உச்சநீதிமன்ற தீர்ப்பும், சமச்சீரான உரிமையும்!

உச்சநீதிமன்ற தீர்ப்பும், சமச்சீரான உரிமையும்!

பொது இடங்களை கால வரையின்றி ஆக்கிரமித்து நடத்தப்படும் போராட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயகமும், எதிர் கருத்துகளும் கைக்கோர்த்து செல்லவேண்டும். ஆனால், எதிர் கருத்துகளை தெரிவிக்கும் போராட்டங்களை நிச்சயிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நடத்த வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லி ஷாஹின்பாகில் 2019 டிசம்பர் 14 முதல் 2020 மார்ச் வரை நடந்த பெண்களின் அமைதியான தர்ணா போராட்டத்திற்கு எதிராக வழக்கறிஞர் அமித் ஷாஹினி, முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ. நந்த கிஷோர் கார்க் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அனிருத்தா போஸ், கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

‘‘பொது இடங்களை கால வரையின்றி ஆக்கிரமித்து போராடுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. ஷாகின் பாக் பகுதியோ அல்லது வேறு எந்த பகுதியோ பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக போராட்டங்கள் அமைகின்றன. அமைதியாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் உரிமையை நாங்கள் மதிக்கிறோம். அதேசமயம் அது நிச்சயிக்கப்பட்ட, அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நடைபெற வேண்டும். பொது மக்களுக்கு இடையூறு தரும் விதமாக பொது இடங்களை கால வரையின்று ஆக்கிரமித்து போராட்டம் நடத்தினால் அவர்களை அப்புறப்படுத்த நீதிமன்றத்தின் அனுமதிக்காக அதிகாரிகள் காத்திருக்க தேவையில்லை” என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் இது தொடர்பான மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் ஆரம்ப விசாரணையின் போதே பொது இடங்களில் போராட்டம் நடத்த அனுமதிக்கக்கூடாது என்று கண்டிப்புடன் தெரிவித்திருந்தது. ‘மக்கள் எல்லா இடங்களிலும் போராட்டம் நடத்த துவங்கினால் என்னவாகும்?’ என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம் இவ்விஷயம் தொடர்பாக போராட்டக்காரர்களுடன் பேசுவதற்காக வழக்கறிஞர்கள் குழுவை நியமித்தது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு சாலையின் ஒரு பகுதியை போக்குவரத்திற்கு ஒதுக்கி கொடுத்த போராட்டக்காரர்கள் போராட்டத்தை வாபஸ் பெற முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். பேச்சுவார்த்தையின் விபரங்களை மத்தியஸ்தர்கள் பிப்ரவரி 24 முத்திரையிடப்பட்ட உறையில் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அதனிடையே மார்ச் மாதம் கோவிட் பெருந்தொற்று நோய் டெல்லியில் தீவிரமாக பரவியபோது மார்ச் 24 அன்று காவல்துறை போராட்ட பந்தல் மற்றும் தடுப்புகளை அகற்றியது. அதனை தொடர்ந்து நோய் பரவலின் காரணமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால், போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் மனுதாரர்கள் உறுதியாக இருந்ததை தொடர்ந்து நீதிமன்றம் இந்த வழக்கை நடத்த முடிவு செய்தது. கடந்த செப்டம்பர் 21 அன்று இந்த மனுவில் இறுதி வாதம் கேட்கும்போது ஒவ்வொரு நிகழ்வும் மாறுபட்டது என்பதால் போராட்டத்திற்கு சர்வதேச அளவில் ஒரு கொள்கை எதுவும் உருவாக்க முடியாது என்றும் போராடுவதற்கான உரிமையும், நடமாடுவதற்கான உரிமையும் மோதும்போது சமச்சீரான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. இந்த முந்தைய அவதானிப்புகளையெல்லாம் அடிகோடிட்டு பாதையில் தடைகளை ஏற்படுத்தும் போராட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தீர்ப்பளித்துள்ளது.

சட்டரீதியான எதிர்ப்பு ஜனநாயகத்தின் இன்றியமையாத, தனித்துவமான பண்பாகும். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பெரும்பான்மையினரா அல்லது சிறுபான்மையினரா? அவர்கள் எழுப்பும் பிரச்சனை சரியா? தவறா? என்பதெல்லாம் முக்கியமல்ல. அரசியலமைப்பு சட்டத்தின் 19-வது பிரிவு பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவொரு பிரச்சனையிலும் தங்களது கவலையையும், கோபத்தையும் வெளிப்படுத்தும் உரிமையை வழங்குகிறது. அதனால்தான், இன்று வரை, கீழ் நீதிமன்றங்கள் முதல் உச்சநீதிமன்றம் வரை, ஜனநாயகத்தின் இந்த சிறப்புக்குரிய தத்துவத்தை நிலைநாட்டும் வகையில் தீர்ப்புகளை வழங்கியுள்ளன.

1972 செப்டம்பர் 15ல் ஹிம்மத்லால் கே.ஷா எதிர் காவல் ஆணையர் அகமதாபாத் வழக்கு, 2011 ஜூன் 5ல் அன்னா ஹசாரே ராம்லீலா மைதான போராட்ட வழக்கு, 2018 ஜூலை 23ல் மஸ்தூர் கிஸான் சக்தி சங்காதன் டெல்லி ஜந்தர் மந்தர் வழக்கு ஆகியவற்றில் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கான ஜனநாயக உரிமையை நிலைநாட்டும் வகையில் அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவாகவே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கும், ஒன்று கூடவும், தர்ணா உள்ளிட்ட அமைதி வழியிலான போராட்டங்களை நடத்துவதற்குமான உரிமையை ஜனநாயகத்தின் அடிப்படை தத்துவமாகவே அன்றெல்லாம் உச்சநீதிமன்றம் கண்டது. இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் அரசின் முடிவுகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் எதிராக குரல் எழுப்புவதற்கான உரிமை மக்களுக்கு இருக்கிறது. அரசு அதற்கு மதிப்பளித்து அத்தகைய உரிமைகளை ஊக்குவிக்கவும் வேண்டும். கருத்து சுதந்திரத்தை அதன் ஒட்டுமொத்த தன்மையை கவனித்து உதவவேண்டும்.

‘‘அரசின் சட்டமியற்றும், ஆட்சி நிர்வாக அதிகாரத்தை பயன்படுத்தி நியாயமான கட்டுப்பாடுகளின் பெயரால் இத்தகைய குடிமக்களின் உரிமைகளின் கழுத்தை நெரிக்க கூடாது” என்று ராம்லீலா மைதான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

ஷாஹின்பாக் வழக்கிலும் எதிர்ப்பை தெரிவிக்கவும், ஒன்று கூடுவதற்குமான அரசியலமைப்பு சட்டம் வழங்கும் சுதந்திரத்தை விவரிக்கும்போது உரிமையை பாதுகாத்தல் சமச்சீராக இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நினைவூட்டுகிறது. ஆனால், நீதிமன்ற தீர்ப்பில் அந்த சமச்சீரான நிலையை காண முடியவில்லை. அதுமட்டுமல்ல, பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக நடத்தும் போராட்டங்களை கூட தொந்தரவாக கருதுபவர்களுக்கு ஆதரவான நிலையே தீர்ப்பில் காணப்படுகிறது.