கருணை – சிறுகதை

 – ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்

முதல் மூன்று நோன்பும் கடைசி மூன்று நோன்பும் வச்சாப் போதும். முப்பது நோன்பும் பூர்த்தியாயிரும்… சின்ன வயசில் இப்படியாக சொல்லக் கேட்டு நோன்பு வச்ச காலங்கள் ஞாபகத்தில் நிழலாடியது. உம்மாவும் கூட இப்படி சொல்லும். “சின்னப் பசங்களெல்லாம் இப்டி வச்சாப் போதும் மொவனே…” என்று வாஞ்சையுடன் சொல்லி தலையை நீவி விடும். வாப்பா கூட சில சமயம் இப்படித்தான் முதலும், கடைசியுமாக சில நோன்புகளை நோற்பார்.

தொழிற்சாலை ஒன்றில் வாப்பா ஷிப்ட் முறையில் வேலை செய்து கொண்டிருந்ததால் நோன்பு வைப்பதில் வாப்பாவுக்கு மட்டுமல்ல பெரும்பாலும் இதுபோன்ற கூலித் தொழிலாளிகள் ரமலானில் முப்பது நோன்பும் நோற்க இயலாது. ஆக அவர்கள் ஒரு சில நோன்புகள் மட்டுமே வைப்பார்கள். அவர்கள் இப்படியொரு பொது நியதியை கடைபிடிப்பார்கள்.

நோன்பு வைக்காதவர்களும் நிறைய பேர் உண்டு. வாப்பா நோன்பு வைக்கும் போது ஸகரும், இஃப்தாரும் நிறைய ஐட்டங்களுடன் விருந்து போல தடபுடலாக இருக்கும். சின்ன வயசில் நோன்பு நோற்பதே அலாதியாக இருக்கும்.

நோன்பு வைத்தால் எச்சிலை விழுங்கக்கூடாது என்கிற ஒரு பொதுவான கருத்தின்படி சிறுவர்கள் ‘புளிச்.. புளிச்..’ என்று காறி காறி எச்சிலை துப்பிக் கொண்டே இருப்பார்கள். நோன்பு வைத்திருப்பது மற்றவர்களுக்கும் தெரிய வேண்டும் என்கிற சிறு வயது மனோபாவம் இது. பொதுவாகவே எல்லா சிறு வயதினருக்கும் இந்த மனோபாவமிருக்கும். பள்ளிக்கூடங்களில் வேண்டுமென்றே வகுப்பிலிருந்து வெளியே எழுந்து போய் எச்சிலை துப்பி வருவார்கள். ஆசிரியர்களும் எதுவும்

சொல்ல மாட்டார்கள். நோன்பு மாதத்தில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளின் அருகே இருக்கும் அரசு பள்ளிகளில் இந்த நடைமுறை தொடர்ந்து இருந்து வந்தது.

நண்பர்களின் கிண்டலிலிருந்து தப்பிக்க வேண்டி நோன்பு வைக்காமலேயே முஸ்தபா சில சமயம் சும்மாவாவது எழுந்து போய் எச்சிலைத் துப்பி வருவான். இதைக்கண்டு நோன்பு வைக்காதவர்களுக்கு ஒருவித ஏக்கமே ஏற்படும். இதற்கு வேண்டியே மறுநாள் அவர்களும் நோன்பு நோற்று வந்து போட்டிக்கு எச்சில் துப்புவார்கள். வேடிக்கையாக இருக்கும். முஸ்தபாவுக்கு எல்லா நோன்பையும் வைக்கும் பாக்கியம் கிடைக்காது.

 அக்காவையும், அண்ணனையும் எழுப்பிவிடும் உம்மா சஹர் செய்ய அவனை எழுப்பிவிட மாட்டார்கள். சத்தம் கேட்டு அவனாக எழுந்து அடம் பிடித்து நோன்பு வைப்பான். இப்படியாக அவனுக்கு ஒரு சில நோன்புகள் வைக்கும் வாய்ப்பு கிடைக்கும். மதியம் பசி வயிற்றைக் கிள்ளினாலும், நோன்பு திறக்கும் நேரம் வரும் போது ஏற்படும் அந்த சந்தோஷத்திற்கு இணையே இருக்காது. அப்படியொரு ஆனந்த பரவசம் அது.

