பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தார் என்று கூறி ஒருவர் மீது ஒரு வழக்கு போடப்பட்டிருந்தால் அதுவே அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போதுமானது’. மக்களின் நலன் காக்க வேண்டிய தமிழக அரசும் மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய நீதிமன்றமும் இந்த அளவுகோலை வைத்திருப்பதால் மனித உரிமைகள் குறித்து சிறிதும் கவலையில்லாத காவல்துறை அதிகாரிகளுக்கு இது மிகவும் வசதியாகப் போய் விடுகிறது. இதைப் பயன்படுத்தியே சமூகப் பணிகளில் ஈடுபடுவோர் மீது தமிழக காவல்துறை பொய் வழக்குகளை புனைந்து வருகின்றது.
சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிவரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையின் சில அதிகாரிகள் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வருகின்றனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பெரியபட்டிணம் நகர தலைவர் நியாஸ் கான் மற்றும் பக்ருதீன் ஆகிய இருவரையும் இராமநாதபுரம் காவல்துறை சென்ற மாதம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தது.
பிப்ரவரி 17, 2014 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் தின பேரணியின் போது தேவையற்ற தடியடியை நடத்தி களேபரத்ணித அரங்கேற்றினர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் தலைமையிலான படையினர். தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக்குண்டு வீசியும் கலைந்து செல்லாத மக்கள் வெள்ளத்தை கண்டு எரிச்சலுற்ற காவல்துறை யினர் பொய் வழக்குகளை புனைந்தனர். சட்டவிரோத கைதுகளும் நடந்தன. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நீதிக்கான போராட்டத்தை தொடர்ந்து பொய் வழக்குகள் உடைந்தன. இதில், 1017 நபர்கள் மீது காவல்துறை புனைந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் திருப்புல்லாணி சார்பு ஆய்வாளர் ஜேசுதாஸ் போன்றவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் மீது பொய் வழக்கு பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதனிடையே அக்டோபர் 15 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பெரியபட்டிணம் யோகா பயிற்சி மையத்தில் இரவு 10.30 மணியளவில் காவல்துறையினர் இருப்பதாக கேள்விப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர், மாவட்ட தலைவர் பஷீர் அலீ தலைமையில் அங்கு சென்றுள்ளனர். சில சூழ்ச்சி வேலைகளை செய்வதற்கான முயற்சிகள் இதற்கு முன்னரும் மேற்கொள்ளப்பட்டதால் அமைப்பினர் அங்கு உடனடியாக சென்றனர். காவல்துறையினருடன் பேசி கொண்டிருக்கும் போதே, ‘இந்த நேரத்தில் உங்களுக்கு இங்கு என்ன வேலை?’ என்று கேட்டு அவர்களை விசாரணை செய்ய வேண்டும் என்று கூறி காவல்நிலையத்திற்கு இழுத்துச் சென்றனர்.
கீழக்கரை காவல் ஆய்வாளர் ஆனந்த் , திருப்புல்லாணி சார்பு ஆய்வாளர் ஜேசுதாஸ் ஆகியோர் இந்த அடாவடிகளை முன்னின்று செய்தனர். டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா வழக்கில் பெண் காவலர்களின் நிலை குறித்து குரல் கொடுத்த கீழக்கரை டி.எஸ்.பி.மகேஸ்வரி இவர்களின் அடாவடிகளை கண்டு மௌனமாகவே இருந்தார். காவல்நிலையம் சென்ற பின் அடுத்த திரைக்கதையை காவல்துறையினர் எழுதினர். ரைசுதீன் என்பவர் அன்றைய இரவு தாக்கப்பட்டதாகவும் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே விசாரணை செய்ய அழைத்து வந்ததாகவும் கூறினர்.
