குஜராத் 2002: 11 பேர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை

2002 குஜராத் இனப்படுகொலையின் போது நரோடா காம் பகுதியில் முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த 11 நபர்கள் எரித்துப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிக்கையில் 86 நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் வழக்கு விசாரணையின் போது 18 நபர்கள் மரணித்து விட்டனர். ஒருவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்றம் தற்போது குற்றம் சாட்டப்பட்ட ஏனைய 67 நபர்களையும் வழக்கிலிருந்து விடுதலை செய்துள்ளது. குஜராத் முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி, பஜ்ரங் தளத்தின் தலைவர் பாபு பஜ்ரங்கி ஆகியோர் இவர்களில் அடங்குவர்.

சிபிஐ முன்னாள் இயக்குனர் ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவால் விசாரிக்கப்பட்ட ஒன்பது வழக்குகளில் இந்த வழக்கும் ஒன்றாகும். வழக்கின் தீர்ப்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.பக்ஸி வழங்கினார். 97 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட நரோடா பாட்டியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சிலர் இந்த வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். நரோடா பாட்டியா வழக்கில் மாயா கோட்னானிக்கு சிறப்பு நீதிமன்றம் மரணம் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஆனால் குஜராத் உயர் நீதிமன்றம் இத்தண்டனையை ரத்து செய்தது.