உலக மகளிர் தினம் மார்ச் 08

உலக மகளிர் தினம் மார்ச் 08

உலக வரலாற்றில் ‘உலக மகளிர் தினம்’ அறிவிக்கப்பட்ட சம்பவமே வினோதமானது, விசித்திரமானது. 18ம் நூற்றாண்டில் அமெரிக்கத் தொழிற்சாலைகளில் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் பணியாற்றினர். பெண்கள் வீட்டிலேயே முடக்கி வைக்கப்பட்டனர். 1789ம் ஆண்டு பிரன்சு புரட்சியின் போது “சுதந்திரம், சமத்துவம், பிரதிநிதித்துவம்” என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின் அமெரிக்கப் பெண்களும் இப்போராட்டத்தின் தொடர்ச்சியாக அமெரிக்காவில் போராடத் தொடங்கினர். 1857 மார்ச் 08 அன்று கிளர்ச்சியில் ஈடுபட்ட பெண்கள் கல்வி, ஊதியத்தில் சமஉரிமை கோரிக்கைகளை முன்வைத்தனர். அரசாங்க உதவியுடன் ஆணாதிக்க சமூகத்தால் இந்த போராட்டமானது அடக்கி ஒடுக்கப்பட்டது. அதன்பின் 1910ல் நடைபெற்ற பெண்கள் உரிமை மாநாட்டில் மார்ச் 08 மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டது. தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறு சமஉரிமை, சம ஊதியம் கேட்டு போராடியதற்காகவே இத்தினம் உலக மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டதே தவிர வெற்றிக்கான தினமாகவோ அல்லது வெற்றிக்கு வழிவகுக்கும் சட்டம் இயற்றப்பட்ட தினமாகவோ அறிவிக்கப்படவில்லை. போராட்டத்தால் அறிவிக்கப்பட்ட தினம் என்பதாலோ என்னவோ, இன்றளவும் பெண்களின் வாழ்க்கை போராட்டத்திலேயே தொடர்கிறது.

கருத்து வெளியிட்ட காரணத்தால் காட்டு மிராண்டித்தனமாக கொல்லப்பட்ட “கல்புர்கி” புகைப்படத்தை கையில் மறைத்தவர்களாக சுதந்திர தினம் கொண்டாடுவதுபோல், சனாதன சூழ்ச்சியால் மண்ணில் புதைந்த மாணவன் ரோஹித் வெமுலாவை காவுகொடுத்து கல்வி தினம் கொண்டாடுவது போல், பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் அடக்கி ஒடுக்கப்படும் சுவடுகளோடுதான் கடந்து செல்கிறது உலக மகளிர் தினம்.

அந்த வரிசையில் சிசுவதை, பாலியல் தொந்தரவு, கற்பழிப்பு, பாரபட்ச நீதி என அவலக்குரல்களுக்கு மத்தியில் வாழ்த்து சொல்வதுடன் கடந்து செல்லப்படுகிறது.

வரலாற்றை உற்று நோக்குபவர்கள் இதற்கான நிரந்தரத் தீர்வு இருக்கவே செய்கின்றது என்ற உண்மையை உணர்ந்து கொள்ளலாம்.

பெண்குழந்தை பிறந்ததே பெரும் கேவலம் என எண்ணி, பிறந்த குழந்தைகளை இரக்கமின்றி மண்ணில் புதைத்த கல்மனம் கொண்ட அரேபியர்களுக்கு மத்தியில்… பெண் குழந்தை பிறப்பதே “பரக்கத்” (அபிவிருத்தி) எனவும், அப்பெண் குழந்தைகளை பேணி, பாதுகாத்து வளர்த்து திருமணம் செய்து வைக்கும் பெற்றோருக்கு சுவனத்தில் வசந்தமான வாழ்க்கை உள்ளது எனவும் நற்செய்தி கூறி ஒட்டுமொத்த பெண்ணினத்திற்குமே மிகப்பெரும் விடியலை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பெற்றுத் தந்தார்கள்.

ஆண் குழந்தை சுமக்கப்படும் அதே கருவில்தான் பெண் குழந்தையும் சுமக்கப்படுகின்றது. வளரும் காலங்களில் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் அதிக சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. இச்சூழலில் அவர்களுகென்று பாதுகாப்பு வளையமாக அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது சொத்துரிமை தான். அதற்கான தீர்வை இன்றளவும் உலக சமூகம் எட்டவில்லை.

உலக மகளிர் தினத்தின் மூலக்காரமாக கூறப்படுவது இரண்டு. சமஉரிமையோடு கொண்ட சுதந்திரம், அலுவலகங்களில் பிரிநிதித்துவம். பெண்கள் பணிக்கு சென்றுதான் தங்கள் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்ததே இதற்கு காரணம். அதுவும் கூட இப்பிரன்சு புரட்சியானது பெண் சமூகத்தின் மத்தியில் பூதாகரமாக வெடித்து அப்போராட்டத்தில் பல உயிர்கள் பலி வாங்கிய பின்னரே பெண்ணின தேவைகளை இவ்வுலகம் உணர்ந்தது. ஆனால் பெண்களுக்கு சொத்தில் உரிய பங்கை கொடுத்தே ஆக வேண்டும் என கட்டாய உத்தரவிட்டு இன்றளவும் அதனை செயல்படுத்தி வருகிறது இஸ்லாம். எந்த போராட்டங்களும், எவ்வித உயிர் பலியும் இல்லாமல் பெண்ணின் தேவைகளை கருத்தில் கொண்டு தேடி வந்து கைகளில் கொடுக்கப்பட்ட அறிவிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் எதிர்கொள்ளும் மற்றொரு முக்கிய பிரச்சனை பாதுகாப்பற்ற சூழல். பெண் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் பாலியல் தொந்தரவு, கற்பழிப்பு, என இவைகளை ஒடுக்க இன்றளவும் பல சட்டங்களும், அதில் பல திருத்தங்களும் கொண்டு வரப்பட்டாலும் பெண் சமூகத்தின் மீது விழும் உயிர் வாங்கும் கல்லடிகள் இம்மி அளவும் குறையவில்லை. மாறாக அக்குற்றங்களின் வழிமுறைகள் தான் புதுப்புது வடிவங்களையெடுத்து நடைமுறை படுத்தப்படுகின்றன. பிரபல எழுத்தாளர் வலம்புரி ஜான் அவர்கள் ‘‘மற்ற தத்துவங்கள் மனிதனின் நோயிற்கு காரணமான கொசுவை ஒழிக்க திட்டமிடுகின்றன. ஆனால் இஸ்லாம் மட்டுமே மனிதனின் நோயிற்கு காரணமான கொசுவை ஒழிக்கவும், கொசு உருவாக காரணமான சாக்கடையை சுத்தம் செய்யவும் வழிவகை செய்கிறது” என தெளிவுபட கூறினார். அதேபோல் மேல் கூறிய குற்றங்களுக்கு மூலகாரணங்களை கடுமையாக கண்டிப்பதோடு களையும் வழி முறைகளையும் எடுத்தியம்பி பெண் சமூகத்தின் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதி செய்கிறது இஸ்லாம்.

நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும், நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், இறைவழிபாடுள்ள ஆண்களும் பெண்களும். உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும், உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும் தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தங்கள் வெட்கத் தளங்களை (கற்பை) காத்துக் கொள்ளும் ஆண்களும் பெண்களும் அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான். (அல்குர்ஆன் 33:35)

A. ரஜியா பேகம்