சமூக வலைதளங்களில் மட்டும் இயங்கும் சில அமைப்புகளில் உள்ள ரைசுதீன் விபச்சாரம், கட்டப் பஞ்சாயத்து என்று பல வழக்குகளில் கைது செய்யப்பட்டவர். சமூக வலைதளங்களில் பலர் மீது அவதூறுகளை அள்ளி வீசியதால் சில வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளன. பாப்புலர் ஃப்ரண்டின் மீதும் பல அவதூறுகளை எழுதியுள்ளதால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், சமூக வலைதளங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் மீது அவதூறாக எழுதியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் பத்து லட்சம் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடரப்படும் என்று ரைசுதீனுக்கு பாப்புலர் ஃப்ரண்டின் பெரியபட்டிண நகரத் தலைவர் நியாஸ் கான் கடந்த 3.10.2015 அன்று வழக்கறிஞர்கள் மூலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்தச் சூழ்நிலையில் மாவட்ட எஸ்.பி.மயில்வாகணன், திருப்புல்லாணி சார்பு ஆய்வாளர் ஜேசுதாஸ் மற்றும் ரை தீன் ஆகியோரின் கூட்டுச் சதியால் பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் மீது பொய் வழக்கு புனையப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
மறுதினம் தகவல் அறிந்த மக்கள் காவல் நிலையம் முன்பு திரண்டதால் மாவட்ட தலைவர் பஷீர் அலீ உள்ளிட்ட ஏழு நபர்களிடம் கையெழுத்து வாங்கிக் கொணடு அவர்களை விடுவித்துள்ளனர். பெரியபட்டிணம் நகர தலைவர் நியாஸ் கான், பக்ருதீன் மற்றும் சாதிக் அம்பலம் ஆகிய மூவரையும் கைது செய்தனர். நியாஸ் கான் மற்றும் பக்ருதீன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
முதல் தகவல் அறிக்கையில் உள்ள குளறுபடிகள்
கடந்த 16.10.2015 அன்று திருப்புலானி எஸ்.ஐ. ஜேசுதாஸ் அவர்கள் பதிவு செய்துள்ள இச்சம்பவத்திற்கான வழக்கை (குற்ற எண். 195/15) ஆய்வு செய்தாலே இவ்வழக்கில் நடைபெற்றுள்ள திள்ளுமுள்ளுகளும் இவ்வழக்கு திட்டமிட்டு ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு என்பதும் தெளிவாக தெரிந்து விடும்.
15.10.2015ம் தேதி இரவு 9.55 மணிக்கு காவல்நிலைய பொறுப்பில் தான் இருக்கும் போது இராமநாதபுரம் ஜி.ஹெச்.சில் இருந்து கிடைக்கப்பெற்ற இன்டிமேஷன் தகவலை பெற்று இராமநாதபுரம் ஜி.ஹெச்சில் சென்று அங்கு எம்.எஸ். வார்டில் உள்நோயாளியாக சிகிச்சையில் இருந்த பெரியபட்டிணம் அகமது அலி நகரச் சேர்ந்த ஜகருல் ஜமான் மகன் முஹம்மது ரைசுதீன் என்பவரிடம் வாக்குமூலம் பெற்று வழக்குப் பதிவு செய்தததாக எஃப்.ஐ.ஆரில் எஸ்.ஐ. ஜேசுதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பதியப்பட்டுள்ள விபத்துப் பதிவேட்டில் 15.10.2015 அன்று இரவு 10.40 மணிக்கு முஹம்மது ரைசுதீன் என்பவர் தன்னை இரண்டு தெரிந்த ஆண்களும் ஐந்து தெரியாத ஆண்களும் தாக்கிவிட்டதாக கூறி உள்நோயாளியாக சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.
மேற்படி முஹம்மது ரைசுதீன் கடந்த 15.10.2015 அன்று இரவு 10.40 மணிக்கு ஜி.ஹெச்சில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற விவரம் ஆதார ஆவணங்களுடன் வெளிப்பட்டுள்ள பொழுது அதற்கு முன்பே அதாவது, ரைசுதீன் ஜி.ஹெச்சில் அனுமதிக்கப்படும் முன்பே இரவு 9.55 மணிக்கு தனக்கு ஜி.ஹெச்சில் இருந்து இன்டிமேஷன் வந்தது என்று கூறி முதல் தகவல் அறிக்கையை எஸ்.ஐ.ஜேதாஸ் தயாரித்துள்ளதை உற்று நோக்கினாலே இச்சம்பவம் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு பெரிய நாடகம் என்பது தெளிவாகிறது.
