உ.பி மருத்துவர் கபீல்கானுக்கு எதிரான இரண்டாவது பணியிடை நீக்கம் – தடை விதித்த அலகாபாத் உயர்நீதிமன்றம்.!

உத்தர பிரதேசம் கோரக்பூரின் பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரியில், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 60 குழந்தைகள் உயிரிழந்த போது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி மருத்துவர் கஃபீல் கான் முதல்முறையாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். பின்னர், பஹ்ரைச் மாவட்ட மருத்துவமனையில் கட்டாயமாக நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தது மற்றும் அரசின் கொள்கைகளை விமர்சித்ததற்காக ஜூலை 31, 2019 ஆம் தேதி அவர் இரண்டாவது முறையாக இடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்காக அவரை தேசவிரோத சட்டத்தில் கைது செய்து சிறையில் கொடுமைப்படுத்தியது யோகி அரசு. பின்னர் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு குற்றமற்றவர் என நிரூபித்து தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

மருத்துவர் கஃபீல்கான் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த நீதிபதி சரல் ஸ்ரீவத்சவா, “கபீல் கான் மீதான விசாரணையை ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார். மனுதாரர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், அவர் அவ்வாறு செய்யாவிட்டால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன் விசாரணையை முடிக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
நவம்பர் 11 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம், இது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஜூலை 31, 2019 ஆம் தேதி இடைநீக்கம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிய நிலையில், விசாரணை இன்னும் நிறைவடையவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மனுதாரர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பதால், இரண்டாவது பணியிடை நீக்க உத்தரவுக்கு அவசியம் இல்லை. மேலும், இது போன்ற உத்தரவு வழங்க மாநில அரசுக்கு அனுமதியில்லை என மனுதாரரின் வழக்கறிஞர் வாதிட்டார்.