை 1930, மௌலவி ஜியாவுத்தீன் முஹம்மது ஸாஹிப், பக்கம் 15).

இந்தியாவில் 1170 ஆண்டுகளுக்கு மேலாக 231 முஸ்லிம் மன்னர்களின் ஆட்சி நடைபெற்றுள்ளது.

பாமினி இராஜ்யம், 170 ஆண்டுகள், 17 மன்னர்கள்

மால்வா இராஜ்யம், 130 ஆண்டுகள், 7 அரசர்கள்

முகலாயர் இரõஜ்யம் 331 ஆண்டுகள், 17 அரசர்கள்

குஜராத், 136 ஆண்டுகள், 9 மன்னர்கள்

பீஜப்பூர், 127 ஆண்டுகள், 9 இராஜாக்கள்

கோல்கொண்டா, 109 ஆண்டுகள், 8 நவாபுகள்

அஹ்மது நகர், 196 ஆண்டுகள், 14 சுல்தான்கள்

பெரார், 8 ஆண்டுகள், 4 அரசர்கள்

பிதார், 135 ஆண்டுகள், 12 மன்னர்கள்

அவுத், 35 ஆண்டுகள், 12 நவாபுகள்

ஹைதராபாத், 230 ஆண்டுகள், 12 நிஜாம்கள்

வங்காளம், 67 ஆண்டுகள், 10 தவ்லாக்கள்

மைசூர், 22 ஆண்டுகள், 2 சுல்தான்கள்

ஆற்காடு, 135 ஆண்டுகள், 12 நவாபுகள்

இவர்களின் ஆட்சியின்போது அமைக்கப்பட்ட மாளிகைகள், கட்டிடங்கள் ஏராளம், ஏராளம்!

ஆனால், உருவாக்கப்பட்ட இஸ்லாமிய கலாசாலைகள், மதரஸாக்கள் மிகக் குறைவுதான்.

துக்கள் வம்ச ஆட்சியின்போது முஹம்மது பின் துக்ளக் (13241351) இஸ்லாமிய உலமாக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த செய்தியை Agha Mahdi Husain, Tughlq Dynasty எனும் நூலில் பக்கம் 612ல் உறுதிப்படுத்துகிறார். இக்காலக்கட்டத்தில் சில மதரஸாக்கள் இயங்கி இருக்கக்கூடும்.

முகலாய மன்னர் பாபர் ஆட்சியைத் (1526 – 1530) தொடர்ந்து அவரது புதல்வர் ஹுமாயூன், ஆட்சிக்காலம் (1530 – 1540) இரண்டாவது ஆட்சிக்காலம் (1545 – 1556). இவர் காலத்தில் டில்லியில் கல்விக் கூடங்கள் அமைத்தார். ஆக்ராவில் ஷெய்க் ஜைனுத்தீன் கவஃபி, தில்லியில் ஷெய்க் ஹுஸைன் நடத்திய இஸ்லாமியக் கல்லூரிகள் சிறப்பானது. முகலாயர் காலத்தில் மதரஸா கல்வியில் ஆக்ரா சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது.

மாமன்னர் அக்பர் (காலம் 1542 – 1605) ஆட்சி (1556 – 1605)

ஆட்சியில் ஷெய்க் ஆதம் போபால்வீ, முல்லா முபாரக் நிக்பூல் நிறுவிய கலாசாலைகள் புகழ் பெற்றிருந்தன. தனியார் உதவியோடு பள்ளிவாசலை அடுத்து மக்தப் (Mச்டுtச்ஞ) என்ற தொடக்கப்பள்ளிகள் இருந்தன. இங்கு வாசிக்க, எழுதிட மற்றும் திருக்குர்ஆன் கற்றுக் கொடுக்கப்பட்டன. பதேபூர் சிக்ரி, ஆக்ரா, டெல்லி என பல இடங்களில் மதரஸõக்கள் நிறுவப்பட்டன.