மேலும் எஸ்.ஐ. ஜேசுதாஸ் 16.10.2015 அன்று ரைசுதீனிடமிருந்து வாக்குமூலம் பெற்று அதனை இராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண் 1 நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கில் முதல் தகவல் அறிக்கையின் கடைசி பக்கத்தை ஆய்வு செய்தால் அதில் இந்த எப்.ஐ.ஆர். 15.10.2015ம் தேதியன்று போடப்பட்டதை அடித்து திருத்தி 16.10.2015 என்று எழுதப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகின்றது. இதுவும் ஆதாரத்தோடு தற்போது வெளிவந்துள்ளது. மேற்படி எஸ்.ஐ. ஜேசுதாஸ் ரைசுதீனிடமிருந்து பெற்ற வாக்குமூலத்தை படித்துப் பார்த்தாலே அது ஒரு பெரிய கட்டுக்கதை என்பதும் சினிமாவை மிஞ்ம் ஒரு திகிலான காமெடிக் கதை என்பதும் தெளிவாகத் தெரிகிறது. இந்த வாக்குமூலத்தில் எழுதப்பட்டுள்ள கடத்தல், தீவிரவாத கதைகள் அனைத்திற்கும் எவ்வித ஆதாரமோ அச்சம்பந்தமான வழக்கோ எங்கும் இல்லை. எஸ்.ஐ. ஜேசுதாஸ் எழுதியுள்ள ரைசுதீனின் வாக்குமூலத்தில் ஒன்பதாவது வரியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. “இராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோர கிராமங்களில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான சிமி என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற பெயரில் பெரியபட்டிணம், வாலிநோக்கம், கீழக்கரை, ஏர்வாடி, பாம்பன், தேவிபட்டிணம் மற்றும் திருப்பாலைக்குடி ஆகிய பகுதிகளில் சில இஸ்லாமிய இளைஞர்களை மூளைச்சலவை செய்து அவர்களின் ஆதரவோடு கடற்கரை ஓரத்தோப்புகளில், காடுகளில், தனியார் காம்பவுண்ட்களில் ரகசிய பயிற்சி முகாம்களை அமைத்து அந்த முகாம்களில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, அஸ்ஸாம், பீகார், குஜராத், காஷ்மீர் போன்ற பகுதிகளிலிருந்து தீவிரவாத அமைப்பில் உள்ளவர்களை அழைத்து வந்து சீருடை அணிந்து ஆயுதம் தாங்கி அவர்கள் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து தேசப்பாதுகாப்பு நன்மை கருதி மத்திய மாநில அரசுக்கும், தமிழக காவல்துறைக்கும் நான் அளித்த தகவல்களின் பேரில் இந்த ரகசிய முகாம்களில் பயிற்சி எடுத்த வெளிமாநிலத்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் திருப்பாலக்குடி, தேவிப்பட்டிணம் பகுதியைச் சேர்ந்த வெடிமருந்து விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்கள் மூலம் மேற்படி பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பைச் சார்ந்த பெரியபட்டிணம் அஸ்கர் என்ற கண்ணாடி அஸ்கர், பண்ணக்கரையைச் சேர்ந்த அசன் அலீ, பெரியபட்டிணம் பாருக் மகன் நியாஸ்கான், சாதிக் அம்பலம், புரோஸ்கான், பண்ணக்கரை பிஸ்மி, இராமநாதபுரம் சின்னக்கடையை சேர்ந்த ஜமீல், பெரியபட்டிணம் பஷீர் அலீ (பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர்) ஆகியோர் மேற்படி நபர்களிடமிருந்து டி.என்.டி. ஜெலட்டின், எலக்ட்ரானிக் டெட்டனேட்டர் ஆகியவற்றை சட்டவிரோதமாகப் பெற்று பெங்களூர், ஹைதராபாத், புனே, மும்பை ஆகிய பகுதிகளில் உள்ள மேற்படி சிமி பயங்கரவாத அமைப்புக்கு இரகசியமாக கடத்திச் சென்று வழங்கி வந்தனர்.
