காதர் அத்னான்: இஸ்ரேல் நடத்திய நிறுவன ‘படுகொலை’!

‘நீங்கள் நிலைத்திருப்பதற்காக நான் பட்டினி இருக்கிறேன். நீங்கள் வாழ்வதற்காக நான் மரணிக்கிறேன். புரட்சியுடன் இணைந்திருங்கள்’

– 2012இல் ஃபலஸ்தீன மக்களுக்கு எழுதிய கடிதத்தில் காதர் அத்னான்

ஃபலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பை சார்ந்த காதர் அத்னான் 87 நாட்கள் உண்ணாவிரத போராட்டத்திற்கு பிறகு மே 2 அன்று இஸ்ரேலிய சிறையிலேயே மரணித்துள்ளார். 45 வயதான காதர் அத்னான் பிப்ரவரி 5 அன்று இஸ்ரேலிய காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இஸ்ரேலிய சிறைகளில் ஆயிரக்கணக்கான ஃபலஸ்தீனியர்கள் அடைக்கப் பட்டுள்ளனர். அவர்களில் கணிசமான எண்ணிக்கையினர் நிர்வாக தடுப்பு (Administrative Detention) என்ற முறையின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டவர்கள்.

இந்த முறையின் கீழ் ஒரு நபரை விசாரணை மற்றும் குற்றச்சாட்டுகள் ஏதும் இன்றி எத்தனை நாட்களும் சிறையில் வைக்கலாம். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தடுப்பு காவலை நீடித்தால் போதுமானது. ஃபலஸ்தீன சமூககத்தில் உள்ள கல்வியாளர்கள், செயல்பாட்டாளர்கள் மற்றும் அறிவுஜீவிகளை குறிவைப்பதற்கு இஸ்ரேல் இந்த முறையை பயன்படுத்தி வருகிறது.

ஏப்ரல் 2023 கணக்கின்படி 4900 ஃபலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1016 பேர் நிர்வாக தடுப்புகாவல் முறையில் சிறையில் உள்ளனர். மொத்த சிறைவாசிகளில் 160 பேர் குழந்தைகள். 30 பெண்களும் இஸ்ரேலிய சிறைகளில் உள்ளனர். 554 நபர்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறைகளில் உள்ளனர். (www.addameer.org)

பாலஸ்தீனிய குழந்தைகள் இஸ்ரேலிய சிறைகளில்…

அத்னானும் நிர்வாக தடுப்பு முறையில் கைது செய்யப்பட்ட போது இஸ்ரேலிய அரசாங்கத்தின் இந்த எதேச்சதிகார போக்கை கண்டித்து தனது உண்ணாவிரதத்தை தொடங்கினார். அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டு கடும் நெருக்கடிகளை சந்தித்து வரும் ஃபலஸ்தீன மக்கள் இஸ்ரேலின் அராஜகத்திற்கு எதிராக பயன்படுத்தும் வலிமையான ஆயுதம் உண்ணாவிரத போராட்டம். இந்த ஆயுதத்தை பலமுறை கையில் எடுத்துள்ளார் அத்னான். 12 முறை கைது செய்யப்பட்டுள்ள அத்னான் ஏறத்தாழ எட்டு வருடங்களை இஸ்ரேலிய சிறைகளில் கழித்துள்ளார். பலமுறை உண்ணாவிரத போராட்டங்களை முன்னெடுத்த அவர் இந்த முறைதான் அதிக நாட்கள் உண்ணாவிரதம் இருந்துள்ளார். அதுவே அவரின் கடைசி போராட்டமாகவும் அமைந்துவிட்டது. இதற்கு முன் 2012இல் 66 நாட்கள் அவர் உண்ணாவிரதம் இருந்துள்ளார்.

இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பின் உறுப்பினராக இருந்தாலும் ஃபலஸ்தீன போராட்டத்தின் அடையாளமாகவும் அம்மக்களின் நேசத்திற்குரியவராகவும் உத்வேக சின்னமாகவும் அத்னான் மாறிவிட்டார். அதனால்தான் அவருக்கு உரிய சிகிச்சைகளை வழங்காமல் இஸ்ரேல் மரணத்திற்கு வழிவிட்டது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