இப்போதைய சின்ன வயசுக்காரர்களுக்கு இப்படியான அனுபமிருக்குமா எனத் தெரியவில்லை! பசங்களும், பெண் குழந்தைகளும் ஆர்வமுடன், உற்சாகத்துடன் நோன்பு பிடிப்பதைப் பார்த்தால் இப்போதும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்பதாகத்தான் தெரிகிறது. இப்போது சின்னச் சின்னக் குழந்தைகள் கூட மிக ஆர்வமுடன் நோன்பு வைக்கிறார்கள்.

 அதிகாலை சுபஹூ தொழுகைக்கே வாப்பாவுடன், அண்ணன்களுடன் சின்னஞ் சிறுவர்கள் எல்லாம் பள்ளிக்கு தொழ வருவது மிகுந்த மன மகிழ்ச்சியைக் கொடுப்பதோடு மட்டுமல்ல, அவர்களின் இறை உவப்பு கண்டு வியப்பாகவுமிருக்கிறது. தன் குழந்தைகளே நோன்பை விடாமல் வைக்கின்றன என்பதில் மிகப் பெருமை உண்டு அவனுக்கு. இரண்டாவது படிக்கும் ஃபாத்திமா சென்ற ஆண்டு இருபது நோன்புகள் நோற்றாள். இந்த பிஞ்சுக் குழந்தைக்குள் இவ்வளவு ஈமானா என்று வியந்து இதற்கு பெருநாள் பரிசாக கொலுசு வாங்கிக் கொடுத்து சந்தோஷப் பட்டான் முஸ்தபா.

நோன்பு மாதம் வந்துவிட்டால் மொஹல்லாவே உற்சாகமும், களிப்பும், கொண்டாட்டமும் மிக்க ஒரு சிறப்பான புதிய இடமாகி விடும்.

குழப்பங்கள் எதுவும் இல்லாத ஒரு பொற்காலம் அது. முப்பது நாளும் நள்ளிரவில் ‘இப்போது நேரம் சரியாக இரண்டு மணி… சஹர் செய்ய எழுவீர்..’ என்று பைத்தும், பாட்டுமாக சஹர் கமிட்டி இளைஞர்கள் ஸ்பீக்கர் கட்டி வீதி வீதியாக வந்து துயில் எழுப்புவார்கள். மொஹல்லா தோறும் இந்த சஹர் கமிட்டி குழு இருக்கும். பக்கீர்ஷாமார்களும் தப்பு அடித்துக் கொண்டு வந்து தூக்கத்திலிருந்து பெண்களை எழுப்பி விடுவார்கள்.

27வது இரவன்று சீரியல் செட் விளக்கு அலங்காரத்துடன் பல பகுதிகளிலிருந்தும் வாகனங்கள் வீதி உலா வரும். விடிய விடிய உற்சாக இரவாக இருக்கும். இப்போதெல்லாம் ரமலானுக்கு முன்பாக பிறைக் கூத்து ஆரம்பித்து விடுகிறது. ஆனாலும் நோன்பு குறித்து நிறைய தெரிந்து கொள்ள வழி வகை ஏற்பட்டுள்ளது. நோன்பை பற்றிய சில மூட நம்பிக்கைகளிலிருந்து ஒரு தெளிவும் ஏற்பட்டுள்ளது.

பிறை பார்த்து நாளை நோன்பு என்று அறிவிப்பு வந்ததிலிருந்து முஸ்தபாவுக்குள் நோன்பு குறித்து இப்படியான எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது. பழைய நினைவுகளில் மூழ்குவது ஒரு தனி இன்பம்.

