இந்திய முஸ்லிம்கள் செயல்திட்ட வடிவத்தை சுயமாக உருவாக்க வேண்டும்:பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் பேட்டி

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்பாடுகள், சமகால நிகழ்வுகள், இயக்கம் மீதான குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அதன் தேசிய தலைவர் கே.எம்.ஷரீஃப் அவர்கள் வழங்கிய பேட்டியின் தமிழõக்கத்தை வாசகர்களுக்கு வழங்குகிறோம்.

கேள்வி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள்.

நீங்கள் கர்நாடகாவை சேர்ந்தவர். புதிய பொதுச் செயலாளர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இயக்கத்தின் தலைமை கேரளாவிற்கு வெளியே நகருகிறதா? அதேசமயம் தேசிய செயற்குழுவில் இந்த மூன்று தென் மாநிலங்களுக்கு வெளியே இருந்து யாரையும் காண முடியவில்லை. பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பிரதிநிதித்துவம் கொண்ட இயக்கமாக மாறுவதற்கு இனியும் எவ்வளவு காலம் தேவைப்படும்?

பதில்: பாப்புலர் ஃப்ரண்ட் உட்புற ஜனநாயக கட்டமைப்பை கொண்டது. நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள்தான் தேசிய செயற்குழுவை தேர்வு செய்கின்றனர். ஜனநாயகரீதியாகவும், சுதந்திரமாகவும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தலில் 15 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தகுதியான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும்போது பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திலும் கவனம் செலுத்தப்படுகிறது.

201516ற்கு நடைபெற்ற தேர்தலில் தென் மாநிலங்களிலிருந்து மட்டுமல்லாமல், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரிலிருந்தும் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நமது தேசிய பொருளாளர் மணிப்பூரை சார்ந்தவர். அத்துடன் அனைத்து மாநிலங்களிலிருந்தும் கூடுதல் பிரதிநிதித்துவம் கொண்ட இயக்கமாக இனியும் பாப்புலர் ஃப்ரண்ட் வளர வேண்டியுள்ளது. வளர்ந்து கொண்டிருக்கிறது.

கேள்வி: தேசிய பொருளாளர் மணிப்பூரை சார்ந்தவர் என்பது சரிதான். இது பெயரளவில் மட்டும்தானே? வளர்ச்சியிலும், விரிவாக்கத்திலும் தென் இந்தியா வெகுதூரம் முன்னணியில் உள்ளது. தொலைதூர மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உருவாக்கப்பட்டு எட்டு வருடங்கள் ஆகிவிட்டது. பலரும் கூறுவது போல தெற்குவடக்கு வித்தியாசம் உள்ளதா? குறிப்பாக, வளர்ச்சி அங்கெல்லாம் சாத்தியமாகியுள்ளதா? இனியும் கடந்து செல்ல வேண்டிய தடைகள் உள்ளனவா?

பதில்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு தென்னிந்தியாவில்தான் பலம் அதிகம் என்பது சரிதான். ஆனால், அதன் பொருள் வட இந்தியாவில் முற்றிலும் பலம் இல்லை என்பது அல்ல. மேற்கு வங்கம், அஸ்ஸாம், பீகார், ஆந்திரா, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் இயக்கம் பெயரளவில் மட்டும் இருக்கவில்லை. இயக்கம் தீர்மானிப்பதை ஏற்றுக்கொண்டு மாநிலம் முழுவதும் அதனை நடைமுறைபடுத்தும் வகையில் வட இந்தியாவில் நாங்கள் வளர்ந்துள்ளோம்.

இவ்வருடம் பீகாரிலும், ஜார்க்கண்டிலும் எங்கள் இயக்கத்தை பிரகடனப்படுத்தினோம். மாநில கமிட்டிகளை உருவாக்கினோம். தென்னிந்தியாவில் நடப்பது போலவே அனைத்து நிகழ்ச்சிகளும், போராட்டங்களும் வட இந்திய மாநிலங்களிலும் நடைபெறுகிறது. அதற்கான மக்கள் சக்தி நமக்கு வட இந்தியாவிலும் உள்ளது.

