குஜராத்: UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 127 நபர்கள் 21 ஆண்டுகள் கழித்து விடுதலை


குஜராத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் கைது செய்யப்பட்ட 127 முஸ்லிம்களை நிரபராதிகள் என்று சூரத் முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்து விடுதலை செய்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டு 21 ஆண்டுகள் கழித்து இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளது யுஏபிஏ சட்டம் குறித்த விவாதங்களை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.
2001இல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தை (சிமி) தடை செய்தது. இதனைத் தொடர்ந்து குஜராத்தின் சூரத் நகரில் ஒன்று குழுமியிருந்த இந்த நபர்களை டிசம்பர் 28 2001 அன்று காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் தடை செய்யப்பட்ட சிமி உறுப்பினர்கள் என்றும் தேச விரோத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாகவும் காவல்துறை குற்றம் சாட்டியது. அனைத்திந்திய சிறுபான்மை கல்வி மையம் என்ற பெயரில் உள்ளரங்கு கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தபோது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மேற்குவங்கம், தமிழ்நாடு, பீகார், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களை சார்ந்தவர்கள் ஆவர். UAPA சட்டத்தின் பிரிவுகள் 3, 10, 13 மற்றும் 15 ஆகியவற்றின் கீழ் இவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
சிமியின் செயல்பாடுகளை முன்னெடுப்பதற்காக இவர்கள் ஒன்று கூடினார்கள் என்ற காவல்துறையின் வாதம் நம்பகமானதாக இல்லை என்று கூறி நீதிமன்றம் இவர்களை விடுதலை செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஏழு நபர்கள் விசாரணை காலத்திலேயே மரணித்து விட்டனர். 5 பேர் வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் இன்னும் சிறையில் உள்ளனர்.
UAPA சட்டத்தின் கடுமையான பிரிவுகள் சேர்க்கப்படுவதற்கு முன்னர் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 21 ஆண்டுகள் கழித்து நூற்றுக்கும் அதிகமானவர்கள் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டுள்ளது UAPA குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பி உள்ளது.
வழக்கு, நீதிமன்றம், விசாரணை என 20 ஆண்டுகளாக அலைந்து தங்களின் வாழ்க்கையை தொலைத்த இவர்களுக்கு இழந்த அந்த நாட்களை மீண்டும் யார் அளிப்பார்கள் என்ற கேள்வியும் பொது சமூகத்தில் எழுந்துள்ளது. தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி என்று தொடர்ந்து கூறி வந்தாலும் துரதிர்ஸ்டவசமாக அதுவே தொடர்கதையாக உள்ளது.