கல்யாணமாகி முஸ்தபாவும் மூன்று குழந்தைகளுக்குத் தந்தையாகி விட்டான். கூட்டுக் குடித் தனத்திலிருந்து தனிக் குடித்தனம் வந்து வரும் முதல் நோன்பு இது என்பதால் அவனுக்குள் கொஞ்சம் பதட்டம் கூடியிருந்தது. உம்மா, அண்ணன், தம்பிகளுடன் ஒன்றாக இருந்தபோது இப்படியான பண்டிகை காலங்களில் எது பற்றியும் அவ்வளவாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. கூடமாட கொஞ்சம் ஒத்துழைத்தால் போதும். அதது பாட்டுக்கு நேர நேரத்திற்கு எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கும்.

ஆனால், இப்போது அப்படி முடியாது. எல்லாம் தனியாளாக செய்தாக வேண்டும். நோன்புக்கு என்னென்ன வாங்க வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பே பேரீச்சை, பழங்கள், குளுக்கோஸ் என ஐநூறு ரூபாய்க்கும், நோன்பு திறக்க தினம் வடை பஜ்ஜி வகையறாக்களுக்கும் ஸகருக்கான கூட்டன் செலவுக்கு ஆயிரம் என்றும் லிஸ்ட் போட்டுக் கொடுத்துவிட்டாள் பானு.

சென்ற வாரமே பண்டிகை முன்பணம் வேண்டும் என முதலõளி காதில் போட்டாகி விட்டது. இது பிரச்சனையில்லை. நோன்பு திறக்கும் நேரத்திற்கு எப்படி கிளம்பி வருவது என்பதே இப்போது அவனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது.

நோன்பே வைக்காமல் சுற்றிக் கொண்டிருந்த ஒரு காலமும் அவன் வாழ்க்கையில் இருந்ததுண்டு. பெயரளவில் முஸ்லிமாக இருந்த காலம் அது! படிப்பு முடித்து வேலைக்காக அலைந்து கொண்டிருந்தான். உடன் படித்த நண்பர்களுடன் எப்போதும் சுற்றிக் கொண்டிருப்பான். நோன்பு நோற்பது, தொழுவது என்கிற எந்த சிந்தனையும் இல்லாமல்  வாழ்ந்து வந்தான் அன்றைய முஸ்தபா. வாப்பாவிடமிருந்து தினம் திட்டு விழுந்து கொண்டேயிருக்கும். அண்ணனும் எவ்வளவோ அறிவுரை சொல்லிப் பார்த்தார். எதையும் காதில் வாங்க மாட்டான். இஸ்லாத்தை அறியாத  அறிந்து கொள்ள முடியாத ஒரு காலக்கட்டம் அது.

பாபர் மசூதி இடிப்பு சம்பவம் அவனுக்குள் ஒரு ஞானோதயத்தை ஏற்படுத்தியது என்று சொல்லலாம்! அவன் நண்பர்களில் சிலர் அதை ஆதரித்தது மட்டுமல்ல, கொண்டாடவும் செய்ய, முஸ்தபாவுக்குள்ளிருந்த முஸ்லிம் விழித்தெழுந்தான். அதன்பிறகு அவன் நடைமுறையே மாறிப் போனது. மார்க்கத்தையே அதன்பிறகு தான் தெரிந்து கொள்ளவே ஆரம்பித்தான். ஒரு வகையில் பாபர் மசூதி தகர்ப்பு முஸ்லிம்களை, முஸ்லிம்களாக மாற்றவும், அவர்களது இருப்பை, பாதுகாப்பை உணரவும் வைத்த ஒரு நிகழ்வாகவும் இருந்தது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றே சொல்லலாம்!

முஸ்தபா வேலைக்கு சென்ற புதிதில் வந்த ரமலானில் நோன்பு நோற்க நிர்வாகம் அனுமதிக்கவில்லை. அதாவது, நீ நோன்பு வைத்துக் கொள். ஆனால், வேலை நேரத்தில் இஃப்தாருக்கு செல்ல அனுமதிக்க முடியாது என்று மறுத்துவிட, காலையில் வீட்டிலிருந்தே தண்ணீரும், பேரீச்சையும் எடுத்துச் சென்று மாலை அங்கேயே நோன்பு திறந்துவிட்டு, இரவு எட்டு அல்லது ஒன்பது மணிக்கு மேல் வீடு வந்துதான் சாப்பிடுவான்.