எங்களுக்கு ஒரேயொரு இந்தியா மட்டுமே இருக்கிறது. தெற்குவடக்கு என்று வித்தியாசம் இல்லாத ஒரு இந்தியா. சில மாறுபாடுகள் இருந்தாலும் ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களின் அடிப்படை பிரச்சனைகள் சமமானது. அவர்கள்  அனைவரையும் ஆற்றல்படுத்த வேண்டும். ஆனால், தென்னிந்திய மாநிலங்களைவிட முஸ்லிம்கள் அதிகமாக உள்ள மாநிலங்களில் அனைத்து துறைகளிலும் அவர்கள் பின் தங்கியுள்ளனர் என்பது தான் உண்மை. வட இந்திய முஸ்லிம்களுக்கு சமூக முன்னேற்றம் என்பது புதிய அனுபவமாகும். அவர்களுக்கு அதனை கற்பிக்க வேண்டியுள்ளது. அரசியல் ஆற்றல் படுத்தலை நோக்கி அவர்கள் அழைக்கப்பட வேண்டும். அதற்கு கூடுதல் காலமாகும்.

கேள்வி: அண்மையில் பரவலõக நடத்தப்பட்ட ஏரியா அளவிலான வெகுஜன மாநாடுகள் (மக்கள் சங்கமம்) கிராம திருவிழாக்களாக அங்கீகரிக்கப்பட்டன. தற்போது, சமூக சேவை துறையில் இயக்கம் தீவிரமாக பங்காற்றி வருவதை காண்கிறோம். பாசிச எதிர்ப்பு மற்றும் மனித உரிமை பாதுகாப்பு ஆகிய செயல்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு களமிறங்கிய இயக்கம் திசை மாறி பயணிக்கிறதா?

பதில்: பாசிசத்திற்கு எதிராகவும், ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் எங்கள் எதிர்ப்பு எப்பொழுதும் தொடரும். அவர்களை நாம் எதிர்த்துக் கொண்டேயிருப்போம். அதில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை. இந்தியாவில் நல்லிணக்க பாரம்பரியத்தை அழித்துவிட்டு அரசியல் ஆதாயத்திற்காக இந்துத்துவ பாசிஸ்டுகள் தீவிரமாக செயல்படுத்த முனையும் சதித்திட்டங்களை நாம் மக்கள் முன் தோலுரித்துக் காட்டுவோம்.

பயமுறுத்தி அடிபணிய வைக்கும் பாசிஸ்டுகளின் சூழ்ச்சிகளை தடுப்போம். இதற்காக ஒத்த கருத்துடையவர்களுடன் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். போராட்டங்கள், பொது நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பத்திரிகை அறிக்கைகள், போஸ்டர் பிரச்சாரங்கள் ஆகியன நமது நிகழ்ச்சி நிரல்களாகும்.

அத்துடன், முஸ்லிம் சமுதாயம் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களை ஆற்றல்படுத்துவதையும் நாங்கள் செயல்படுத்துகிறோம். இயக்கத்தின் வளர்ச்சியும், விரிவாக்கமும் நமது செயல் திட்டங்களை அதிகப்படுத்தியுள்ளது. மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக அதிகரித்துவரும் தாக்குதல்கள் நமது பொறுப்புகளை அதிகரித்துள்ளது. மக்களிடம் சென்று பணியாற்றுவதற்கு, நாடு முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்ற கிராம மாநாடுகள், நமக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.

கேள்வி: ‘ஒளிமயமான எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம்’ என்பது கிராம மாநாடுகளின் விளம்பர வாசகம். எதிர்காலத்தை முன்னிறுத்திய நீண்டகால திட்டங்கள்தாம் இனி தேவை என்ற சிந்தனையை பலரும் கூறுகின்றனர். பாப்புலர் ஃப்ரண்ட் இந்த சிந்தனையின் தீவிரத்தை உட்கொண்டுள்ளதா?

பதில்: சுதந்திரத்தின் 67 ஆண்டுகள் கழிந்த இந்திய முஸ்லிம்களும், அவர்களது சுயமாக பிரகடனப்படுத்தப்பட்ட தலைவர்களும் சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களின் வீழ்ச்சிகளையும், தோல்விகளையும், பிற்படுத்தப்பட்ட சூழலையும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள். பிரச்சனைகளை மட்டும் கூறிக் கொண்டிருப்பதில் சமுதாய தலைவர்கள் திருப்தி அடைந்துள்ளனர். ஆனால், சமூகத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

இத்தகைய தலைவர்களுக்கு இந்திய முஸ்லிம்களை முன்னேற்ற பாதையில் வழிநடத்துபவர்களுடன் எவ்வித தொடர்பும் இல்லை. அவர்களின் எதிர்காலத்தைக் குறித்தான கவலையும் இல்லை. பிரச்சனைகளை தீர்ப்தற்கான திட்டமும் இல்லை. அறிவுஜீவிகள் புத்தகங்களை எழுதுகிறார்கள். கட்டுரைகளை எழுதுகிறார்கள். கருத்தரங்குவாதிகள் புள்ளி விபரங்களை சமர்ப்பிக்கின்றார்கள். இந்திய முஸ்லிம்களின் எதிர்கால திட்டம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை நிர்ணயிக்க யாராலும் இயலவில்லை. இதிலிருந்து மாறுபட்டு இந்திய முஸ்லிம்களை எதிர்காலத்தை நோக்கி வழி நடத்துவதற்கு இனிமேலாவது முயல வேண்டும். ஒரு தொலைநோக்கு பார்வை வேண்டும்.

