இந்தியாவில் சமூக ஏற்றத்தாழ்வு அதிகமாக உள்ளது என்றும் அரசியல் சாசனத்தின் அடிப்படையே சமத்துவம் தான் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஷ்வர் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிறு அன்று ஆந்திர மாநிலத்தின் சித்தார்த் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சமூக ஏற்றத்தாழ்வு பல காரணங்களால் அனைத்து நாடுகளிலும் உள்ளது என்றும் ஆனால் இந்தியாவில் இது மிக அதிகளவில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கூறிய அவர், இந்த ஏற்றத்தாழ்வு, மதம், சாதி, மொழி, பகுதி மற்றும் இன்ன பிற வரலாற்று காரணங்களால் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். “இந்தியாவில் மட்டும் சமூக ஏற்றத்தாழ்வு இல்லை, பூமியின் சுவர்க்கமாகவும் ஜனநாயகத்தின் மாதிரியாகவும் பார்க்கப்படும் அமெரிக்காவில் கூட சமூக ஏற்றத்தாழ்வு உள்ளது” என்றும் இந்த ஏற்றத்தாழ்வை அகற்றும் வழிகளை இந்திய அரியல் சாசனம் தெரிவிக்கின்றது என்று அவர் கூறியுள்ளார்.
இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 14 மற்றும் 18 ஐ குறிப்பிட்டு இந்திய அரசியல் சாசனத்தின் முக்கிய அம்சமே சமத்துவம் தான் என்று கூறிய அவர், இந்த சட்டப்பிரிவுகள் மக்களின் வாழ்க்கையின் அனைத்து அம்சத்திலும் சமத்துவத்தை உறுதிபடுத்த அரசிற்கு வலியுறுத்துகிறது என்று கூறியுள்ளார்.
மேலும் அரசியல் சாசனம் என்பது வெறும் ஒரு புத்தகமோ அல்லது கட்டுரைகளின் தொகுப்போ அல்ல என்றும் அது ஒரு தேசம், ஒரு சமூகம் தான் வாழத் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முறை என்று அவர் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் இன்றண்டாம் மூத்த நீதிபதியான நீதிபதி செலேமேஷ்வர் கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் தேதி நாட்டின் நீதித்துறை ஆபத்தில் உள்ளது என்று கூறி அதனை மீட்க மக்களிடம் முறையிட்ட நீதிபதிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.