கஃபாவும் இப்ராஹீம் (அலை) வாழ்வும்

 – செய்யது அலீ

கஃபா மற்றும் இப்ராஹீம் நபி (அலை) அவர்களின் வரலாறு தனிமனித வாழ்வுக்கும், சமூக வாழ்விற்கும் சில சிறப்பான படிப்பினைகளை தருகிறது. அல்லாஹ்வுக்கு சமர்ப்பணம், இஸ்லாத்தின் அழைப்பு, அச்சமற்ற சமூக சூழல் ஆகியன அவற்றில் முக்கியமானவை.

அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு தனது வாழ்க்கையை அர்ப்பணிப்பதே இஸ்லாத்தின் சாரம். அந்த சமர்ப்பணத்தின் உயர்வான முன்மாதிரியாக புனித குர்ஆன் இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்க்கையை விவரிக்கிறது. முஸ்லிம் என்றால் அல்லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுப்படுபவர் என்று பொருள்.

முற்றிலும் கட்டுப்படுபவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்வை திருக்குர்ஆன் நம் முன்னால் வரைந்து காட்டுகிறது. அதுவே, உண்மையான சமர்ப்பணம் என்றும் அதனை புறக்கணிப்பது தன்னைத்தானே தாழ்த்திக் கொள்வது என்றும் குர்ஆன் நினைவூட்டுகிறது.

“இப்ராஹீமுடைய மார்க்கத்தை புறக்கணிப்பவன் யார்? தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர. நிச்சயமாக நாம் அவரை(தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம். நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார். இன்னும், அவரிடம் அவருடைய இறைவன், “(என்னிடம் முற்றிலும் வழிப்பட்டவராகச்) சரணடையும்” என்று சொன்னபோது அவர், “அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டோனாகச் சரணடைந்தேன்” என்று கூறினார். (அல்குர்ஆன் 2: 130,131)

இப்ராஹீம் (அலை) அவர்களின் சமர்ப்பணத்தை தவிர்த்துவிட்டு அவர்களது வரலாற்றை ஆய்வு செய்ய இயலாது.

இஸ்லாமிய அழைப்பு பணியின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்ததே கஃபா மற்றும் ஹஜ்ஜின் வரலாறு. தனது முழு வாழ்க்கையையும் அல்லாஹ்வுக்கு சமர்ப்பித்தவர் இப்ராஹீம் (அலை). சொந்த நாட்டிலும், அங்கிருந்து புறப்பட்ட பிறகு எகிப்து, சிரியா, ஃபலஸ்தீன், அரேபியா ஆகிய நாடுகளுக்கெல்லாம் இறைமார்க்கத்தை பரப்புரை செய்ய வேண்டும் என்ற லட்சியத்தை நிறைவேற்றவே பயணித்தார். இறைவனால் இமாமாக நியமிக்கப்பட்ட இப்ராஹீம் (அலை) அவர்கள் இஸ்லாமிய அழைப்பு பணிக்கும் தலைவராவார்.

“இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டு சோதித்தான். அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக (தலைவராக) ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான். (அல்குர்ஆன் 2: 124) என்ற குர்ஆன் வசனம் இமாமத்தின் அனைத்து லட்சியங்களையும் உள்ளடக்கியது.

 நபித்துவ பணியின் தலைமையை இங்கே தனியாக குறிப்பிட்டாக வேண்டும். வாரிசுகள் மற்றும் உறவினர்களில் தூதராக நியமிக்கப்பட்டவர்கள் உள்பட தமது காலத்தில் வாழ்ந்த நபிமார்களுக்கும் அவர்கள் தலைமை தாங்கினார்கள். ஸதும் தேசத்தில் லூத் நபி (அலை), ஃபலஸ்தினில் இஸ்ஹாக் (அலை), மக்காவை மையமாக கொண்டு இஸ்மாயீல் (அலை) ஆகியோர் இப்ராஹீம் நபி (அலை) அவர்களின் தலைமையின் கீழ் இஸ்லாமிய அழைப்பு பணியை நிர்வகித்தார்கள்.