அத்துடன் இலங்கையில் கல்பிட்டியா என்ற பகுதியில் செயல்பட்டு வரும் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்கள் மூலமாக கடல் வழியாக பெரியட்டிணம்,வேதாளை மற்றும் மண்டபம் கடல் பகுதிகளில் அமைந்துள்ள தீவுகளுக்கு அப்பால் இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக இந்தியாவில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினருக்காக கடத்தி வரப்படும் ஆயுதங்கள், வெடிபொருட்கள் போன்றவைகளை மேற்படி பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பைச் சார்ந்த கண்ணாடி அஸ்கர், அசன் அலீ, சாதிக் அம்பலம், நியாஸ்கான், பிஸ்மி, செய்யது இப்ராஹிம், ஜமீல் ஆகியோர் வாலிநோக்கத்தில் உள்ள பரக்கத்துல்லா என்பவரின் அதிவேக விசைப்படகுகள் மூலமாக மேற்படி நபர்களுக்கு சொந்தமான விசைப்படகுகள் மூலமாகவும் கடத்தி வந்து சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இதுக்குறித்து நான் அளித்த தகவலின் பேரில் இந்திய உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் தமிழக சிறப்பு புலனாய்வுக் குழு ஆகியோர் சிறப்புடன் செயல்பட்டு கைது நடவடிக்கை மேற்கொண்டு திருப்பாலைக்குடி பகுதியில் வெடிபொருட்களை கைப்பற்றியவுடன் இந்திய கடல்பகுதியில் இவர்கள் மூலம் கடத்தப்பட்ட கடத்தல் நடவடிக்கைகள் குறைக்கப்பட்டு பெருமளவில் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த போலி கடத்தல் நடவடிக்கைகளில் பலர் கைது செய்யப்பட்டனர் என்று எஸ்.ஐ. ஜேசுதாஸ் வாக்குமூலம் பதிவு செய்துள்ளார். மேற்படி வாக்குமூலத்தை ஆய்வு செய்தால் இவ்வாக்குமூலத்தின் மூலம் ரைசுதீன் கூறியது முழுக்க முழுக்க வடிகட்டிய பொய் என்பது தெரிய வரும்.
இந்த வாக்குமூலத்தில் உளறியுள்ளதைப் போன்று எவ்வித கைது நடவடிக்கையோ, வெடிபொருட்களோ, ஜெலட்டின் குச்சிகளோ, டெட்டனேட்டர்களோ எங்கும் கைப்பற்றப்பட்டு எந்த ஒரு காவல்நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை. வாக்குமூலத்தில் உள்ள திகில் தீவிரவாத கதைகளை எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் எஸ்.ஐ. ஜேசுதாஸ் ரைசுதீனுடன் இணைந்து பதிவு செய்துள்ளதை பார்க்கும் போது எதிர்வரும் காலங்களில் மேற்கூறப்பட்டுள்ளதைப் போன்று வெடிகுண்டு நாடகங்களை எஸ்.ஐ. ஜேசுதாஸ் எஸ்.பி. மயில்வாகனன் குழுவினர் நடத்துவார்களோ என்ற ஐயமே பொதுமக்களிடம் வெளிப்படுகின்றது.
இதேபோன்று வெடிகுண்டு நாடகங்களை கோவையில் வைத்து கடந்த 2006ம் ஆண்டு நடத்திய உளவுத்துறை உதவி ஆணையர் ரத்தின சபாபதி, பின்னர் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளால் உண்மை கண்டுபிடிக்கப்பட்டு போலீஸே குண்டு வைத்தது ஆதாரங்களுடன் வெளிச்சத்துக்கு வந்துள்ளது அனைவரும் அறிந்த ஒன்றே.