பல்வேறு பகுதிகளை சேர்ந்த இந்திய முஸ்லிம்களுக்கான செயல்திட்டங்களை தீர்மானித்து அளிக்க வேண்டும். வரும் நூற்றாண்டில் இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும்? முஸ்லிம்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் நிலை எவ்வாறு இருக்க வேண்டும்? ஆகிய நீண்டகால திட்டத்தைக் குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சிந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் பயணித்து பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து, இவ்விஷயம் தொடர்பாக விவாதத்தை துவக்கியுள்ளது.

கேள்வி: இதர இயக்கங்களைவிட பாப்புலர் ஃப்ரண்ட் ஏன் குறிவைக்கப்படுகிறது? அரசுகள் தடைகளை ஏற்படுத்துகின்றன. கட்சிகள் இடைவெளியை பேணுகின்றன. ஊடகங்கள் புனைவுகளை பரப்புரை செய்கின்றன. இவர்கள் மட்டுமல்ல, சில முஸ்லிம் அமைப்புகள் கூட ஏன் பாப்புலர் ஃப்ரண்டை எதிர்க்கின்றன? இந்த சூழலை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?

பதில்: சுதந்திரத்திற்காகவும், நீதிக்காவும் போராடிக் கொண்டிருக்கும் அமைப்பு என்ற நிலையில் நமக்கு எதிரிகள் இருப்பது இயல்பானதே. வலுவான செயல்வீரர்களை கொண்ட நமது இயக்கம் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆகையால், நாம் கண்காணிக்கப்படுகிறோம்.

நாடு முழுவதும் முஸ்லிம்களை ஒன்றிணைத்து, அவர்களை ஆற்றல்படுத்தி உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறோம். அவர்களை அரசியல் ரீதியாக சக்திபடுத்தி இயக்கம் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது பல மறைவான செயல்திட்டங்களை கொண்டவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது.

கடந்த கால் நூற்றாண்டாக தேசத்திற்கு எதிராகவோ, அரசியல் சாசனத்திற்கு எதிராகவோ, ஜனநாயகத்திற்கு எதிராகவோ எவ்வித செயல்களிலும் ஈடுபட்டதில்லை. இது அரசுக்கும், நம்மோடு இடைவெளியை பேணும் அனைவருக்கும் நன்றாக தெரியும். நமது பணிகள் வெளிப்படையானவை. எதிரிகளும், அரசு ஏஜென்சிகளும் ஊடகங்களை நமக்கு எதிராகப் பயன்படுத்துகின்றனர். சத்தியத்தை இறுகப் பற்றிக் கொள்வதை தவிர நம் முன்னால் இதர வழிகள் இல்லை. சூழ்ச்சிகளை முறியடிக்க அதிகமான மக்களிடம் சென்று சத்தியத்தை தெளிவாக எடுத்துக்கூறுவதை தவிர வேறு வழி கிடையாது.

கேள்வி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தடை செய்யப்போவதாக அண்மையில் ஒரு செய்தி வெளியானது. இத்தகைய செய்திகள் அடிக்கடி வெளியாவது ஏன்? உண்மையில் அத்தகையதொரு தடை அச்சுறுத்தல் உள்ளதா?

பதில்: அரசியல் சாசனத்தின் அடிப்படையில் இந்தியாவில் இயங்கிவரும் ஒரு சமூக முன்னேற்ற இயக்கமே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. நமது இயக்கத்தை தடை செய்து விட்டோம் என்ற வார்த்தையை இதற்கு முன்னரும் உபயோக படுத்தியுள்ளனர். ஆனால், கால் நூற்றாண்டாக இந்தியாவில் முஸ்லிம் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை ஆற்றல்படுத்தலுக்கான நமது பணிகள் தடைபடவில்லை. இயக்கத்தை தடை செய்வதற்கான ஒரு சிறு அம்சத்தை கூட எங்களது பணிகளில் காணமுடியாது. எவ்வித ஆதாரத்தையும் உருவாக்க முடியாது.

