குஜராத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முதல்வர் பதவியில் இருந்து விஜய் ரூபானி திடீரென ராஜினாமா செய்துள்ள சம்பவம் குஜராத் அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2016 ஆம் நடைபெற்ற குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று குஜராத்தின் 16 ஆவது முதலமைச்சர் ஆனார் விஜய் ரூபானி. மொத்தம் 182 தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் சனிக்கிழமை குஜராத் ஆளுநரான ஆச்சார்யா தேவ்ரத்தை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் விஜய் ரூபானி. நரேந்திர மோடி மற்றும் அமித்ஷாவின் வலது கரமாக செயல்பட்டு வந்த விஜய் ரூபானியியின் இந்த திடீர் முடிவு இந்திய அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா இரண்டாம் அலையை விஜய் ரூபானி முறையாகக் கையாளவில்லை. இதனால் குஜராத் மாநிலம் பெரும் அழிவை கண்டுள்ளது. இதனால் அவர் மீது குஜராத் மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த சம்பவம் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவே முதல்வரை மாற்றியுள்ளதாக தெரிகிறது. ரூபானி பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று சென்ற வருடமே இணையதளத்தில் ஒரு கட்டுரையாளர் எழுதியதும், அதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு ஓர் ஆண்டிற்கு முன்பாக அப்போதைய பட்டேல் மக்களின் போராட்டம் நடந்து கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டபோது, அதை ஈடுகட்டுவதற்காக அப்போதைய முதல்வர் ஆனந்திபென் பட்டேலையும் பதவியை விட்டு நீக்கினர்.
உத்தர்காண்ட் மாநிலத்தில் இரண்டு முறை, கர்நாடகாவில் ஒரு முறை என பா.ஜ.க முதலமைச்சர்கள் மாற்றப்பட்டதை தொடர்ந்து தற்போது குஜராத்திலும் முதல்வர் மாற்றப்பட்டுள்ளார்.
You must be logged in to post a comment.