என் புரட்சி 23: கறுப்பர் உலகின் நம்பிக்கை நாயகன்

என் புரட்சி 23: கறுப்பர் உலகின் நம்பிக்கை நாயகன்

திங்கள் இரவுகளில் தொண்டர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. செவ்வாய் இரவுதோறும் ‘ஒற்றுமை இரவு’ நடத்தப்பட்டது. அன்று பள்ளிவாசல்களில் ஒன்றுகூடும் முஸ்லிம் குடும்பங்கள் தங்களுக்குள் இனிப்புகளும் பரிசுகளும் பரிமாறிக் கொண்டு, தங்களுக்கிடையில் உறவை வலுப்படுத்திக் கொண்டனர்.

புதன்கிழமை இரவு மாணவர்களுக்கான இஸ்லாமிய கேள்வி&-பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Fruits Of Islamதொண்டர் படை போல, முஸ்லிம் சிறுமிகளுக்கு வியாழன் தோறும் வகுப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டன. Muslim GirlsTraining (MGT) மூலம் நடத்தப்பட்ட இந்த வகுப்புகளில், மனைவியின் உரிமைகள், -கடமைகள், நல்ல தாயாக குழந்தைகளை வளர்ப்பது, கணவனை கவனித்துக் கொள்வதினூடாக குடும்பத்தை வலுப்படுத்துவது, சகோதரியாக, மகளாக, அன்னையாக பல்வேறு பரிமாணம் எடுக்கும் பெண்ணே இஸ்லாமிய குடும்ப அமைப்பின் அடிப்படை போன்ற கலாச்சாரம் சார்ந்த மாண்புகள் போதிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை இரவுகளில் பண்பாட்டு இரவு என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கணவன்-&மனைவி கலந்து கொண்டனர். அவர்களுக்கு இஸ்லாமிய குடும்ப அமைப்பு குறித்து வகுப்புகள் எடுக்கப்பட்டன. சனிக்கிழமை தோறும் அமைப்பில் உள்ள மற்ற சகோதரர்களின் வீடுகளுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தோம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளிவாசலில் கூட்டங்கள் நடைபெற்றது. இதில் புதிதாக இஸ்லாத்தை அறிந்து கொள்ள விரும்புபவர்களை அழைத்து வந்து, அவர்களுக்கு இஸ்லாம் குறித்தும், நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பு குறித்தும் விளக்கப்பட்டது. ஞாயிறன்று நடக்கும் கூட்டங்களில் பெரும்பாலும் அனைத்து உறுப்பினர்களும் பங்கெடுத்துக் கொண்டு, அமைப்பின் வளர்ச்சி பற்றி விவாதிப்போம்.

வியாழக்கிழமை நடைபெற்ற முஸ்லிம் மகளிருக்கான நிகழ்ச்சி ஒன்றில்தான் அந்தப் பெண்ணைச் சந்தித்தேன். அவர் பெயர் பெட்டி சாண்டர். அமைப்பில் இணைந்து பெட்டி X ஆனார். டெட்ராய்ட் நகரைச் சேர்ந்த அவர், நியூயார்க்கில் உள்ள செவிலியர் பள்ளியில் பயின்று வந்தார். இறுதியாண்டு படித்து வந்த அவர், நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இயக்கத்தில் இணைந்தார். முஸ்லிம் மகளிருக்கு சுகாதாரம், மருத்துவம் குறித்த பயிற்சிகளை அளித்துக் கொண்டிருக்கும் போதுதான் அவர் என் கருத்தைக் கவர்ந்தார். Muslim GirlsTrainingவகுப்புகளுக்குச் சென்று, அவர்கள் எப்படி பாடத்தை கவனிக்கிறார்கள் என்று பெட்டி X-டம் கேட்டேன். அப்போது எங்கள் இருவருக்கிடையே அமைப்பு சார்ந்து சிறு உரையாடல் நடக்கும். அவ்வளவுதான்.

அவருடைய இயக்க ஈடுபாடு எங்களைக் கவர்ந்தது. நான் அவரையே நினைத்துக் கொண்டிருந்தேன். இதனை பெட்டி X கூட எதிர்பார்த்திருக்க மாட்டார். அவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்பினேன். மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து அறிந்து கொள்ள அருங்காட்சியகத்திற்கு இருவரும் சென்றோம்.

‘உங்க பெற்றோர்கள் முஸ்லிமாகிட்டாங்களா..?’ காரில் செல்லும் போது நான் பேச்சு கொடுத்தேன். பள்ளிவாசல்களின் இமாம் என்ற முறையில், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட இளம் வயதினரின் பிரச்சினைகளை நாங்கள் அறிந்திருந்தோம்.

‘இல்ல… எனக்கு பெற்றோர்கள் இல்லை. வளர்ப்பு பெற்றோர்களின் பராமரிப்பில்தான் நான் படித்து வருகிறேன்.’