குவாஜா முயின் டெல்லியில் இஸ்லாமியக் கல்லூரியை நிறுவி, அங்கு இஸ்லாமிய மறைநூல் போதிக்கப்பட்டது. (Ashirbadilal Srivastava, The Mughal Empire 1526 – 1803 Agra 1952, page 216,217)

முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் (காலம் 1569 – 1627) ஆட்சி (1605 – 1627) காலத்தில் எல்லா நகரங்களிலும் மக்தப் எனும் மௌலவிகள் நடத்தும் பள்ளிக்கூடங்கள் இருந்தன என்று டெல்லா வல்லா  கூறியுள்ளதாக, ஏ.வெ. ஸ்ரீவத்ஸவா தனது முகலாயப் பேரரசு நூலில் பாகம் 2ல் குறிப்பிடுகிறார். (தமிழõக்கம் எம். எக்ஸ். மிராஸ்டா, பா.மாணிக்கவேலு, சென்னை, 1967, பக் 361).

ஔரங்கஜேப் ஆட்சிக்காலத்தில் டில்லி, ஆக்ரா, பதேபூர் சிக்ரி, லாகூர், லக்னோ, அலகாபாத், குவாலியர், ஷியால்கோட், அம்பாலா, ராமேஸ்வரம், காஷ்மீரம் போன்ற இடங்களில் இஸ்லாமிய கல்வி நிலையங்கள் இருந்தன. பல மௌலவிகள், இஸ்லாமியப் பேரறிஞர்கள் வாழ்ந்து வந்தனர்.

1857ல் இந்திய சுதந்திரப் பெரும்போர். நாடெங்கும் மக்களிடையே பேரெழுச்சி. இதனைக் கண்ட வெள்ளையர்கள் முஸ்லிம்களை கொன்று குவித்தனர். அவர்கள் இலாபகரமான தொழிலிலிருந்து விரட்டப்பட்டனர். முஸ்லிம்களது பள்ளிக்கூடங்கள், மத்ரஸாக்கள் பிரிட்டிஷாரால் அழிக்கப்பட்டன அல்லது கையகப்படுத்தப்பட்டன.

தரஸ்  கல்வி கற்றல்; கல்வி போதிக்கப்படும் இடம் மதரஸா. ஹமீது இபுராஹிம் என்ற இராமநாதபுரம் மீசலை சார்ந்த வள்ளல் களஞ்சியப் புலவர் தான் பாடிய இராஜநாயகத்தில் (ஹிஜ்ரி 1223), ‘இதுவெல்லாம் பனியிசுராயில் கூட்டத்தார்களுணர்ந்திவர்பால் வந்து.

மதிரசாவொன்று கட்டியுதவ நீரதின் மேவி உண்மைக்கல்வி முதிரவே…’

என்ற பாடல் வரியில் பனு இசுராயீல்கள் ஒரு குழுவாக திரண்டு வந்து சுலைமான் நபி (அலை) அவர்களிடம் தமது சமுதாய மக்கள் அனைவரும் கற்பதற்கு ஏற்ப கல்விக்கூடம் நிறுவ வேண்டும் என்று கோரியதாக கூறுகிறார். ஹிஜ்ரி 1231ல் பதுருத்தீன் புலவர் பாடிய முகியத்தீன் புராணத்திலும் மதுரஸா என்று மதரஸா பாடப்படுகிறது.

ஹிஜ்ரி 361ல் கெய்ரோவில் அல் அஸ்ஹர், பாக்தாத்தில் மதரஸா நிஜாமிய்யா, உத்தர பிரதேச தேவ் பந்தில் ஹஸ்ரத் ஹாஜி ஸய்யித் முஹம்மத் வலீத் சாஹிப் அவர்களால் துவங்கப்பட்ட தேவ் பந்த் மதரஸா, அதன் வளர்ச்சிக்கு உதவிய ஹஸ்ரத் மௌலான முஹம்மது காஸிம்,

சென்னையில் அண்ணா சாலையில் கி.பி. 1851ல் நவாப் குலாம் கெயிஸ் கான் நிறுவிய மத்ரஸா அஃஸம், வேலூர் பாக்கியத்துஸ்ஸõலிஹாத் மதரஸாவை நிறுவிய மௌலவி அப்துல் வஹ்ஹாப் (கி.பி. 1884) ஆகியன மார்க்கக் கல்விவை போதித்தன. 1857 புரட்சிக்குப்பின் சென்னை மத்ரஸா அஃஸம் பிரிட்டீஷ் பிடியில் சிக்கி ஆங்கில உயர்நிலைப்பள்ளியாகியது, இன்றைய பிரஸிடென்ஸி கல்லூரி அதுதான்.

