இந்துத்துவா பாசிசத்தை எதிர்த்துப் போராடுவது ஒவ்வொரு இந்தியனின் முதல் கடமை

இஸ்லாத்தை தழுவிய டி.என். ஜாய் பேட்டி

 டி.என். ஜாய், தற்போது நஜ்மல் பாபு. 70களில் கேரளா நக்ஸலைட் இயக்கத்தின் மூளையாக செயல்பட்டவர். சி.பி.ஐ.எம். பிளவுபடுவதற்கு முன் அக்கட்சியின் மாநில செயலாளராக இருந்தவர். சொந்த ஊர் கொடுங்கல்லூர். குடும்பம் இல்லை. வீடு கிடையாது. சம்பாத்தியமும் இல்லை. அவசர நிலை பிரகடன காலக்கட்டத்தில் கொடூரமான சித்திரவதைகளை அனுபவித்தவர். அண்மையில் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.

இந்துத்துவா சங்பரிவார பாசிசம்தான் இந்தியாவின் எதிரி. அதற்கு எதிராக போராடுவது ஒவ்வொரு இந்தியனின் முதலாவது கடமை. பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாகவே நான் இஸ்லாத்தை தழுவினேன் என்று கூறும் டி.என்.ஜாய், ப்ரபோதனம் என்ற மலையாள வார இதழுக்கு அளித்த பேட்டியின் முக்கிய பகுதிகளை வாசகர்களுக்கு வழங்குகிறோம்.

ஒரு முழுமையான அரசியல் ஆளுமையான நீங்கள் இஸ்லாத்தை தழுவியதும், ‘நான் மரணித்தால் சேரமான் மஸ்ஜிதில் என்னை அடக்கம் செய்ய வேண்டும்’ என்ற உங்களது கோரிக்கையும் கேரள சமூகத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு உங்களை தூண்டிய காரணிகள் என்ன?Cheraman-Juma-masjid-Kodungalloor-Thrissur

டி.என்.ஜாய்: பாசிசமே இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய சவால். அதன் மிகப்பெரிய தலைவரான மோடி இந்தியாவின் பிரதமராகியுள்ளார். இந்தியா, அனைத்து மனிதநேய விழுமியங்களின் சவக்கிடங்காக மாறி வருகிறது. ஜனநாயகத்தையும், மதச்சார்பற்ற கொள்கையையும் ஒழித்துக்கட்ட ஆர்.எஸ்.எஸ்.ஸின் தலைமையகத்திலிருந்து வரும் சிக்னலுக்காக காத்திருக்கிறார்கள்.

ஹிட்லரின் தேசமும், அதன் கலாச்சார நாயகர்களும் உலகின் முன்னால் தலைகுனிந்தது போல இந்தியாவும் குனிய வேண்டிய சூழல் ஏற்படலாம். இரண்டு உலக போர்களுக்கு பின்னர் நசிந்துபோன ஜெர்மனி, அந்த மோசமான சூழலிலிருந்து விடுபட்டது.

மனிதநேய ஆர்வலர்களும், கலாச்சார நாயகர்களும் கடைசி கட்ட எதிர்ப்பை காட்ட வேண்டிய நாட்களின் ஊடே நாம் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். யு.ஆர். அனந்தமூர்த்தி போன்ற ஒரு சிலர் மட்டுமே இதனை அடையாளம் காணும் துணிச்சலை வெளிப்படுத்தினர். ஆனால், பெரும்பாலோர் இந்த முக்கிய வேளையிலும் தயக்கம் காட்டுகின்றனர்.

தற்போது இந்தியாவில் வாழும் ஒரு நபரால் செய்ய முடிந்த மிகவும் முக்கியமான அரசியல் பணி என்னவெனில் பாசிசத்திற்கு எதிராக போராடுவதே என்று நான் கருதுகிறேன். எனது உடலையும், அதன் அனைத்து சக்திகளையும் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்திற்காக அர்ப்பணிக்கிறேன். எனது உடலை பாசிசத்திற்கு எதிராக அர்ப்பணிக்கவே, நான் மரணித்தால் சேரமான் மஸ்ஜிதில் அடக்கம் செய்ய வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்தேன். எனது நோக்கமும் அதுவே.

