சர்வதேச குத்ஸ் தினம்

– ரியாஸ்
ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமை சர்வதேச குத்ஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஃபலஸ்தீன பிரதேசத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலை கண்டித்து அன்றைய தினம் உலகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. முஸ்லிம்கள் மட்டுமன்றி உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தரப்பு மக்களும் இந்த தினத்தை கடைபிடித்து வருகின்றனர். இவ்வருடம், கொரோனா நோய் தொற்று ஏற்படுத்தியுள்ள அசாதாரண சூழலில் அதற்கேற்ப நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. 1979 ரமலான் மாதத்தின் 13வது தினத்தில் தெற்கு லெபனான் மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதல்களை நடத்தின. இதனை தொடர்ந்து அப்போது ஈரானின் ஆட்சியாளராக இருந்த கொமைனீ, இஸ்ரேலின் அத்துமீறல்களை வெளிக்கொணரும் வகையில் ரமலானின் இறுதி வெள்ளிக்கிழமையை குத்ஸ் தினமாக கடைபிடிக்க வேண்டும் என்ற அறிவிப்பை முன்வைத்தார். ஃபலஸ்தீனில் உள்ள ஜெரூஸலம் நகரை அரபியில் அல் குத்ஸ் என்று அழைப்பர்.
முஸ்லிம்களின் முதல் கிப்லாவான (தொழுகையின் போது முன்னோக்கும் இடம்) அல் அக்ஸா, ஜெரூஸலம் நகரில் உள்ளது. ஆப்பிரகாமிய மதங்கள் என்று அழைக்கப்படும் இஸ்லாம், கிறிஸ்தவ மற்றும் யூத மதங்களின் முக்கிய நகராகவும் ஜெரூஸலம் திகழ்கிறது. சிலுவை யுத்தங்கள் மூலம் இந்நகரை கைப்பற்ற கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து சந்தோஷமாக வாழும் நகராக ஜெரூஸலம் திகழ்ந்தது. இஸ்ரேலின் வருகை இந்த அமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
யூதர்களுக்கு தனியாக ஒரு தேசம் அமைய வேண்டும், அதுவும் ஃபலஸ்தீன நிலப்பரப்பில் அமைய வேண்டும் என்ற கோரிக்கையை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் யூதர்கள் முன்வைக்க ஆரம்பித்தனர். தியோடர் ஹெஸில் இதன் முன்னோடியாக பார்க்கப்படுகிறார். உதுமானிய சாம்ராஜ்யத்தின் ஆட்சியாளரான சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீதை சந்தித்து பேரம் பேசினார் ஹெஸில். ஃபலஸ்தீனில் யூதர்களுக்கான தனி தேசத்தை உருவாக்கி தந்தால், சிக்கலில் சிக்கியிருக்கும் உதுமானிய சாம்ராஜ்யத்திற்கு உதவுவதாகவும் ஐரோப்பிய நாடுகளில் உதுமானிய சாம்ராஜ்யத்திற்கு ஆதரவான பிரச்சாரத்தை மேற்கொள்வதாகவும் ஆசை வார்த்தைகளை கூறினார். ஆனால் சுல்தான் அப்துல் ஹமீதின் பதில் ஹெஸிலை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. “குத்ஸ் நிலம் எனக்கு சொந்தமானது அல்ல. அது முழு முஸ்லிம் சமூகத்திற்கும் சொந்தமானது. ஃபலஸ்தீன நிலத்தை தாரை வார்ப்பதை விட எனது உடலில் கூரிய வாளை செலுத்துவது எனக்கு சிறந்ததாக இருக்கும்” என்று கூறினார் சுல்தான். இரண்டு முறை சந்தித்த போதும் ஹெஸிலுக்கு இதே பதில்தான் கிடைத்தது.