மார்ச் 1999இல் முதன் முறையாக கைது செய்யப்பட்ட அத்னான் நான்கு மாதங்கள் இஸ்ரேலிய சிறையில் அடைக்கப்பட்டார். அதே வருடம் நவம்பர் மாதம் பிர் ஸெய்த் பல்கலைக்கழகத்தில் அப்போதைய பிரான்ஸ் பிரதமர் லியோனல் ஜோஸ்பினை கண்டித்து போராட்டத்தை தலைமையேற்று நடத்தியதற்காக ஃபலஸ்தீன அதிகார சபை இவரை கைது செய்தது. பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் ஃபலஸ்தீன மற்றும் அரபு எதிர்ப்பு போராட்டங்களை கடுமையாக விமர்சனம் செய்தார். இளம் மாணவராக இருந்த அத்னான், பிரதமரின் பேச்சை வன்மையாக கண்டித்து ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவாக பேசினார். பிரதமரின் பேச்சால் கோபமடைந்த மாணவர்கள் அவர் மீது காலணிகளை வீசியதை தொடர்ந்து அவர் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டார்.

அப்போதுதான் அவரின் முதல் உண்ணாவிரத போராட்டத்தை அவர் மேற்கொண்டார். பத்து நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். அதன் பின் கைது, விடுதலை, மீண்டும் கைது, மீண்டும் விடுதலை என்பது அவர் வாழ்வின் அங்கமானது. பனிரெண்டு முறை கைது செய்யப்பட்ட அவர் ஆறு முறை உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளார். குறைந்த பட்சம் 25 நாட்கள், அதிகபட்சம் 87 நாட்கள் என அவரின் உண்ணாவிரத போராட்டம் அமைந்தது.

ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு எதிராக உண்ணாவிரதம் போன்ற அறப்போராட்டங்களும் நியாயமான பலன்களை வழங்கியுள்ளன என்பதை உலக வரலாறு பறைசாற்றுகிறது. இந்தியாவில் ஆங்கிலேய ஆக்கிரமிப்பை எதிர்த்து காந்தியடிகள் நடத்திய அறவழி போராட்டங்கள் இந்தியாவின் சுதந்திரத்திற்கு இட்டுச் சென்றன. காந்தியின் போராட்ட முறை தங்களுக்கு உத்வேகத்தை அளிப்பதாகவும் அதனை தாங்கள் ஒரு முன்னுதாரணமாக கொண்டுள்ளதாகவும் ஃபலஸ்தீன தலைவர்கள் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காந்தியின் போராட்ட முறை தங்களுக்கு உத்வேகத்தை அளிப்பதாகவும் அதனை தாங்கள் ஒரு முன்னுதாரணமாக கொண்டுள்ளதாகவும் ஃபலஸ்தீன தலைவர்கள் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபலஸ்தீன மக்களின் உறுதியை குலைப்பதற்காக இஸ்ரேல் பல வழிமுறைகளை கையாண்டு வருகிறது. அதில் இந்த தடுப்பு காவலும் ஒரு வகை. காரணம் இன்றி ஒரு நபரை கைது செய்வதற்கு இஸ்ரேலிய இராணுவம் இந்த முறையை கையாள்கிறது. கைதிற்கான காரணத்தையும் தெரிவிக்க வேண்டாம், ஆதாரங்களையும் சமர்ப்பிக்க வேண்டாம். விசாரணை முறைகள் அனைத்தும் இரகசியமாகவே மேற்கொள்ளப்படும். கைது செய்யப்பட்ட ஃபலஸ்தீனியர்கள் கடும் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இஸ்ரேலியர்களால் தான் பலமுறை சித்திரவதை செய்யப்பட்டதை அத்னான் குறிப்பிட்டுள்ளார்.

சித்திரவதைகளையும் அவமானங்களையும் சந்தித்த போதும் இஸ்ரேலின் இந்த தடுப்பு காவல் முறையை எதிர்த்து உறுதியாக போராடுவதாக உறுதிமொழி எடுத்தார் அத்னான். அதில் அவர் இறுதிவரை உறுதியாகவும் இருந்தார். அத்னானுக்கு எதிராக எவ்வித ஆதாரங்கள் இல்லாத போதும் இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பின் உறுப்பினர் என்ற ஒரே காரணத்திற்காகவே இஸ்ரேல் அவரை கைது செய்தது. அந்த அமைப்பின் மேற்கு கரை செய்தித் தொடர்பாளராக அத்னான் இருந்துள்ளார். ஆனால் அவர் அப்பொறுப்பில் இல்லாத போதும் இஸ்ரேல் அவரை கைது செய்துள்ளது.

