உளமாற்றம்

உளமாற்றம்

இறை நெருக்கம்

“எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அறிவிக்கிறார்கள். (நூல்:புகாரி)

கடமையான வணக்கங்கள் மற்றும் நஃபிலான(கூடுதலான) வணக்கங்கள் மூலம் எவ்வளவு தூரம் ஒரு அடியானால் அல்லாஹ்வை நெருங்க முடியும் என்பதற்கான தெளிவை இந்த ஹதீஸ் தருகிறது. இந்நிலைக்கு உயர்பவர்கள் அல்லாஹ்வின் நேசர்களாக மாறுகின்றனர். ஆகவே அல்லாஹ்வின் நேசர்களுடன் பகைத்துக் கொள்வது அல்லாஹ்வுடன் போர் செய்வதற்கு தயாராவது போன்றாகும். இறைவனின் நெருக்கத்தை பெறுவதை விட மதிப்புமிக்கது எதுவும் ஒரு முஃமினுக்கு இல்லை. கடமையான வணக்கங்களைப் போலவே நஃபிலான வணக்கங்களையும் கடைப்பிடிக்க வேண்டும்.

நமது நிலை என்ன? சமூக வலைதளங்களில் விலை மதிப்பற்ற நேரத்தை வீணடிக்கிறோம். கிண்டல், கேலி, வீண் பொழுதுபோக்குகளில் மூழ்குகிறோம். சகோதரர்களே! நமக்கு இறை நெருக்கம் வேண்டாமா? இறை நெருக்கத்தை பெறுவது அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். நமது வாழ்க்கை இறைவனின் பாதுகாப்பில் இருந்து சற்றும் இடம் பெயராது. பின்னர் நமது காது, கை, கண், கால் எல்லாம் அல்லாஹ்வின் விருப்பத்திற்கு இணங்க இயங்கும். நமது அனைத்து பிரார்த்தனைகளுக்கும் பதில் கிடைக்கும். நமது வாழ்க்கை அல்லாஹ் விரும்பிய நிலையில் அமையும். நாம் அபயம் தேடினால் அல்லாஹ் அபயம் அளிக்கிறான். அன்பிற்கினிய சகோதரர்களே! அல்லாஹ்விடம் அதிகம் நெருங்குவதற்கு கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் இனி பாழாக்கமாட்டேன் என்று உறுதி எடுக்கவேண்டும். அல்லாஹ் அருள்புரிவானாக!