வேளா வேளைக்கு தொழும் நேரம் வந்ததும் பள்ளிகளில் கூட்டம் கூடுவதைக் காணும் போதெல்லாம் பேசாமல் வேலையை விட்டு விட்டு சொந்தமாக ஏதாவது தொழில் செய்யலாம் என்கிற ஆசையும் எண்ணமும் ஒவ்வொரு ரமலானிலும் தோன்றாமலில்லை.

இரண்டு மூன்று கம்பெனிகள் மாறிவிட்டான். இன்றும் இதே நிலைமைதான். இன்னமும் கூட இஸ்லாத்தை மட்டுமல்ல, முஸ்லிம்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ளாதவர்களாகவே அல்லது புரிந்து கொள்ள விரும்பாமலேயேதான் பெரும்பான்மையானவர்கள் இருக்கிறார்கள் என்பது வேதனையான விஷயம்! வருடம் முழுக்க என்னதான் கடுமையாக வேலை செய்தாலும், உழைத்தாலும் ரமலானில் நோன்பு திறக்க வேண்டி ஒரு மாதத்திற்கு மாலையில் நேரமாகச் செல்ல முஸ்லிம்களின் நிர்வாகத்தை தவிர வேறு எந்த நிர்வாகமும் அனுமதிப்பதில்லை.

“ஒரு நாள் ரெண்டு நாள் என்றால் சரி, ஒரு மாசத்துக்கெல்லாம் முடியாது பாய்” என்று மறுத்து விடுவார்கள். ஒன்று நோன்பு நோற்க முடியாமை அல்லது தொழவும் முடியாமல் கூடுதலாக இன்னும் சில மணி நேரம் நோன்பை நீட்டித்து பட்டினியாக பசியுடன் இருக்க வேண்டும். இதுதான் பொதுவான நடைமுறை. இதனால்தான் நிறைய பேர் ரமலானில் நோன்பு நோற்பதே இல்லை. தொழுகைக்கும் இதே நிலைதான்.

இதனால்தான் பெரும்பாலும் முஸ்லிம்கள் யாரிடமும் வேலை செய்யாமல் கொஞ்சம் சம்பாரிச்சாலும் போதும் என்கிற மனப்பான்மையில் சுயமாக வியாபாரம், தொழில் என்று இறங்கி விடுகிறார்கள்.

இப்போதும் இப்படியான ஒரு சிக்கல்தான் முஸ்தபாவுக்கு. அவன் வேலை செய்யும் இடத்தில் பக்கத்தில் பள்ளி எதுவும் கிடையாது. அதிகாலை மொஹல்லா பள்ளியில் சுப்ஹூ தொழுதுவிடுவான். இரவு வீடு வந்த பிறகு இஷா தொழும் போது மற்ற  மூன்று நேரத் தொழுகையையும் களா கூட்டியே தொழுது வருகிறான். இறைவன் எல்லாம் அறிந்தவன்.

நோன்பில் இப்படிச் செய்ய மனம் வருவதில்லை. செய்யவும் கூடாது. வேறு என்ன வழி? இது பற்றியே அவனுக்குள் இரண்டு நாளாக சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. இதற்காக வேலையை விடவும் முடியாது. லோன் போட்டாவது சீக்கிரத்தில் சொந்தமாக தொழில் தொடங்க முயற்சிக்கணும் என்று எண்ணிக் கொண்டான்.

முதல் நோன்பு நோற்று பேரீச்சையும், தண்ணீர் பாட்டிலுடனும் வேலைக்குச் சென்றான்… மாலை ஆறு மணிக்கு கரண்ட் கட்டானது!

அப்போதுதான் முதலாளி சொன்னார். “ஒரு மாசத்திற்கு நம்ம ஏரியாவுல ஆறு மணியிலிருந்து எட்டரை வரைக்கும் கரண்ட் கட் பாய்..! நோன்பு மாசம் உங்களுக்கு இறைவன் கருணை காட்டியிருக்கார் போல… நீங்க கிளம்புங்க..” என்றார்.

“யா அல்லாஹ்…!” என்று ஓங்கிக் கத்த வேண்டும் போலத் தோன்றியது முஸ்தபாவுக்கு.