‘விளம்பரத்திற்காக பலரும் பல காரியங்களை செய்கிறார்கள். அதில் ஒன்றுதான் மதம் மாறுவது, என்பது உள்ளிட்ட பாசிசத்திற்கு ஆதரவான கீழ்த்தரமான விமர்சனங்களை வெளியிடுவோருக்கு நான் கூறிக்கொள்வது என்னவெனில், ‘இது, கருணையாளனான இறைவனை நோக்கிய பயணத்தின் துவக்கம். மறுமையை நம்பக்கூடிய நான் அமைதியை அனுபவிக்கிறேன். அல்லாஹ், உள்ளத்தையே பார்க்கிறான். ஆகையால், கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளாமல் வாழ முயற்சிக்கும் எனக்கு அவனது கருணை கிடைக்கும்.’

அரசியலில் மூழ்கியிருந்தபோதும், சுய தேடுதலில் ஈடுபட்டேன். ஒரு மதமும் இல்லாமலேயே நான் வாழ்ந்தேன். மதத்தை பின்பற்றாமலேயே மதங்களை ஆய்வு செய்த நான் இஸ்லாத்தைக் குறித்த சுயநலவாதிகளின் இரட்டை வேடத்தை துவக்கத்திலேயே கண்டு கொண்டேன். இந்தியாவில் எப்பொழுதுமே வகுப்புவாத தீவிரவாதத்தின் இரைகளாகி கொண்டிருக்கும் முஸ்லிம்களை, இந்துத்துவா சக்திகளைப் போலவே வகுப்புவாதிகள்தான் என்று இடதுசாரிகளும், பகுத்தறிவாதிகள் உள்ளிட்ட மதச்சார்பற்றக் கொள்கையின் ஆதரவாளர்களும் எவ்வித ஆதாரமுமின்றி குற்றம்சாட்டி வருவதை நான் கண்டேன்.

எங்களுக்கு மதம் இல்லை என்று அவர்கள் வெளியே கூறினாலும், உயர்சாதி இந்துத்துவா கலாச்சாரமே அவர்களை வழிநடத்துகிறது என்பதே இதற்கு காரணம் என்று நான் கருதுகிறேன். பகுத்தறிவு வாதிகள் மற்றும் இடதுசாரிகளின் இத்தகைய நிலைப்பாடுகள் கபட இந்துத்துவவாதமாகும். இதனால், இந்துத்துவா பாசிஸ்டுகள்தாம் பலன் அடைவர். இதனால்தான், வகுப்புவாதத்திற்கு எதிராக இடதுசாரிகளின் கொள்கைகள் முனை மழுங்கி பயனற்று போகின்றன.

நீங்கள் இஸ்லாத்தை தழுவுவதற்கான அனுபவங்கள் என்ன?

டி.என்.ஜாய்: எனது குடும்பம் மதம் அற்றது. ஆனால், மதங்களின் கதைகளை கூறித்தான் தந்தை எங்களுக்கு பண்பாடுகளை கற்றுத்தந்தார். இறைத்தூதர்களே கபடம் இல்லாமல் வாழ எனக்கு கற்றுத் தந்தார்கள். மரணத்திற்கு பிறகு ஒரு வாழ்க்கை உண்டு என்று நான் நம்புகிறேன். எனக்கு ஜாய் என்றும் தாய் மாமாவின் மகளுக்கு ஆயிஷா என்றும் பெயர் சூட்டியவர் எனது தந்தை. உயர்சாதியினரின் வன்முறைகளை நேரடியாகக் கண்டு, அனுபவித்ததன் காரணமாக அவர்கள் மதச்சார்பற்றவர்களாக மாறினார்கள். உயர்சாதி ஆதிக்கத்தின் ஒரு பகுதியாக அல்லது சமகால உயர்சாதியின் உருவமாக திகழும் இந்துத்துவா பாசிசத்திற்கு எதிராகத்தான் நான் இஸ்லாத்தை தழுவினேன்.