‘ஓஹ்… மன்னிக்கனும்… அவங்க தரப்புல எதிர்வினை எப்படி இருந்தது?’

‘இஸ்லாத்திலிருந்து விலகினால்தான், தொடர்ந்து படிப்புக்கு பண உதவி செய்ய முடியும்னு சொல்லிட்டாங்க…’

‘உங்களுடைய இந்தப் பிரச்சினை பற்றி, ஒரு சகோதரி என்னிடம் தெரிவித்திருந்தார். உறுதிப்படுத்தத்தான் இதையெல்லாம் நான் கேட்டேன்… இப்ப பணத்துக்கு என்ன பண்றீங்க..?’

‘நான் படித்து வரும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள குழந்தைகளுக்கு, இப்ப டியூசன் எடுக்குறேன்…’

திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தால், இவரைத்தான் மணம் புரிந்து கொள்ள வேண்டும் என்று அப்போது உறுதி எடுத்துக் கொண்டேன்.

——–*****

அந்தச் செய்தி எனக்கு உற்சாகமூட்டுவதாகவும், எதிர்கால வளமான வாழ்க்கைக்கு நம்பிக்கை தருவதாகவும் இருந்தது. அதிகார பீடத்தில் கால் பதிப்பதற்கு கட்டியங்கூறும் கணத்தை கறுப்பர்கள் தொட்டுவிட்டதாக நம்பினேன்.

பிறப்பில் நான் ஓர் அமெரிக்க கறுப்பனாக இருந்தாலும், என் பூர்வீகம் ஆஃப்ரிக்காதான் என்ற பிரக்ஞை எப்போதும் என்னிடம் துடிப்போடு இருந்தது. நிறத்தில் மட்டுமல்ல, என் இரத்தத்திலும் ஆஃப்ரிக்க பாரம்பரியத்தின் கூறுகள் மிச்சமிருப்பதாகவே உணர்ந்தேன்.

நடனம் ஆடுவதன் மீதான என் பெரு ஆர்வம், தனித்த தீவுகளாக அல்லாமல் சமூகமாக வாழ்வதில் எனக்கிருந்த பெரு விருப்பம், அதிகார அக்கிரமத்திற்கு கிஞ்சிற்றும் அடிபணியாத விடுதலை உணர்வு – இதெல்லாம் என் குருதி அணுக்களில் ஒட்டிக் கொண்டிருந்த ஆஃப்ரிக்க கலாச்சாரத்தின் எச்சங்கள் என்றே நான் கருதினேன்.

அது மட்டுமல்ல, என் தந்தை அறிமுகப்படுத்திய மார்கஸ் கார்வியும் அவரது போராட்டமும் நான் முன்னோக்க வேண்டிய திசைவழி ஆஃப்ரிக்காதான் என்பதை எப்போதும் என் நினைவில் நிறுத்தியிருந்தது.

இதனால் அந்தச் செய்தியை என்னால் சாதாரணமாக கடந்து செல்ல முடியவில்லை.

ஐரோப்பிய மேலாதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளில், ஆஃப்ரிக்க நிலப்பரப்பில் முதன் முதலாக விடுதலை அடைகிறது கானா &- இதுதான் அந்தச் செய்தி.

கறுப்பர்கள் வாழ்ந்த பிரதேசத்திற்கு, நிலப்பரப்பிற்கு தங்கள் மொழியில் பெயர் வைக்கக்கூட சுதந்திரம் இல்லாத சமூகமாகத்தான் கறுப்பினம் ஆஃப்ரிக்காவில் வாழ்ந்திருக்கிறது. வெள்ளையன் காலனியாக்கிய பகுதிகளில், தான் விரும்பிய பெயரையே அந்தந்த பிரதேசங்களுக்கு சூட்டியிருக்கிறான் என்ற வரலாற்றை அறியும் போது, வரலாற்று விழிப்புணர்வுள்ள ஒரு கறுப்பன் துயர் அடையாமல் இருக்க முடியாது.

மேற்கு ஆஃப்ரிக்காவின் வளமிக்க நிலப்பரப்புக்கு, ஐரோப்பிய வெள்ளையன் அளித்த அடையாளம்தான் ‘தங்க கடற்கரை’(Gold Coast). அவ்வளவு தங்கத்தை அள்ளிக் கொடுத்த அந்தப் பூமிக்கு வெள்ளையனால் அப்படித்தான் நாமம் சூட்ட முடியும். தங்கத்தை விட மதிப்பு வாய்ந்த வணிகமும் கோல்ட் கோஸ்ட் பகுதியில் நடந்தது. அதுதான் அடிமை வணிகம்.

