சரிவுக்குள்ளாகும் இஸ்ரேலின் ஆயுத விற்பனை

– அகமது சலீம்

இஸ்ரேலிய நாட்டில் முக்கிய விவாதமாக மாறியிருப்பது அதனுடைய ஆயுதப் விற்பனையாகும். கடந்த மாதம் இஸ்ரேலின் நான்கு ஆயுத நிறுவனங்கள் இஸ்ரேலிய அரசுக்கு பயங்கரமான எச்சரிக்கை ஒன்றை விடுத்தது.

அதில், “ஆயுத விற்பனை கடந்த சில வருடங்களாக மிகப்பெரும் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. வருடத்திற்கு குறைந்தது 1 பில்லியன் அளவுக்கு ஆயுத விற்பனை குறைந்து வருகிறது” என்று சி.இ.ஓ.கள் கூறியுள்ளனர்.

அதோடு, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவுக்கு எழுதிய கடிதத்தில் “2012ம் ஆண்டில் 7.5 பில்லியனாக இருந்த ஆயுத விற்பனை, 2013ல் 6.5 பில்லியனாக குறைந்துள்ளது. அதைத் தொடர்ந்து 2014ம் வருடம் 5.5 பில்லியனாக குறைந்துள்ளது. இந்த ஆண்டு நம்மால் மொத்தம் 4.5 பில்லியன் அளவுக்குத்தான் விற்பனை செய்ய முடியும் என்பதையும் கூறியுள்ளனர்.

உலக அரங்கில் இராணுவ பலமிக்க நாடாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும், இஸ்ரேலிய அரசுக்கு இந்த சரிவு ஈடுகெட்ட முடியாத ஒன்றுதான் என்று சொல்லப்படுகின்றது.

தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் ஆயுத விற்பனை குறைந்து கொண்டேதான் வந்துள்ளது. இதை முன்னின்று விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்களால் சமாளிக்க முடியவில்லை. இது, இஸ்ரேலில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் ஒரு கேள்வியை எழுப்ப உள்ளது. ஆயுத விற்பனை சரிவுக்குள்ளாகியதற்கு என்ன காரணம்?

“மந்தமான பொருளதார சூழல் மற்றும் உலக அளவில் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படாததும் இதற்கு முக்கியக் காரணம். அதேப்போன்று, மற்ற நாடுகள் பண்டமாற்று முறையிலே ஆயுதங்களை வாங்குகின்றன. வளர்ந்து வரக்கூடிய நாடுகள் பழைய ஆயுதங்களை மறுசுழற்சி செய்து, புதிதாக ஆயுதங்கள் தயாரிக்கக்கூடிய மிஷின்களை சொந்தமாக வைத்துள்ளனர். இதுதான், நாம் சந்திக்கக்கூடிய கடுமையான சூழ்நிலைக்கு காரணம்” என்று இஸ்ரேல் கூறுகிறது.

ஆனால், உண்மையான அதுவல்ல. ஃபலஸ் தீன விவகாரத்தில் இஸ்ரேல் நடந்து கொள்ளும் முறை, உலக நாடுகளுக்கு மத்தியில் இஸ்ரேலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதை மறுக்க முடியாது. அது, இஸ்ரேல் நாட்டின் பொருட்களை விற்பனை செய்வதில் தொடங்கி, ஆயுதங்களை வாங்குவது வரை பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு முக்கியக் காரணம், ஃபலஸ்தீன எதிர்ப்பு போராட்டம் ஆயுத ரீதியாக மட்டும் சுருங்கிப் போகாமல், அரசியல் ரீதியாகவும் பிரதிபலித்ததே என்று கூறப்படுகின்றது. அதோடு, உலக அரங்கிற்கு இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனம் வெளிப்பட்டதே மற்றொரு காரணமாக இருக்கின்றது.

இஸ்ரேலின் இந்த ஆயுத விற்பனை சரிவுக்கு பி.டி.எஸ். (Boycott, Divestment and Sanctions – BDS) அமைப்பின் பிரச்சாரமும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது.

இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாக இஸ்ரேலின் உற்பத்தி பொருட்களை புறக்கணிப்பது இருக்கின்றது. அதேப்போன்று, உடன்படக்கூடிய நாடுகளுக்கு இஸ்ரேலின் பொருட்களை தடை செய்யுங்கள் என்று அழுத்தத்தை கொடுப்பது போன்றவைகளை செய்து வருகின்றது.