பிரிவினையை வளர்த்து வரும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட தேசவிரோத சக்திகள் இங்கு செயல்படுகின்றன. இத்தகைய சக்திகளை நாம் தொடர்ந்து தோலுரித்து காட்டி வருகிறோம். ஆனால், அரசு அவர்களை தடை செய்யவில்லை. அதுமட்டுமல்ல, அரசின் கட்டுப்பாடு அவர்களிடமல்லவா இருக்கிறது! அதிகாரத்தை கையாளுபவர்களுக்கு எதிர் குரல் எழுப்புவோரை தடை செய்ய பிரத்யேக நியாயம் தேவை இல்லை அல்லவா? ஆனால், சட்டத்திற்கும், நீதிக்கும் எதிரான இத்தகைய நடவடிக்கைகளை ஜனநாயக சமூகம் தோற்கடிக்கச் செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்.

கேள்வி: இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்பு போன்ற சில நாசவேலைகளில் இயக்கத்தை தொடர்புபடுத்த முயற்சிகள் நடந்தன. விடுதலைப் புலிகள் முதல் அல்காயிதா வரை தொடர்புபடுத்தி கதைகள் முன்பு பரப்புரை செய்யப்பட்டன. தற்போது, ஐ.எஸ்.ஸுடன் தொடர்பு இருப்பதாக பரப்புரை செய்யப்படுகிறது. ஆயுத குழுக்களின் நாச வேலைகளை நியாயப்படுத்த முடியுமா?

பதில்: இந்தியாவில் ஒடுக்கப்பட்ட  பிற்படுத்தப்பட்ட சமூகங்களை ஆற்றல்படுத்துதல் குண்டுவெடிப்பு மூலமாகவோ, வன்முறைகள் மூலமோ முடியாது என்பதை நாம் உறுதியாக நம்புகிறோம். இந்தியர்களின் பிரச்சனைகளும், சூழ்நிலைகளும் சவால்களும், தீர்வுகளும் மாறுபட்டது. கல்வி அறிவின்மை, பாதுகாப்பு இன்மை, அநீதி, வறுமை, வேலையின்மை, ஊழல், இந்துத்துவா பாசிசம் ஆகியவைதான் தீர்வை தேடும் பிரச்சனைகளாகும்.

எங்காவது, ஒரு இடத்தில் பேக்கரியின் முன்போ மக்கள் நெருக்கமான ஒரு பொது இடத்திலோ குண்டை வைத்து மக்களை கொலை செய்வதன் மூலம் இந்திய சமூகத்தின், முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படாது.

அத்தகைய செயல்பாடுகளால் திசை மாறிவிடாதீர்கள் என்று நாம் எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அடிமட்ட அளவில் மனித வளங்களை கண்டறிந்து அவர்களை ஒன்றிணைத்து கல்வி ரீதியாகவும், பொருளõதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தயார்படுத்த வேண்டும். ஜனநாயக வழிமுறைகளை பயன்படுத்தி அக்கிரமங்களையும் சுரண்டல்களையும் தடுக்க வேண்டும் என்பதே மேற்கூறிய பிரச்சனைகளுக்கு தீர்வாக நாம் தேர்ந்தெடுத்துள்ள வழிமுறை.

நீங்கள் குறிப்பிட்ட இந்த ரகசிய குழுக்களுடன் நமக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. அதுமட்டுமல்ல, அவர்களைக் குறித்த தெளிவான, துல்லியமான தகவல்கள் கூட கிடைக்காதபோது, இந்தியாவில் முஸ்லிம்கள் அவர்களிடம் என்ன தீர்வை தேட முடியும்? இந்தியாவின் உண்மையான கள நிலவரத்தை புரிந்து கொண்டு வெகுஜன, சட்டரீதியான வழிமுறைகளின் மூலம் செயல்திட்டத்தை வகுக்க இந்திய முஸ்லிம்கள் திறன் பெற்றவர்கள். இந்த மண்ணின் பலம் நமக்கு போதுமானது. எந்தவொரு  வெளிநாட்டு திட்டமும், அமைப்பும் நகல் எடுத்து செயல்படுவதற்கான எவ்வித முன்மாதிரியையும் நமக்கு அளிப்பதில்லை.

கேள்வி: நமது நாட்டில் முஸ்லிம் இளைஞர்கள் இத்தகைய குழுக்களால் கவரப்படுவதாக ஒரு சில  செய்திகள் வெளியாகின. இத்தகைய பாதிப்புகளை எவ்வாறு தடுக்க முடியும்? இவ்விஷயம் பாப்புலர் ஃப்ரண்டின் செயல்திட்டத்தில் உள்ளதா?