எனது நெருங்கிய நண்பர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்களாவர். தூய்மையான வாழ்க்கை மற்றும் சமூக பணிகளுக்கு இஸ்லாம் அவர்களுக்கு தூண்டுகோலாக அமைவதை நான் காண்கிறேன். வேறு எந்த மதத்தவர்களும், மதத்தின் தூண்டுதலால் இவற்றையெல்லாம் செய்வதில்லை. மதம் சாராத பணிகள் மூலமே இதர மதத்தவர்கள் சமூக பணியாளர்களாக மாறுகின்றார்கள். கொடுங்கல்லூரின் கலாச்சார பின்னணியும் என்னை ஈர்த்தது.

சிறந்த மத நம்பிக்கையாளராக இருந்தபோதும் ஜனநாயகத்தை மீட்டெடுத்த முஹம்மது அப்துல் ரஹ்மான் சாஹிப் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திய வீரப் புருஷன். நான் அதிகமாக சென்ற வழிபாட்டுத்தலம் சேரமான் மஸ்ஜித். எதிர்காலத்தில் பாசிச எதிர்ப்பின் சின்னமாக எனது அடக்கஸ்தலம் சேரமான் மஸ்ஜிதின் வளாகத்தில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்நாட்டின் ஜனநாயகத்தையும், மதச்சார்பற்றக் கொள்கையையும் நிலை நாட்டுவதற்கான அழைப்பாக நான் இஸ்லாத்தை தழுவியதை வரும் தலைமுறையினர் காண வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

சிறுபான்மை  பெரும்பான்மை வகுப்புவாதத்தை ஒரே மாதிரியான கண்ணோட்டத்திலேயே இந்தியாவில் அரசுகள் கூட காண்கின்றன. இது பாசிசத்திற்கு ஊக்கமளிப்பதாக அமையுமா?

டி.என்.ஜாய்: ஆம். ஹிட்லரை எதிர்கொள்ள தயாராகும்போது, ஒன்றிணைந்த முதலாளித்துவ ஆதரவாளர்களும், கம்யூனிஸ்டுகளும் ‘யூத வகுப்புவாதத்தை சரி செய்த பிறகு போராடினால் போதும்’ என்று தீர்மானிக்கவில்லை. யூதர்கள் ரவுடிகள், தேசத்தின் எதிரிகள் என்று ஜெர்மனி மக்கள் அனைவரையும் நம்ப வைப்பதில் ஹிட்லர் வெற்றியடைந்தார். அந்நாட்டின்  சமூக, கலாச்சார உலகம் கூட இந்த பரப்புரைக்கு அடிபணிந்தது. பின்னர் அவர்கள் அதற்காக மன்னிப்பு கேட்டனர்.

இந்துத்துவா பாசிசத்தை தேசியவாதமாகவும், பாரதிய கலாச்சாரமாகவும் காட்டும்போது அதனைக் குறித்து கேள்வி எழுப்ப அபூர்வமாக ஒரு சிலரே உள்ளனர். ‘பெரும்பான்மை வகுப்புவாதம் மட்டுமே பாசிசமாக மாறுகிறது. சிறுபான்மை சமூகத்திற்கு அது சாத்தியமில்லை’ என்று நேரு கூறியுள்ளார். பாசிசத்தை எவ்வாறு தோற்கடிக்கலாம் என்றே சர்ச்சிலும், ரூஸ்வெல்டும், ஸ்டாலினும் சிந்தித்தார்கள். காந்தி கூட இதனை அங்கீகரித்தார். இதற்காக சுதந்திர போராட்டத்தில் கூட சமரசம் செய்து உலகப் போரில் பிரிட்டனுக்கு ஆதரவளித்தார்.