மௌலவிகள் வீரமிகு உலமாக்கள் வெள்ளையரை எதிர்த்த வீர சரித்திரத்தின் பக்கங்கள் இதோ:

ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களின் 31வது வழித் தோன்றலாக ஹிஜ்ரி 1114ல் (கி.பி. 1703ல்) மௌலவி ஷாஹ் அப்துர் ரஹீம் ஸாஹிப் (ரஹ்) அவர்களின் தவப்புதல்வராக பிறந்தவர், முஹத்திஸ் ஷாஹ் அஹ்மது வலியுல்லாஹ் (ரஹ்).  இவர்களுக்கு நான்கு வயதான போது முகலாய மன்னர் ஔரங்கஜேப் மறைந்தார்.

1707 – 1787க்கும் இடையில் தில்லியை பத்து மன்னர்கள் ஆண்டனர். நால்வர் இயற்கை மரணம் அடைந்தனர். மற்றவர்கள் கிளர்ச்சிகளினால் கொல்லப்பட்டவர்கள். ஷாஹ் வலியுல்லாஹ் முஸ்லிம் மன்னர்களின் வீழ்ச்சியினைக் கவனித்து வந்தார்கள்.

ஆட்சியாளர்கள் இனத்திற்கு அப்பாற்பட்டு சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்றும்  பாதுகாப்பாக வலம் வரவும் சொத்துக்களை அனுபவிப்பதற்கும் நாட்டில் வாழும் அனைவரும் உரிமை படைத்தவர்கள் என்றும் பறைசாற்றிய ஷா வலியுல்லாஹ் ஹுஜ்ஜத் அல் பாலிகா எனும் அற்புதமான நூலைத் தந்தார்கள்.

ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களை ஏன் வெளியேற்ற வேண்டும் என்பதற்கான அடிப்படைகளை மாத்திரமல்ல, பிரெஞ்சுப் புரட்சிக்கான முன்னோடியாகவும் ஷா வலியுல்லாஹ்வின் சிந்தனைகள் இருந்தன என்று 18.01.2013 டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் எழுதிய அமரேஸ் மிஸ்ரா குறிப்பிடுகிறார்.

ஷா வலியுல்லாஹ் மறுமலர்ச்சியாளர் மரபின் தலைசிறந்த கலப்பற்ற ஆக்கப்பூர்வமான சிந்தனையாளராக விளங்குகிறார்.

தேசிய செல்வம் நியாயமாக, சமமாகப் பங்கிடப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்கூறி, அதைத் தொடர்ந்து சமுதாயம் ஒரு சரிவிகித நிலையில் அமைக்கப்பட வேண்டும் என்றும், எல்லா உற்பத்தியாளர்கட்கும் பாதுகாப்பும் சமுதாய உரிமைகளும் அளிக்கப்பட வேண்டும் என்றும் சொன்னார். இந்த நீதிகள் சமுதாயத்தில் பலருக்கு மறுக்கப்படும் போது ஒரு சமுதாயம் அழிவை நோக்கி நடைபோடும் என்றும் அவர் கூறினார்.

