கோவை: கேள்விக்குறியாகும் பத்திரிகை சுதந்திரம்

கோவையில் இருந்து செயல்படும் சிம்பிளிசிட்டி என்ற இணையதள ஊடகத்தின் மீதான அதிகாரவர்க்கத்தின் தாக்குதலானது பத்திரிகை சுதந்திரத்தை மீண்டும் ஒருமுறை கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த 23.04.20 அன்று அந்த ஊடகத்தில் பணிபுரியும் புகைப்படக்கலைஞர் பாலாஜியை கோவை ஆர்.எஸ். புரத்தின் காவல் ஆய்வாளர் கனகசபாபதி மற்றும் ஏசி ராமச்சந்திரன் ஆகியோர் ஒரு புகார் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று கூறி அழைத்துள்ளனர். அதன் பிறகு பாலாஜி குறித்து பேசுவதற்கு நிருபர் ஜெரால்ட் அவர்களையும் மதியம் 12.30 மணி அளவில் கோவை வெரைட்டி ஹால் காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். இருவரையும் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பின் சிம்பிளிசிட்டி ஊடகத்தில் வெளியான செய்திகள் தொடர்பாக உங்களிடம் விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே உங்கள் ஊடகத்தின் உரிமையாளரை வரச் சொல்லுமாறு கூறியுள்ளனர்.

கோவை மாநகரத்தில் ரேஷன் கடைகள் தொடர்பான பதிவையும், கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்ற பதிவையும் எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் பதிவு செய்தீர்கள் என்று விசாரித்துள்ளனர். சிம்பிளிசிட்டி ஊடகத்தில் வெளியான சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.வான திமுகவைச் சேர்ந்த கார்த்திக் அவர்கள் கொடுத்த பேட்டியில், தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி அவர்களை கோவையில் கொரோனோ நிவாரண பணியில் களத்தில் பார்க்கமுடியவில்லை என்று கூறியிருந்தார். இதனை மையமாக வைத்தும் விசாரணை நடைபெற்றதாக சக பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கோவை பத்திரிகை நிருபர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, சிம்பிளிசிட்டி உண்மைக்கு மாற்றமாக அவர்கள் வெளியிடவில்லை. ரேஷன் கடையில் நடைபெறும் பிரச்சனைகளும் குளறுபடிகளும் அனைவரும் அறிந்ததே. அது குறித்து பல்வேறு புகார்களை மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு தரப்பினர் செய்துள்ளனர். மேலும் கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு உணவு பற்றாக்குறை உள்ளது மாவட்ட நிர்வாகத்திற்கும் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் தெரிந்ததுதான் என்றனர்.

விசாரணை என்ற பெயரில் கோவை பத்திரிகை நிருபர்களை சுமார் 8 மணி நேரமாக பிணைக்கைதிகளாக காவல் நிலையத்தில் நிற்க வைத்ததோடு அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஆண்ட்ரு சாம் வந்த பிறகுதான் இருவரையும் விடுவித்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

நிருபர்கள் கைது செய்யப்பட்ட அன்று பத்திரிகை நிருபர்கள் அனைவரும் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மாநகர் காவல்துறை கமிஷனர் ஆகியோரிடம் நேரில் சென்று முறையிட்டனர். அதேபோல் பல்வேறு அரசியல் கட்சி மற்றும் இயக்க தலைவர்களும் அவர்களுக்காக குரல் கொடுத்துள்ளனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட PRO M.முஹம்மது நவ்ஃபல் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் K.ராஜா உசேன் ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியர் திரு ராஜாமணி அவர்களை நேரில் சந்தித்து கைது குறித்த விபரங்களை கேட்டறிந்ததோடு எந்த முகாந்திரமும் இல்லாமல் கைது செய்யப்பட்ட பத்திரிகை நிருபர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும், ஜனநாயகத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாக இருக்கக்கூடிய பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

கோவை மட்டுமல்லாமல் தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரத்தின் மேல் ஒரு மறைமுக தாக்குதல் நடைபெற்று வருவதை சமீபகாலமாக வெளிப்படையாகவே அறியமுடிகின்றது. இதுபோன்ற தாக்குதல்கள் தொடருமேயானால் நமது ஜனநாயகம் கேள்விக்குறியாகும். அரசின் செயல்பாடுகள் குறித்து பத்திரிகைகள் கேள்வி எழுப்பினால் அதற்கு கைது தீர்வல்ல என்பதை அரசு உணர வேண்டும்.