வேட்டையாடுவதற்கு தேவையான சில ஆயுதங்களையும், சில அணிமணிகளையும். அதாவது அற்பமானதைக் கொடுத்து விட்டு, தங்கத்தையும் அடிமையையும் மாற்றாக பெற்றுக் கொள்ளும் பகாசுர கொள்ளை வணிகத்தை ஐரோப்பியர்கள் மேற்கொண்டனர் கோல்ட் கோஸ்ட் பகுதியில்!

15-ம் நூற்றாண்டின் இறுதியில், இப்படி கொள்ளையடித்தும் ஏமாற்றியும் ஐரோப்பாவை வளப்படுத்திக் கொண்டிருந்தார்கள் வெள்ளையர்கள். ஐரோப்பிய வெள்ளையர்கள், அமெரிக்க நிலத்தை ஆக்கிரமித்து அங்கிருந்த பூர்வ குடிகளை கொன்றொழித்த பின், அடிமைச் சேவகம் செய்ய ஆஃப்ரிக்காவிலிருந்து கறுப்பர்கள் கடத்தி வரப்பட்டனர். மனிதச் சரக்கு (Human Logistics) இன்னும் கொள்ளை லாபத்தைக் கொடுத்தது. இந்த கோல்ட் கோஸ்ட் பகுதியிலிருந்துதான் முதன்முதலில் கறுப்பர்கள் ‘மனிதச் சரக்காக’ ஏற்றுமதி செய்யப்பட்ட கொடூரம் வரலாற்றில் அரங்கேற்றப்படுகிறது.

இங்கிலாந்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து கொண்டிருந்த க்வாமே நுக்ருமா, கோல்ட் கோஸ்ட் திரும்புகிறார். ஐக்கிய கோல்ட் கோஸ்ட் மாநாட்டுக் கட்சி துவங்கப்பட்டு, 1946-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் புதிய கட்சி பெரும்பான்மையாக வெற்றி பெறுகிறது. ஆனால் புதிய சட்டத் திருத்தத்திற்கு, பிரிட்டிஷ் அரசு ஒப்புக் கொள்ளவில்லை. ‘இப்போதே சுய அதிகாரம்’ தேவை என்ற நுக்ருமாவின் குரலால், கட்சிக்குள் கருத்து வேறுபாடு எழுகிறது. இதனால், தனிக் கட்சியைத் தொடங்க க்வாமே நுக்ருமாவின் ஆதரவாளர்கள் அவரை வற்புறுத்துகின்றனர்.

மக்கள் மாநாட்டுக் கட்சி என்ற கட்சியை, 1949-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நுக்ருமா தொடங்குகிறார். தன்னாட்சியுடன் கூடிய சட்டசபையை அமைக்க, மக்கள் மாநாட்டுக் கட்சி ஆளுநருக்கு கோரிக்கை விடுக்கிறது. ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆளுநர் இதற்கு செவிசாய்க்கவில்லை.

மக்கள் மாநாட்டுக் கட்சி பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறது. இந்த வேலை நிறுத்தத்தில் வன்முறை ஏற்பட்டதால், மக்கள் மாநாட்டுக் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். நுக்ருமா ஆக்ராவில் உள்ள ஜேம்ஸ் ஃபோர்ட் சிறையில் தள்ளப்படுகிறார்.

சிறையில் இருந்தபடியே கட்சியை வழிநடத்திய நுக்ருமா, கழிப்பறையில் வைத்திருக்கும் தாள்களில் கட்சி நிர்வாகிகளுக்கான கட்டளைகளை எழுதி ரகசியமாக அனுப்பி வைத்து, கட்டுக்கோப்பாக கட்சியை செயல்படுத்தினார். இதேபோல தேர்தல் அறிக்கையையும் சுருக்கமாக கழிப்பறை பேப்பரிலேயே எழுதி ரகசியமாக வெளியிடுகிறார். அந்தச் சுருக்கமான தேர்தல் அறிக்கை மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று, 1951-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மக்கள் மாநாட்டுக் கட்சி அபார வெற்றி பெற்றது. சிறையில் இருந்தவாறே ஆக்ரா பகுதிக்கு போட்டியிட்ட க்வாமே நுக்ருமாவும் வெற்றி பெறுகிறார்.

பல்வேறு போராட்டங்களுக்குப் பின், கோல்ட் கோஸ்ட் பகுதி, மார்ச் 6-ம் தேதி, 1957ம் ஆண்டு உலக வரைபடத்தில் சுதந்திர நாடாக தன்னை பதிவு செய்து கொண்டது ‘கானா’ என்ற பெயரில். மேற்கு ஆஃப்ரிக்காவில் பேசப்படும் மாண்டே மொழிக் குடும்பத்தில் கானா என்ற சொல்லுக்கு ‘போர்க்கலையில் தேர்ச்சி பெற்ற அரசன்’ என்பது பொருள்.

