உத்திர பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ.வினால் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் கொலை?

உத்திர பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ.வினால் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் கொலை?

உத்தர பிரதேச மாநிலத்தில் தன்னை பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கற்பழித்துவிட்டதாக புகார் தெரிவித்த 18 வயது பெண், தன் தந்தை காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக  தெரிவித்துள்ளார். அவரை காவல் நிலையத்தில் வைத்து அப்பெண்ணை கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

கடந்த வருடம் தன்னை உன்னாவ் பகுதியின் பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது நண்பர்கள் கற்பழித்துவிட்டதாக அப்பெண் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். ஆனால் இந்த புகாரில் பாஜக எம்.எல்.ஏ. வின் பெயர் சேர்கப்படாததை எதிர்த்து அவர் தொடர்ச்சியாக பல முறையீடுகளை செய்து வந்தார். சமீபத்தில் உத்திர பிரதேச முதல்வர் யோகி அதித்யநாத் வீட்டின் முன்பாக தனக்கு நீதி கேட்டு அப்பெண் தற்கொலை முயற்சியும் மேற்கொண்டார்.

இந்நிலையில் தனது தந்தையை பாஜக எம்.எல்.ஏ. வின் ஆதரவாளர்கள் சிறையில் வைத்து அடித்து துன்புறுத்தி கொலை செய்துவிட்டதாக அப்பெண் பத்திரிகையாளர்களிடம் முறையிட்டுள்ளார். இன்னும் தங்களுக்கு அவர்கள் முன்னதாக கொலை மிரட்டல்களை விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்டவரின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் காவல்நிலையத்தில் பல நாட்கள் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட அவரை காவலர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஆறு காவலர்களை உத்திர பிரதேச அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை ஒன்றிக்கும் உத்திரவிடப்பட்டுள்ளதாக மாநில அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது. இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜாக வின் கோஷமான பெண் குழந்தைகளை பாதுகாருங்கள், என்பதை பாஜக அரசில் “பெண் குழந்தைகளை பாதுகாருங்கள், அதனால் மரணமடைவீர்கள்” என்று மாற்றி பதிவிட்டுள்ளார். மேலும், “ஒரு இளம்பெண் பாஜக எம்.எல்.ஏ. மீது கற்பழிப்பு குற்றம் சுமத்தியுள்ளார். அந்த எம்.எல்.ஏ.வை கைது செய்வதற்கு பதிலாக காவல்துறை அவரது தந்தையை கைது செய்துள்ளது. பின்னர் அவரும் காவல்நிலையத்தில் வைத்து கொல்லப்பட்டுள்ளார். ஆனால் அந்த எம்.எல்.ஏ. இன்னும் சுதந்திரமாக சுற்றி வருகிறார்.” என்று தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பத்திரிகையாளர் சந்திப்பில், “இந்து ஒரு வெட்கக்கேடான சம்பவம். அந்த பாஜக எம்.எல்.ஏ. நேரடியாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். அதித்யநாத் அவரது முதல்வர் அலுவலகத்தில் நீடிக்க கூடாது. இந்த பெண்ணிற்கு நடைபெற்ற அநீதியில் இருந்து அப்பெண்ணை பாதுகாக்க முடியாத காரணத்தால் அதற்கு தார்மீக பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.