நபித்துவ குடும்பத்தின் தந்தை என்ற நிலையில் அவர்களது குடும்ப பரம்பரையில்தான் பிற்காலத்தில் குர்ஆன் கூறும் பெரும்பாலான நபிமார்கள் வந்துள்ளனர். தஃவாவின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட மூன்று சமூகங்கள் (யூத, கிறிஸ்தவ, முஸ்லிம் சமூகங்கள்) இப்ராஹீம் (அலை) அவர்களை தந்தையாக, தலைவராக அங்கீகரிக்கின்றன.

இப்ராஹீம் (அலை)  அவர்களின் நபித்துவ பணியின் இறுதிக்கட்டமாக கஃபா ஆலயத்தின் நிர்மாணத்தையும், ஹஜ்ஜிற்கான அழைப்பையும் குர்ஆன் குறிப்பிடுகிறது. ஹஜ்ஜிற்கான அழைப்பை, தஃவாவுக்கான (இஸ்லாமிய அழைப்புக்கான) அழைப்பாகவே காண வேண்டும். ஏக இறைவனை வணங்குவதற்காக கட்டப்பட்ட ஆலயத்திற்கு புனித யாத்திரைக்கான அழைப்பை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, அனைத்து மனித சமூகங்களுக்கான அழைப்பாக விடுக்குமாறு அல்லாஹ் இப்ராஹீம் நபி (அலை) அவர்களுக்கு கட்டளையிடுகிறான்.

“ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக!  அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள்” (அல்குர்ஆன் 22: 27) என்ற குர்ஆன் வசனத்தில் விடுக்கப்படும் அழைப்பு அனைத்து மக்களுக்குமான அழைப்பு என்பது தெளிவாகிறது. முஸ்லிம்களை மட்டுமல்ல, அனைத்து சமூக மக்களையும் குறித்தே இப்ராஹீம் (அலை) அவர்களின் வரலாறு முழுவதும் குர்ஆன் பேசுகிறது. அவருடைய தலைமையும், கஃபாவும் கூட அனைத்து சமூக மக்களுக்கானதாகும்.

“நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக (தலைவராக) ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான். (அல்குர்ஆன் 2: 124)

“(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளதுதான். அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது. அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது.

மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார். இன்னும் அதற்கு(செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்கு குறையேற்படப் போவதில்லை. ஏனெனில்)  நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கிறான்.” (அல்குர்ஆன் 3: 96, 97) 

கஃபாவை கட்டிய பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனை, இஸ்லாத்தின் அழைப்பையும், தொடர்ச்சியையும் உள்ளடக்கியது.

“எங்கள் இறைவனே!  அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து, அவர்களை தூய்மைபடுத்தக்கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக  நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.” (அல்குர்ஆன் 2: 129)

 இந்த பிரார்த்தனையின் பதிலாகத்தான் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவில் தூதராக நியமிக்கப்பட்டார்கள். இப்ராஹீம் நபி (அலை) அவர்களைப் போலவே முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கையின் குறிப்பிடத்தக்க கடைசி நிகழ்வு ஹஜ்ஜாகும். கஃபா நிர்மாணமும், ஹஜ்ஜுக்கான அழைப்பும் இப்ராஹீம் நபி (அலை) அவர்களின் நபித்துவ பணியின் இறுதிக்கட்டமாக அமைந்தது போலவே, ஹஜ் கடமையில் ஊடுருவிய அனாச்சாரங்களிலிருந்து அதனை சுத்திகரித்து அனுஷ்டானங்களை பூர்த்தியாக்கும் விதமாக ஹஜ்ஜை நிறைவேற்றிய நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவ பணியும் பூர்த்தியடைந்ததை காண முடியும். சமர்ப்பணம் மட்டுமல்ல, இரண்டு இறைத்தூதர்களின் இஸ்லாமிய அழைப்புக்கான லட்சியத்தையும் ஹஜ் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பது பொருள்.