19ம் நூற்றாண்டில் பிரிட்டிஷாருக்கு எதிரான இயக்கங்களைத் தொடர்ச்சியாக அமைத்து, தலைமையேற்று நடத்திய மறுமலர்ச்சியாளர் குழுக்கள் அனைத்தையுமே ஊக்குவித்த தலை

சிறந்த சிந்தனையாளர் என ஷா வலியுல்லாவை எளிதாக இனங்காட்ட இயலும். (கே.எம். அஷ்ரஃப், முஸ்லிம் மறுமலர்ச்சியாளர்களும் 1857ம் ஆண்டு புரட்சியும்)

இந்தியாவின் சுதந்திரத்தைக் காத்திட கி.பி. 1731ம் ஆண்டு ஷா வலியுல்லாஹ் ஒரு திட்டத்தைத் தயாரித்தார். அவரது திட்டத்தை மதரசாக்கள் நிறைவேற்றி வந்தன.

G.N.Jalbani, Teachings of Shah Waliyullah of Delhi, 2nd edition, Lahore 1973

Khaliq Ahamed Nizami, Shah Waliyullah Dihlavi ke siyasi maktubat, Delhi 1969

இந்நூல்கள் ஷா வலியுல்லாஹ்வின் புகழ்பாடும் நூல்கள் ஆகும்.

டில்லியில் மத்ரசாஇரஹிம்யா இவரது தந்தையரால் துவங்கப்பட்டது. வலியுல்லாஹ் அங்கு பயின்றார். தனது 14வது வயதில் அங்கு பாடம் பயிற்றுவித்தார் ஷா வலியுல்லாஹ். இவரது மகனார் ஷா அப்துல் கலீல் தெஹ்லவி முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்த பிரிட்டிஷாரை எதிர்த்திட இந்தியாவை சுதந்திர நாடு என அப்பொழுதே பிரகடனம் செய்தார். (கி.பி. 1803)

“இஸ்லாம் இந்நாட்டில் அதிகாரத்தை இழந்து வணிகம், சுங்கவரி, பொருளாதாரம், குற்றவியல் தண்டனைகள் என அனைத்து துறைகளிலும் அதிகாரங்கள் கைமாறிவிட்டன. பள்ளிவாசல்கள் பல இடிக்கப்பட்டு விட்டன. கண்ணியமான மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் கூட அனுமதியின்றி தலைநகருக்குள் நுழைய முடியாத நிலை உருவாகிவிட்டது. ஜூம்ஆ, பெருநாள் போன்ற கூட்டுத் தொழுகைகளுக்கு எந்த நேரத்திலும் தடை வரலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

இத்தியாதி காரணங்களினால் ஆங்கிலேயர்களின் கைகளில் உள்ள இந்த நாட்டை இனி தாருல் ஹர்ப் (போர் அனுமதிக்கப்பட்ட நாடு) என்றே கருத வேண்டும் என்று மௌலவி ஷாஹ் அப்துல் அஜீஸ் (ரஹ்) (கி.பி. 1746 – 1824) தீர்ப்பளித்தார்கள். (ஃபதாவா அஸீஸிய்யா, பாகம் 1, பக்கம் 17 மேற்கோள் எம். ஷைக் அப்துல் காதிர் காஷிபி, காஸிமி, இந்திய விடுதலைப்போரில் வீரமிகு முஸ்லிம்கள், நூல் பக்கம், 29,30)

மௌலவி ஷாஹ் அப்துல் அஜீஸ் திருக்குர்ஆனை முதல் முதலாக உருது மொழியில் மொழியாக்கம் செய்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தைப் பெரும் மக்கள் எழுச்சி போராட்டமாக வடிவமைத்தார். அவர் வெளியிட்ட தாருல் ஹர்ப் ஃபத்வா, காலனி ஆதிக்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தை தொடங்கி வைத்தது.

அவரது மகனார் ஷாஹ் வலியுல்லாஹ் தெஹ்லவி, மௌலானா ஷாஹ் அப்துல் அஜீஸ், அவர்களின் குடும்ப ஆலிம்களான ஷாஹ் இஸ்மாயீல், ஷாஹ் யூசுஃப், மருமகனார் மௌலான அப்துல்லாஹ் உட்பட பல முக்கியமானவர்கள் வெள்ளையர் எதிர்ப்பு இயக்கத்தில் பங்கேற்றார்கள்.