பதில்: இளைஞர்கள் இத்தகைய குழுக்களால் அதிக அளவில் கவரப்படுவதில்லை. ஒரு சில சம்பவங்கள் நடந்திருக்கலாம். அதற்கு இந்துத்துவ பாசிசத்தின் தாக்குதலும், அரசு பயங்கரவாதமும், நீதி பீடங்களில் இருந்து நீதி கிடைக்காததும் காரணமாக இருக்கலாம். இளைஞர்கள் இங்குள்ள அரசியலால் அதிருப்தியடைந்துள்ளனர். சூழ்நிலைகளை சரிபடுத்தி எதிர்ப்புகளை ஆக்கப்பூர்வமாக மாற்ற வேண்டும். தீவிர விழிப்புணர்வும், சரியான ஒழுங்குபடுத்துதலும் நடைபெற வேண்டும்.

பாப்புலர் ஃப்ரண்ட் நினைத்தால் மட்டும் இது சாத்தியமில்லை. இதர சமூகமுஸ்லிம் அமைப்புகளுக்கும் இந்த பொறுப்புணர்வு வேண்டும். அரசுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் பொறுப்புண்டு. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இவ்விவகாரத்தில் எச்சரிக்கையாக உள்ளது. பொறுப்பை நிறைவேற்றவும் செய்கிறது.

கேள்வி: மாவோயிசம்  இந்தியா எதிர்கொள்ளும் சட்டஒழுங்கு பிரச்சனையும், சவாலும் அல்லவா? இந்தியாவின் ஜனநாயக நடைமுறையில் நம்பிக்கை கொள்ளாமல் ஆயுதப் போராட்டத்தின் வழியை அவர்கள் தேர்வு செய்துள்ளனர். பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் மனித உரிமை களத்தில் மாவோயிஸ்டுகளுடன் ஒத்துழைப்பதை காண்கிறோம். இவ்விவகாரத்தில் போதிய தெளிவு தேவைப்படுகிறது.

பதில்: மாவோயிஸ்டுகள் யார் என்பது குறித்து நமக்கு தெளிவாக தெரியாது. முஸ்லிம் தீவிரவாதம் போலவே மாவோயிஸமும் அநியாயமாகவும், தவறாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. பட்டியலிடப்பட்ட எந்தவொரு தடை செய்யப்பட்ட இயக்கத்துடனும் பாப்புலர் ஃப்ரண்டிற்கு தொடர்பில்லை, இதுதான் உண்மை. ஆனால், மனித உரிமைக்காகவும், இந்துத்துவா பயங்கரவாதத்திற்கு எதிராகவும் குரல் எழுப்பும் சமமான சிந்தனை கொண்டவர்களுடன் நாம் மேடையை பகிர்ந்து கொள்கிறோம்.

ஆனால், ஜனநாயக நடைமுறையில் நம்பிக்கை கொள்ளாத அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தும் சித்தாந்தங்களையும், குழுக்களையும் நாம் ஒரு போதும் ஆதரிக்கவில்லை. ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் அடிப்படையிலான தீர்வையே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்வைக்கிறது.

கேள்வி: பாப்புலர் ஃப்ரண்டிற்கும் ஒரு அரசியல் பார்வை உண்டல்லவா? அதன் வெற்றி வாய்ப்பு என்ன?

பதில்: பாப்புலர் ஃப்ரண்டிற்கு துவக்கம் முதலே ஒரு அரசியல் பார்வை உண்டு. அது இந்துத்துவா பாசிச சக்திகளை தோற்கடிப்பதாகும். நாம் முன்வைப்பது நேர்மறை அரசியலாகும். தலித்கள், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் அதிகாரத்தில் பங்கேற்க வேண்டும். இந்திய ஜனநாயக வழிமுறையை பயன்படுத்தி முஸ்லிம்களுக்கு நாட்டில் போதிய அதிகார பங்களிப்பை பெற வேண்டும். இதுதான் நமது செய்தி.

ஒவ்வொரு இந்தியருக்கும் பயத்தில் இருந்தும், பசியில் இருந்தும் விடுதலையை பெற்றுத்தரும், அனைத்து இந்தியர்களுக்கும் சம உரிமையை வழங்கும் ஒரு இந்தியாவை கட்டியெழுப்பும் ஒரு அரசியல்தான் நம்முடையது. இது காலத்தின் தேட்டமாகும். இந்த செய்தியை நாம் தேசத்தில் பரப்புரை செய்து கொண்டேயிருப்போம். மக்கள் இதனை அடையாளம் காண்பார்கள். வெற்றி தாமதமாகலாம். ஆனால், அது நிகழ்ந்தே தீரும்.

தமிழில்: செய்யது அலீ

(ஆகஸ்ட் 2015 இதழில் வெளியான பேட்டி)