 அந்த அமைப்பின் கமிட்டி உறுப்பனர் மிக்கேல் பீஸ் கூறும்பொழுது, “ஆயுத சரிவு தொடர்பாக இஸ்ரேலிய நிறுவனங்களின் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மையானது. இதை யாராலும் மறுக்க முடியாது. இதற்கு முக்கியக் காரணம் பி.டி.எஸ்.ஸின் அடித்தட்டு மக்களையும் இணைத்துக் கொண்டு நடத்திய போராட்டமாகும்.

ஃபலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தக்கூடிய தாக்குதல்களை சிவில் அமைப்புகள் ஒருங்கிணைத்து உருவாக்கியுள்ள இந்த அமைப்பின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றோம். இதன்மூலம், பொதுமக்கள் மத்தியில் இஸ்ரேலைப்பற்றி நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் இஸ்ரேலை ஏதாவதொரு வழியில் புறக்கணிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். அதனால், இஸ்ரேலின் தயாரிப்புகளை புறக்கணிக்கின்றனர். இது, சாதாரண மக்களிடம் ஏற்பட்டுள்ள மனநிலையாகும்.

அதேப்போன்று, “இஸ்ரேலுடனான ஆயுத தொடர்பை கொண்டுள்ள நாடுகள், அதனுடைய ஆயுத ரீதியான தொடர்பை குறைத்து வருகின்றன. இதனால், இஸ்ரேலிய நிறுவனங்களின் ஆயுத விற்பனை சரிவுக்குள்ளாகியுள்ளது”என்றார்.

நார்வே மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இஸ்ரேலுடனான இராணுவ தொடர்பை முற்றிலும் தடைசெய்வதாக அறிவித்தன. அதேப்போன்று பிரிட்டன், பரேசில் போன்ற நாடுகளும், இந்த விஷயத்தில் கடுமையான நெருக்கடியை இஸ்ரேலுக்கு கொடுத்து வருகின்றன என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாகும்.

இஸ்ரேல் நாட்டில் அதிக வருவாய் ஈட்டக்கூடிய ஒரு துறைகளில் ஒன்றுதான் ஆயுத விற்பனை.  இஸ்ரேல் தயார் செய்யக்கூடிய புதிய ஆயுதங்களை கள ஆய்வு செய்யக்கூடிய இடமாக ஃபலஸ்தீனையே பயன்படுத்துகின்றது அல்லது பல்வேறு அரபு நாடுகளில் உள்நாட்டுப் பிரச்சனைகளை ஏற்படுத்தி ஆயுதங்களை பரிசோதனை செய்கின்றது. போரில் பயன்படுத்த சில தடை செய்யப்பட்ட சில ஆயுதங்களைக்கூட இஸ்ரேலிய இராணுவத்தினர் ஃபலஸ்தீன மக்கள் மீது பயன்படுத்துகின்றனர். கைது செய்யப்படக்கூடிய ஃபலஸ்தீன இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் பெண்களை கொடுமையான முறையில் சித்திரவதை செய்வது போன்ற மனித உரிமை மீறல்களையும் செய்து வருகின்றது இஸ்ரேல்.

ஜெரூசலம் மற்றும் மேற்குக் கரை சுற்றியுள்ள பகுதிகளையும் தனதாக்கிக் கொள்வதற்காகவும், அல்அக்ஸா பள்ளிவாசலை இஸ்ரேலின் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காகவும் முழுமையான வேலைகளில் இஸ்ரேலிய அரசு இறங்கி உள்ளது.

இதிலிருந்து உலகின் கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு இஸ்ரேலிய அரசால் உருவாக்கப்பட்ட பிரச்சனைகள்தான் சிரியா உள்நாட்டுப் பிரச்சனை, ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸின் கிலாஃபத் முழக்கம் போன்றவைகள் என்றும் கூறப்படுகின்றது.

அத்துடன் ஃபலஸ்தீனிற்கு ஆதரவான போக்கையும் பிரான்ஸ் அரசாங்கம் சில விஷயங்களில் எடுத்தது. இவற்றிற்கும் சமீபத்திய பிரான்ஸ் தாக்குதலுக்கும் ஏதும் தொடர்பு இருக்கிறதா?