மௌலானா செய்யிது அஹ்மது ஷஹீத் (கி.பி. 1786 – 1831) ஹஸன் (ரலி) வின் 35வது தலைமுறையில் உ.பி.யில் பரேலியில் பிறந்தவர்கள்.

நாட்டின் பல பாகங்களுக்குச் சென்று ஐம்பது பேர் கொண்ட குழுவினருடன் மக்களை சந்தித்தார்கள்.

வெள்ளையரை எதிர்த்து மறைமுகத் திட்டங்களில் செயல்பட்டார்கள். இதை உணர்ந்த பிரிட்டீஷார் சீக்கியர்களை தம் வசப்படுத்தி முஸ்லிம்களைக் கொன்று குவித்தனர். இதற்குப் பிறகு மௌலானா செய்யது அஹ்மது நேரடியாக ஆங்கிலேயரை எதிர்த்துப் போர்க்களம் கண்டார்.

தனது பல்லாயிரம் சீடர்களுடன் 900 சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் பெஷாவார் சென்று, வென்று இஸ்லாமிய ஆட்சியை நிறுவினார்கள். இவர்களது படையில் 80,000 வீரர்கள் இருந்தனர்.

பாலாக் கோட்டை முற்றுகையில் சீக்கியரை வளைத்தும், உள்ளூர்க்காரர்களுக்குப் பணம் தந்தும் வெள்ளையர்கள், தஹஜ்ஜுத் தொழுகை தொழுது கொண்டிருக்கையில் மௌலவி செய்யது அஹ்மதுவை வெட்டிச் சாய்த்தனர். இது நடந்து மே 5,1831ல்.

பாலாக்கோட்டை முற்றுகையில் செய்யது அஹ்மது வீழ்த்தப்பட்டபின் மௌலானா ஷாஹ் இஸ்மாயில் தலைமை தாங்கினார்கள். நான்கு நாட்கள் நடந்த போரில் 600 ஆலிம்கள் கொல்லப்பட்டனர். யுத்த களத்தில் ஷாஹ் முஹம்மது இஸ்மாயிலை சூழ்ந்து கொண்டு அவரைத் தலையில் வெட்டினார்கள். தலை வெட்டப்பட்ட நிலையிலும் தனது குறுவாளை தன்னை வெட்டியனை நோக்கிப் பாய்ச்சி அவனைக் கொன்றார்கள். மே 9 கி.பி. 1831ல் அவர்கள் இவ்வுலக வாழ்வை நிறைவு செய்தார்கள்.

மௌலான லியாகத் அலீ, மௌலானா இனாயத் அலீ, மௌலான நூருல்லாஹ், மௌலான மக்சூது அலி என ஒவ்வொருவராக தலைமையேற்று ஆங்கிலேயருக்கு எதிராக எழுபது தடவைகள் தாக்குதல் நடத்தி வெள்ளையரை திக்குமுக்காடச் செய்தார்கள்.

1857ல் ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப் போர் புரியுமாறு 34 உலமாக்கள் கையொப்பமிட்ட ஃபத்வா வெளியிடப்பட்டது. மௌலானா காசிம் நானõதோவி, மௌலானா ரஷித் அஹ்மத் கங்கோஹி, ஹாபிஸ் ஜமீன் ஷஹீத் உள்ளிட்டவர்கள் கையெழுத்திட்ட இந்த ஃபத்வா வெள்ளையர்களுக்கு எதிராக நாடு முழுவதும் ஒரு புத்தெழுச்சியை ஏற்படுத்தியது.

தானா பவனிலிருந்து போர் தொடங்கியது. பக்யேஷேர் அலி சாலை வழியாகச் சென்று கொண்டிருந்த பிரிட்டீஷ் கும்பினியர் தாக்குதலுக்குள்ளானார்கள். ஹாஜி இமாதுல்லாஹ் தலைமையில் 30 புரட்சியாளர்கள் தாக்குதலைத் தொடுத்தார்கள்.