பிர் ஸெய்த் பல்கலைக்கழகத்தில் 2001இல் கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றார் அத்னான். ஆனால் இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து அவரை கைது செய்ததன் காரணமாக அதே பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் படிக்கும் வாய்ப்பு அவருக்கு மறுக்கப்பட்டது. தனது துறையில் உரிய வேலையும் கிடைக்காததால் தனது ஊரான அர்ரபாவில் உள்ள ஒரு பேக்கரியில் வேலைக்கு சேர்ந்தார். பின் சொந்தமாக ஒரு பேக்கரியை தொடங்கினார்.

2005இல் ராண்டா என்ற பெண்மணியை அத்னான் திருமணம் செய்தார். திருமணத்திற்கு முன் தன் வருங்கால மனைவியிடம் தனது வாழ்க்கையை தெளிவாக எடுத்துக் கூறினார் அத்னான். ஏனென்றால் அப்போது அவர் ஏற்கெனவே ஐந்து முறை கைது செய்யப்பட்டுவிட்டார். ‘எனது வாழ்க்கை இயல்பானதாக இருக்காது. 15 நாட்கள் இருப்பேன். ஆதன்பின் நீண்ட நாட்கள் காணாமல் போய்விடுவேன்’ என்று அவர் தன்னிடம் கூறியதை 2012இல் அல் ஜசீராவிற்கு அளித்த பேட்டியில் நினைவு கூர்ந்தார் ராண்டா.

ஆனால் தனது நாட்டை காப்பதற்காக போராடும் வலிமையான ஒருவரை திருமணம் செய்யவே தான் விரும்பியதாக தெரிவித்த ராண்டா, அத்னானை திருமணம் செய்ததற்காக தான் பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார். அத்னானுக்கு மொத்தம் ஒன்பது குழந்தைகள். அதில் மூன்று குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள். அத்னான் சிறையில் இருக்கும் போது மனைவி மற்றும் குழந்தைகள் அவரை சந்திப்பதற்கு இஸ்ரேலிய அதிகாரிகள் கடும் நெருக்கடிகளை கொடுத்தனர். பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி சில மணிநேரம் மட்டுமே அவரை சந்திப்பதற்கு அனுமதி வழங்கி வந்தனர்.

உண்ணாவிரதம் இருக்கும் போது இஸ்ரேலிய சிறை அதிகாரிகள் வேண்டும் என்றே தன் முன் உணவருந்துவார்கள் என்றும் வார்த்தைகளால் தன்னை அர்ச்சனை செய்வார்கள் என்பதையும் குறிப்பிட்டுள்ளார் அத்னான். மக்களின் உறுதியை குலைக்க இயலாத ஆக்கிரமிப்பு சக்திகள் இதுபோன்ற கீழ்த்தரமான நடவடிக்கைளில் இறங்குவதை உலகம் முழுவதும் காண முடியும்.

அத்னானின் மரணத்திற்கு காரணமான இஸ்ரேலை பல நாடுகளின் தலைவர்களும் கண்டித்துள்ளனர். இஸ்ரேலின் இனவெறியை எதிர்ப்பதற்காக ஃபலஸ்தீனியர்கள் கொடுக்கும் பெரும் விலையின் நினைவூட்டலாக அத்னானின் மரணம் அமைந்துள்ளது என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 1992ற்கு பிறகு உண்ணவிரதத்தால் மரணித்த முதல் ஃபலஸ்தீன கைதி காதர் அத்னான் என்பதை நினைவு கூர்ந்த அம்னஸ்டி, இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பல ஃபலஸ்தீனியர்களை போல் இஸ்ரேலின் இனவெறிக்கு ஆளாகி அநீதியை எதிர்கொள்ள வேறெந்த வழிமுறையும் இல்லாதவர் அத்னான் என்றும் குறிப்பிட்டுள்ளது. இனவெறியை அகற்றும் வரை ஃபலஸ்தீனியர்களுக்கு நீதி இருக்காது என்பதற்கான சமீபத்திய நினைவூட்டலே அத்னானின் மரணம் என்றும் தனது விரிவான அறிக்கையில் அம்னஸ்டி குறிப்பிட்டுள்ளது.

அவரின் மரணத்தை படுகொலையாகவே ஃபலஸ்தீனியர்கள் பார்க்கின்றனர். காரணமும் ஆதாரமும் இன்றி ஒரு நபரை பல வருடங்கள் சிறையில் அடைத்து, அவர் பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உடல் நலிவடைவதை நேரடியாகக் கண்டு, உரிய சிகிச்சை அளிக்காமல் அவரின் மரணத்தை வேடிக்கை பார்ப்பதை வேறு எப்படி அழைக்க முடியும்?