இப்ராஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனையின் மூலம் தம்மை வந்தடைந்த தூதுத்துவ பணியை ஹஜ்ஜில் வைத்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம் சமுதாயத்திடம் ஒப்படைத்தார்கள். ‘என்னிடமிருந்து ஒரு செய்தி கிடைத்தாலும் அதை பிறருக்கு எத்தி வைத்து விடுங்கள்’ (நூல்: புகாரி) என்று நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

இவ்வாறு கஃபாவின் நிர்மாணமும், ஹஜ்ஜின் தோற்றமும், சீர்திருத்தமும் நபித்துவ இலட்சிய பணியை ஒப்படைக்கும் இடமாக மாறுகிறது. இந்த கொள்கையைத்தான் இப்ராஹீம் நபி (அலை) அவர்களின் வழிமுறையையும், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரியையும், முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பையும் பிணைக்கும் வகையில் குர்ஆனின் 22: 78 என்ற வசனம் அமைந்துள்ளது.

“இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டான். இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. இதுதான் உங்கள் பிதாவாகிய இப்ராஹீமுடைய மார்க்கமாகும். அவன்தான் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது).

இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்கு சõட்சியாக இருக்கிறார். இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள். எனவே, நீங்கள் தொழுகையை நிலைநிறுத்துங்கள். இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன். இன்னும் மிகச் சிறந்த உதவியாளன்.” (அல்குர்ஆன் 22: 78)

இப்ராஹீம் (அலை) அவர்களிடமிருந்து இஸ்மாயீல் (அலை) அவர்களுக்கும் அவர்களிடமிருந்து முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும், பின்னர் முஸ்லிம் சமுதாயத்திடமும் இஸ்லாத்தின் தஃவா ஒப்படைக்கப்பட்ட வரலாறே ஹஜ் மற்றும் கஃபாவின் வரலாறு. இந்த நடைமுறை தொடர வேண்டும்.

 ஹாஜிகள் அன்று பிறந்த பாலகனைப் போல பாவங்களில் இருந்து மீட்சிப் பெற்று திரும்பி வருவது மட்டுமல்ல, சமுதாயத்தின் பொறுப்பை சுமப்பதற்கு தேவையான உத்வேகத்தை பெற்று துணிச்சலான அழைப்பாளர்களாக அவர்கள் திரும்ப வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு ஹஜ்ஜும் உலகிற்கு ஒளியை தரக்கூடிய எரிசக்தியாக மாற வேண்டும். அப்பொழுது கஃபா ஆலயம் உலக மக்களுக்கு பாக்கியமிக்கதாகவும், நேர்வழியாகவும் மாறும்.

இஸ்லாத்தின் அழைப்பு என்பதை குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. அரசியல், சமூகம், குடும்பம், பொருளாதாரம், தனி மனித வாழ்வு உள்பட மனித வாழ்வின் அனைத்து துறைகளிலும் இஸ்லாத்தின் முழுமையான செய்தியை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.

கஃபாவுக்கு அருகே தமது குடும்பத்தினரை இப்ராஹீம் (அலை) அவர்கள் வசிக்கச் செய்தார் என்று குர்ஆன் கூறுகிறது. அதுவரை மக்கள் நடமாட்டம் இல்லாத அந்த பாலைவன பூமியை தவ்ஹீதின் (ஏகத்துவம்) நிழலில் இதர ஆதிக்கங்களில் இருந்து விடுபட்ட ஒரு நாகரீகத்திற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள் அடித்தளமிட்டார். அந்த நாகரீகம் இணைவைப்பின் அனைத்து வடிவங்களையும் நிராகரிக்கக்கூடியதாகும். அத்தோடு, அச்சமற்ற சமூக சூழலும் அதன் பிரிக்கமுடியாத காரணியாகும். இவ்விரண்டு அம்சங்களையும் இப்ராஹீம் (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகளில் காணலாம்.