வெள்ளைக்கார சிப்பாய் கொல்லப்பட்டார். பீரங்கி, ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது. மௌலானா அஹ்சன் மனாசிலி கீலானி ‘சவானே காஸிமி’ என்ற தனது நூலில் இந்த வீரமிகு வெற்றித் தாக்குதல் குறித்து விரிவாகவே எழுதியிருக்கிறார்கள்.

பின்னர், ஷம்லி கோட்டை முற்றுகை நடைபெற்றது.

மௌலானா காசிம் நானாதோவி, இமாம் ரப்பானி, மௌலானா ரஷீத் அஹமது, ஹாபிஸ் ஜமீன் ஆகியோர் இந்தப் போரில் முக்கியப் பங்களித்தார்கள். உலமாக்களின் வீரஞ் செறிந்த போராட்டம் பல நாட்கள் நடந்தது. இறுதியில் உலமாக்கள் வென்றார்கள். வெள்ளையரையும் வீழ்த்திட முடியும் என்பதற்கு இது எடுத்துக் காட்டாக அமைந்தது. பின்னர் பெரும்படையைத் திரட்டிக் கொண்டு வெள்ளையர் வந்தனர். ஷம்லி கோட்டை வீழ்ந்தது. எனினும் இறுதிவரை மௌலானா காசிம் நானாதோவி, மௌலானா ரஷீத் அஹ்மது கார்சோஹி, ஹாஜி இமாதுல்லாஹ் ஆகியோரை வெள்ளையர்களால் கைது செய்ய இயலவில்லை.

அவர்களது தலைக்கு பெரும் வெகுமதி அளிப்பதாகக் கூறியும் வெள்ளையர்களால் அவர்களை கைப்பற்ற முடியவில்லை. முஸ்லிம்கள் நாட்டின் விடுதலைக்காக ஆற்றிய பங்களிப்பில் தேவ்பந்தின் மௌலவிகள் ஆற்றிய அருஞ் சாதனைகளை அறிய ஐண்டூச்ட்டிஞி கீஞுதிடிதிச்டூ ஐண ஆணூடிtடிண்ட ஐணஞீடிச். ஈஞுணிஞச்ணஞீ, 18601900, ஆச்ணூஞச்ணூச்ஞீச்டூதூ Mஞுtஞிச்டூஞூ, Nஞுதீ ஒஞுணூண்ஞுதூ 1982ல் வெளியிட்ட 386 பக்கங்களைக் கொண்ட நூலை வாசித்தறியலாம்.

சரித்திரத்தில் தேர்ச்சி கொள் என்றான் பாரதி. சரித்திரத் தேர்ச்சி என்றால் தேச சரித்திரம் படித்துப் பரீட்சையில் தேர்ந்து விடுவதல்ல.

சங்க நூல்களிலும் பிற வரலாற்று நூல்களிலும் போலி ஆராய்ச்சிகள் செய்து இனப் பிளக்கையும், வகுப்புப் பிளக்கையும் மூட்டி விடுவதல்ல.

சரித்திரத் தேர்ச்சி என்றால் உண்மையான வரலாற்றை, மறைக்கப்பட்ட வரலாற்றை, மறக்கப்பட்ட வரலாற்றை, மறக்கச் செய்கின்ற வரலாற்றை வளரும் தலைமுறைக்கு நினைவுப்படுத்திட முயல வேண்டும்.

இந்திய விடுதலைப் போரில் வீரமீகு உலமாக்கள் ஆற்றிய பங்களிப்பைப் பற்றி ஆய்வு செய்து முழுமையாகவும், விரிவாகவும் தனி நூலே எழுதப்பட வேண்டும். அதுமட்டுமின்றி தமிழகத்திலும் மதரஸாக்களும் ஆலிம்களும் நாட்டு விடுதலைக்கு ஆற்றிய அருந்தியாகத்தையும் அகிலம் அறியச் செய்ய வேண்டும். அடுத்து வாய்ப்பு வரும்போது இன்னும் விரிவாகவே ஆராய்வோம். உண்மை வரலாறு பேணிப்பாதுகாக்கப்பட உறுதியெடுப்போம்.

(ஆகஸ்ட் 2015 இதழில் வெளியான கட்டுரை)