இந்தியாவில் பல்வேறு எழுச்சிகளுக்கு முன்மாதிரியாக கேரளா திகழ்கிறது. ஆனால், பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் நாம் ஹிட்லரின் ஜெர்மனியில் குற்றவாளிகளான கலாச்சார, சமூக, அறிவு ஜீவி வர்க்கத்தினரைப்போல உள்ளோம். இவ்விவகாரத்தில் வட இந்திய அறிவுஜீவிகளின் சமூகம் கூடுதலாக சுதந்திர உணர்வை வெளிப்படுத்துகின்றது. மோடிக்கு எதிராக சிந்தனை ரீதியான, சட்டரீதியான போராட்டம் நடத்தும்போது முஸ்லிம் ஆதரவாளர்கள் என்ற முத்திரை குத்தப்படும் என்று அவர்கள் அஞ்சுவதில்லை.

இந்தியாவில் இஸ்லாமோஃபோபியாவைக் குறித்து உங்கள் கருத்து?

டி.என்.ஜாய்: இந்திய பாசிசத்தின் தாக்குதலோடு இஸ்லாமோஃபோபியாவும் இணையும்போது எந்தவொரு முஸ்லிமும் எந்த நிமிடத்திலும் தாக்கப்படலாம். ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சிறையில் அடைக்கப்பட்டது முதல் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து அச்சுறுத்தும் காவல்துறையின் மனநிலையில் கூட இஸ்லாமோஃபோபியா பீடித்துள்ளது. எத்தனையோ போராட்டங்கள் நடத்தி, அடி பட்டு, மக்களுக்கு நலன் தரும் காரியங்களை வென்றெடுத்த பிறகும் முஸ்லிம்கள் தலைமையிலான அமைப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போவதற்கான காரணம் இஸ்லாமோஃபோபியா அல்லாமல் வேறு என்ன?

சமூக, அரசியல், கலாச்சார துறையில் இஸ்லாமோஃபோபியா நிலவுகிறது. ஊடகங்கள்தாம் இதன் முக்கிய பயனாளிகள். தீவிரவாதம் குறித்த செய்திகள் எவ்வித ஆதாரமுமின்றி தொடர்ந்து உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்தியன் முஜாஹிதீன் அணுகுண்டை தயாரிக்கப்போவதாகவும், கடற்படை பயிற்சியை துவக்கப்போவதாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகின. இச்செய்திகளின் உண்மை நிலை என்ன என்பது குறித்து யாரும் புலனாய்வு செய்வதில்லை. யாரும் இதனை பின் தொடர்ந்து செல்வதில்லை. ஆனால், அவை உருவாக்கும் பீதியும், பகைமையும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

பாசிசத்திற்கு எதிரான நமது எதிர்ப்புகள் எவ்வாறு அமையவேண்டும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?

டி.என்.ஜாய்: முஸ்லிம் அமைப்புகளுக்கிடையே ஒரு செயல்திட்ட ஒழுங்கு துவக்கத்திலேயே உருவாகியிருக்கவேண்டும். ‘நாங்கள்தாம் தூய்மையான இஸ்லாத்தை பின்பற்றுகிறோம்’ என்ற வாதத்தை அவர்கள் இதிலாவது ஒதுக்கி வைக்கவேண்டும். ‘முஸ்லிம்கள் எங்களுக்கு தேவை, ஆனால் அவர்களது அமைப்புகள் தேவையில்லை’ என்ற கொள்கையை இடதுசாரிகள் திருத்திக்கொள்ள வேண்டும். பாசிஸ்டுகளுக்கு எதிராக காந்தி பிரிட்டீஷாருக்கு ஆதரவளித்ததுபோல, இடது சாரிகள் முஸ்லிம் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான வழிகளை ஆராயவேண்டும்.

நன்றி : ப்ரபோதனம்

தமிழில்: செய்யது அலீ

(ஜூன் 2015 இதழில் வெளியான பேட்டி)