நினைவு கூறுங்கள்! “என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்) அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக! என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!” என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூறும்)”. (அல்குர்ஆன் 14: 35)

மக்காவை பாதுகாப்பான புனித இடமாக ஆக்கியிருப்பதாகவும், அங்குள்ள மக்கள் பசியிலிருந்தும், பயத்திலிருந்தும் பாதுகாக்கப்பட்டவர்கள் என்றும் குர்ஆன் கூறுகிறது. (பார்க்க:  அல்குர்ஆன் 28: 57, 29: 67, 106: 4)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது (மக்களிடையே) எழுந்து நின்று, “அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைத்த போதே மக்காவை புனிதப்படுத்தி விட்டான். ஆகவே, அது அல்லாஹ் புண்ணியப்படுத்திய காரணத்தால் இறுதி நாள் வரை புனிதமானதாகும். எனக்கு முன்பும் எவருக்கும் இங்கு போர் புரிவது அனுமதிக்கப்படவில்லை. எனக்குக்கூட சிறிது நேரம் மட்டுமே இங்கு போர் புரிய அனுமதிக்கப்பட்டது. இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக்கூடாது. இங்குள்ள மரங்களை வெட்டக்கூடாது.

இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக்கூடாது. பிறர் தவற விட்ட பொருளை அதை அறிவிப்பவர் தவிர வேறெவரும் எடுக்கக்கூடாது” என்று சொன்னார்கள்.

உடனே அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதர÷! ‘இத்கிர்’ எனும் புல்லைத் தவிரவா? ஏனெனில், அது உலோகத் தொழிலாளர்களுக்கும், வீடுகளுக்கும் தேவைப்படுகின்றதே” என்று கேட்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (சிறிது நேரம்) மௌமாயிருந்துவிட்டு பிறகு “இத்கிரைத் தவிரதான். ஏöனினல் அதை வெட்டிப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டதாகும்” என்று பதிலளித்தார்கள்.

(நூல்: புகாரி)

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

“அல்லாஹ்விடத்தில் மூன்று நபர்கள் மிகவும் வெறுப்புக்குரியவர்கள். 1. ஹரம் ஷரீஃபில் அநீதியின் மூலம் குற்றம் புரிபவன், 2. இஸ்லாத்தில் அறியாமைக் கால நடைமுறையை நாடக்கூடியவன், 3. தகுந்த காரணிமின்றி ஒரு உயிரைப் பறிக்க நாடுபவன். (நூல்: புகாரி)

இங்கு நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல, நம்பிக்கை கொள்ளாதவர்களின் அடிப்படை உரிமைகளும் பாதுகாக்கப்படும்.

(இன்னும் நினைவு கூறுங்கள்) இப்ராஹீம்; “இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கிவைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக” என்று கூறினார். அதற்கு இறைவன் கூறினான். “(ஆம்) யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் சிறிது காலம் சுகானுபவத்தை அளிப்பேன். பின்னர் அவனை நரக நெருப்பின் வேதனையில் நிர்ப்பந்திப்பேன். அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே.”(அல்குர்ஆன் 2: 126)

ஹஜ் கடமையை நிறைவேற்றும் இடம் மட்டுமல்ல, அத்துடன் தொடர்புடைய நான்கு மாதங்களும் போர் தடுக்கப்பட்டுள்ளது. உலகின் நாலா திசைகளிலும் அம்மாதங்களில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும். ஹரமின் அச்சமற்ற நிலை உலக முழுக்க விரிவுபடுத்தப்பட்டுள்ளதை இம்மாதங்களின் புனிதமாக்கப்பட்ட பிரகடனத்திலிருந்து புரிந்து கொள்ளலாம். இஸ்லாமிய நாகரீகத்தின் அடிப்படை குணமும் அதுவே.

(செப்டம்பர் 2015 இதழில் வெளியான கட்டுரை)