நூற்றாண்டுக்கும் மேலாக பிரிட்டனின் காலனியாக அடைபட்டுக் கிடந்த ஆஃப்ரிக்க மனம் சுதந்திரமாக சிந்திக்க தொடங்கியது. என்னைப் போலவே, வெள்ளையர்களின் காலனியாதிக்கத்தை எதிர்த்து வரும் களப் போராளிகளுக்கு கானாவின் விடுதலை நம்பிக்கையூட்டும் வரலாற்றின் தொடக்கமாக தெரிந்தது.

சுதந்திர கானாவின் முதல் அதிபர் க்வாமே நுக்ருமாவின், அடிமைத்தளையிலிருந்து தேசத்தை விடுவித்த தினத்தில் ஆற்றிய உரை என்னை சிலிர்க்கச் செய்தது. அந்த வரிகளை மீண்டும் மீண்டும் படித்தேன்.

“முழு ஆஃப்ரிக்காவுமே விடுதலை அடையாமல், கானாவின் விடுதலை அர்த்தமற்றது.”

நூற்றுக்கணக்கான கனானியன்கள், பிரிட்டிஷ் அதிகாரிகள் முன்பு தனது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையை க்வாமே நுக்ருமா இப்படித்தான் தொடங்கினார்:

“நமது தன்னலமற்ற போராட்டத்தால் இந்த வெற்றியை ஈட்டியிருக்கிறோம். ஆனால் முழு ஆஃப்ரிக்காவுமே விடுதலையைப் பெறாமல், கானா தேசத்தின் விடுதலை என்பது அர்த்தமற்றதாகும். நான் ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நாம் நீண்ட காலங்களாக காலனி ஆட்சியிலிருந்து, விடுதலை பெற்ற மக்கள். இன்றிலிருந்து, நாம் நமது சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் கட்டாயம் மாற்றிக் கொள்ள வேண்டும்.ஆஃப்ரிக்க பாரம்பரியத்தின் மீது நமது அடித்தளத்தை நாம் உறுதியாக அமைப்பதை மற்ற நாடுகளுக்கும் இந்த உலகத்துக்கும் நாம் காட்ட வேண்டும்.

நமது ‘பூர்வீக ஆஃப்ரிக்க’ அடையாளத்தையும் ஆளுமையையும் நாம் உருவாக்க வேண்டும். உலக நாடுகளுக்கு இதனைச் செய்து காட்டுவதுதான் நம்முன் உள்ள சவாலாகும். நமக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால், நாம் சாதித்துக் காட்டுவோம் என்பதை நிரூபித்துக் காட்டுவோம். நாம் எழுந்து விட்டோம். ஒருபோதும் இனி உறங்க மாட்டோம். இன்று முதல் உலகில் புதிய ஆஃப்ரிக்கனைக் காணலாம்.”

என்ன தீட்சண்யமான பார்வை! என்ன விசாலமான சிந்தனை!! க்வாமே நுக்ருமாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் என் சிந்தனையை முழுமையாக ஆக்ரமித்தன.

அமெரிக்க கறுப்பர்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற இறையியலாக இஸ்லாமிய மார்க்கத்தையும், இறையாண்மையாக தனிநாடு முழக்கத்தையும் நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பின் சார்பில் பிரச்சாரம் செய்து வந்தோம். வெறும் பிரச்சாரத்தில் மட்டும் நம்பிக்கை வைக்காமல், அமெரிக்காவிலேயே கறுப்பர்களுக்கான தனி நாட்டின் எல்லைகளைக்கூட நான் என் இதயத்தில் வரையறுத்து வைத்திருந்தேன். அப்படி என்னுள் உருக்கொண்டிருந்த அமெரிக்க கறுப்பர்களின் தனி நாடு, அமெரிக்க மண்ணில் தொற்றிக் கொண்டிருக்கும் ஆஃப்ரிக்க தேசத்தின் நீட்சி என்றே கருத வைத்தது கானா அதிபர் க்வாமே நுக்ருமாவின் உரை.

முழு ஆஃப்ரிக்காவும் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற க்வாமே நுக்ருமாவின் விருப்பத்தில், நான் கனவு கண்டு வைத்திருந்த தேசத்தையும் இணைத்துக் கொண்டேன்.

ஐரோப்பியர்களின் காலனியாதிக்கத்திற்கு எதிரான, உலகம் முழுவதும் நடைபெற்று வந்த போராட்டங்களை அறிந்து கொள்வதிலும், போராட்ட நாயகர்களைச் சந்திப்பதிலும் ஆர்வம் எனக்கு அதிகரித்தது. அதிலும் குறிப்பாக க்வாமே நுக்ருமாவை விரைவில் சந்திக்க விரும்பினேன்.

தொடரும்

-ஃபனான்