மேற்படி குற்ற எண். 195/15 வழக்கின் முதல் தகவல் அறிக்கையிலும் ரைசுதீனின் வாக்குமூலத்திலும்
ரைசுதீனுக்கு ஏற்பட்ட காயங்கள் பற்றி குறிப்பிடும் போது இடது சுண்டு விரல் துண்டாகி விட்டதாகவும் மண்டையில் வெட்டு விழுந்ததாகவும், தலையிலும், நெற்றி, இடது முழங்கை, இடது மணிக்கட்டு, வலது பக்க முதுகு, வலது பக்க முழங்காலுக்குக் கீழ் இடது பக்க தொடை பகுதி மற்றும் புட்டத்திலும் சரமாரியாக இரும்பு கம்பி மற்றும் இரும்பு பைப்பாலும் அடி விழுந்ததாக பொய்யாக ஜோடித்து தயாரிக்கப்பட்டுள்ளது. ரைசுதீனுக்கு சிகிச்சை அளித்துள்ள மருத்துவர் அவரது காயங்கள் பற்றி கீழ்க்கண்டவாறு பதிவு செய்துள்ளார்.
- A Laceration In left Frontal Region 5X2X 2cm
- A Laceration in left little fi nger 1X0.5 cm
- Abrasion in right frontal region 5X1cm
இவ்வாறு மேற்படி ரைசுதீனுக்கு சிராய்ப்புக்காயங்கள் மட்டுமே வலது மற்றும் இடது முன்பக்க பகுதிகளிலும் இடது சுண்டுவிரலிலும் ஏற்பட்டுள்ளதாக மருத்துவச் சான்று கூறுகின்றது. உண்மை இவ்வாறு இருக்க பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் மீது தீவிரவாத பழி போடவும், பாப்புலர் ஃப்ரண்டின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கவும் ரைசுதீனை பகடைக்காயாகப் பயன்படுத்தி மேற்படி எஸ்.ஐ. ஜேசுதாஸ் மற்றும் எஸ்.பி.மயில்வாகனன் குழுவினர் திட்டமிட்டு மேற்படி வழக்கை ஜோடித்து ஒரு பெரும் நாடகத்தையே அரங்கேற்றி முடித்துள்ளனர்.
பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சமூக விரோதியான ரைசுதீனுடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பது எதனால் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்? மேலும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் தொடர்ந்து இதுபோன்ற மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. இதனிடையே மயில்வாகணன் சமீபத்தில் தஞ்சை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். முஸ்லிம் விரோதபோக்குடன் செயல்படும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்ட கைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிக்கக்கோரியும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றது. இப்பொய் வழக்குகளை கண்டித்து அக்டோபர் 21 அன்று இராமநாதபுரத்தில் மாநில துணைத் தலைவர் ஏ.ஹாலித் முஹம்மது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமும் அக்டோபர் 26 அன்று மாவட்ட செயலாளர் அப்துல் நாசர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 22 அன்று பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இப்பொய் வழக்குகளை கண்டித்து மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் எம். முஹம்மது இஸ்மாயில், மாநில துணைத்தலைவர் ஏ. ஹாலித் முஹம்மது, மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் (NCHRO) தலைவர் வழக்கறிஞர் பவானி பா. மோகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
அநீதிக்கெதிராக் தங்களின் போராட்டம் தொடரும் என்றும், சட்டப்போராட்டம் மற்றும் மக்கள் திரள் போராட்டங்களின் மூலம் இந்தப் பொய் வழக்குகளையும் முறியடிப்போம் என்று பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பொய் வழக்குகள் சமூகப் போராளிகளை
என்ன செய்துவிட முடியும்!
டிசம்பர் 2015 புதிய விடியலில் வெளியான கட்டுரை
You must be logged in to post a comment.