இதன் பின்னர் பிரிட்டன் சாம்ராஜ்யத்தை அணுகி தங்களின் கோரிக்கையை முன்வைத்தனர் யூதர்கள். முதலாம் உலகப் போர் முடிவடைந்ததை தொடர்ந்து பால்பர் பிரகடனத்தை இயற்ற வைத்தனர். இதன் மூலம் உதுமானிய சாம்ராஜ்யத்தின் பகுதிகள் பல சிறு நாடுகளாக பிரிக்கப்பட்டு அங்கு கைப்பாவை ஆட்சியாளர்கள் அதிகாரத்தில் நியமிக்கப்பட்டனர். ஃபலஸ்தீன் பூமியை யூதர்களுக்கு வழங்குவதற்கான தொடக்கப் புள்ளியும் குறிக்கப்பட்டது. உலகம் முழுவதும் இருந்து யூதர்கள் ஃபலஸ்தீனிற்கு கொண்டு வரப்பட்டனர். முதலில் அதிக பணம் கொடுத்தும் பின்னர் மிரட்டியும் ஃபலஸ்தீன நிலங்களை யூதர்கள் ஆக்கிரமித்தனர். தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த ஃபலஸ்தீனர்கள் அவர்களின் வீடுகளை விட்டும் நிலங்களை விட்டும் விரட்டப்பட்டனர். இந்த அத்துமீறல்களின் தொடர்ச்சியாக மே 14, 1948 அன்று உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்ற தேசம் திணிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஏறத்தாள ஐநூறு ஃபலஸ்தீன கிராமங்கள் அழிக்கப்பட்டு எட்டு இலட்சம் ஃபலஸ்தீனியர்கள் அகதிகளாக்கப்பட்டனர். இந்நிகழ்வை ஃபலஸ்தீனியர்கள் நக்பா – பேரழிவு என்றழைக்கின்றனர்.
1948இல் 55 சதவிகித நிலப்பரப்பு யூதர்களுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை நிலையான எல்லைக்கோடுகள் இல்லாத ஒரு நாடு உலகில் இருக்குமென்றால் அது இஸ்ரேலாகத்தான் இருக்க முடியும். ஃபலஸ்தீன பிரதேசங்களை தொடர்ந்து ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக் கொள்கிறது இஸ்ரேல். 1950இல் மேற்கு ஜெரூஸலத்தையும் 1967 ஆறு நாள் யுத்தத்தை தொடர்ந்து கிழக்கு ஜெரூஸலத்தையும் தன்னிச்சையாக தன்னுடன் இணைத்தது இஸ்ரேல். காஸா, மேற்கு கரை, சிரியாவின் கோலன் குன்றுகள், எகிப்தின் சினாய் தீபகற்பம் ஆகியவையும் அப்போது ஆக்கிரமிக்கப்பட்டன. ஆனால் சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் பொது கண்காணிப்பின் கீழ் ஜெரூஸலம் நகரம் கொண்டு வரப்பட்டது. அங்குள்ள அல் அக்ஸா பள்ளிவாசலின் பராமரிப்பு மற்றும் நிர்வாகம் ஜோர்டானுக்கு வழங்கப்பட்டது. இருந்த போதும் ஜெரூஸலத்தை முழுமையாக ஆக்கிரமிக்கும் தனது போக்கை இஸ்ரேல் நிறுத்தவில்லை. ஜெரூஸலத்தை முழு யூத நகராக மாற்றும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.
ஜெரூஸலம் நகரில் வாழும் ஃபலஸ்தீனர்களுக்கு இஸ்ரேல் குடியுரிமையை வழங்குவதில்லை. நிரந்தர வசிப்பிட அனுமதி எனப்படும் Permanent Resident Permit அவர்களுக்கு வழங்கப்படுகிறது. பெயரில் நிரந்தரம் இருந்தாலும் இஸ்ரேல் விரும்பும் போது இந்த உரிமையை யாருக்கும் அவர்களால் ரத்து செய்ய முடியும். அந்நகரின் கட்டக்கலைகள் கூட மாற்றியமைக்கப்பட்டு யூத சாயல் பூசப்படுகிறது.
இஸ்ரேலின் அத்துமீறல்களை ஃபலஸ்தீனியர்கள் நித்தமும் எதிர்த்து வருகின்றனர். அல் அக்ஸா பள்ளிவாசலை காப்பதற்கு தங்கள் உயிர்களை பணயம் வைக்கின்றனர். ஃபலஸ்தீனில் உள்ள கிறிஸ்தவர்களின் உரிமைகளை இஸ்ரேல் பறித்து அவர்களின் வழிபாட்டுதலங்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருவதால் ஃபலஸ்தீன கிறிஸ்தவர்களும் இஸ்ரேலை எதிர்த்து வருகின்றனர்.
இச்சூழலில் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து ஜெரூஸலம் நகரை மொத்தமாக இஸ்ரேலுக்கு வழங்குவதற்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. டிசம்பர் 6, 2017 அன்று இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெரூஸலம் நகருக்கு மாற்றும் உத்தரவில் கையெழுத்திட்டார் ட்ரம்ப். இதனை தொடர்ந்து மே 14, 2018 அன்று அமெரிக்க தூதரகம் ஜெரூஸலம் நகரில் தொடங்கப்பட்டது. இதன் மூலம் ஜெரூஸலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தார் ட்ரம்ப். அமையவுள்ள ஃபலஸ்தீன தேசத்தின் தலைநகராக ஜெரூஸலம் இருக்கும் என்பதை ஃபலஸ்தீனியர்கள் தொடர்ந்து கூறி வரும் நிலையில் அவர்களின் உரிமையை முற்றிலுமாக பறிக்கும் செயலை செய்தார் ட்ரம்ப். ஜெரூஸலம் நகரில் அமெரிக்க தூதகரம் தொடங்கப்பட்டதை தொடர்ந்து தங்களின் போராட்டங்களை வலுப்படுத்தினர் ஃபலஸ்தீனியர்கள்.
ட்ரம்பின் அறிவிப்பு கொடுத்த உத்வேகத்தை தொடர்ந்து இஸ்ரேலை யூத தேச அரசாக (nation state) அங்கீகரிக்கும் தீர்மானத்தை தனது நாடாளுமன்றத்தில் ஜூலை 19, 2018 அன்று இஸ்ரேல் நிறைவேற்றியது. இதன் மூலம் இஸ்ரேல் பகுதியில் வாழும் ஃபலஸ்தீனியர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக மாற்றப்பட்டனர். அரபி மொழிக்கு இருந்த சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டு சாதாரண நிலைக்கு மாற்றப்பட்டது. இதன் மூலம் தன்னை முழு இனவாத அரசாக வெளிப்படையாக அறிவித்தது இஸ்ரேல்.
இஸ்ரேல் ஓர் இனவாத சியோனிச அரசு என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. தங்களின் உரிமைகளை மீட்பதற்காக ஃபலஸ்தீனியர்கள் நடத்தும் போராட்டங்கள் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டவை என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. இதனை மக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே சர்வதேச குத்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
தனது தோற்றம் மற்றும் அபகரிப்புகளை மறைப்பதற்கு பொய்களை கூறி வருவது இஸ்ரேலின் வாடிக்கை. இஸ்ரேலின் உருவாக்கத்தை குறித்து குறிப்படும் போது, நிலமற்ற மக்களுக்கு மக்களற்ற நிலம் வழங்கப்பட்டது (Land without people for people without land) என்பார்கள். அதாவது, நாடின்றி தவித்த யூத மக்களுக்கு, மக்கள் இல்லாமல் வெறும் தரிசு நிலமாக இருந்த ஃபலஸ்தீனம் வழங்கப்பட்டது என்ற முழு பொய்யை சிறிதும் தயக்கம் இன்றி கூறுகிறார்கள். இதன் மூலம் ஃபலஸ்தீன பூமியில் யாருமே வாழவில்லை, அங்கு சென்றுதான் யூதர்கள் குடியமர்ந்தார்கள் என்ற கருத்தை நிறுவ முயல்கிறார்கள். இஸ்ரேலின் இந்த பொய் பிரச்சாரத்தை எதிர்கொள்ள ஃபலஸ்தீனியர்கள் பல்வேறு தினங்களை கடைபிடித்து வருகின்றனர். இஸ்ரேல் ஆக்கிரமித்த தங்கள் வீடுகளின் சாவிகளை இன்று வரை பத்திரமாக வைத்து அவற்றுடன் போராடி வருகின்றனர். நீதிக்காகவும் உரிமைக்காகவும் போராடும் ஃபலஸ்தீனியர்களுக்கு நமது ஆதரவை தெரிவிப்பதற்காக சர்வதேச குத்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இனவெறி பிடித்த வெள்ளை ஏகாதிபத்திய தென் ஆப்பிரிக்கா அரசை கண்டித்து உலக மக்கள் தங்கள் கருத்தை பதிவு செய்தனர். இதன் விளைவாக, அந்நாடுகளின் அரசுகளும் தென் ஆப்பிரிக்கா இனவாத அரசிற்கு எதிராக ஒன்று திரண்டனர். இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் இனவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தற்போது இஸ்ரேலுக்கு எதிராகவும் உலக மக்கள் அணிதிரள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதற்கான ஓர் உந்து சக்தியாக குத்ஸ் தினம் அமைய வேண்டும்.
இந்தியாவில் இந்துத்துவ சிந்தனை கொண்ட அரசு ஆட்சியில் அமர்ந்துள்ள நிலையில் சியோனிச அரசுடன் அவர்கள் நெருக்கமான உறவுகளை கொண்டுள்ள சூழலில் இங்கு குத்ஸ் தினத்தை கடைபிடிப்பது முக்கியத்துவம் பெறுகிறது. உலகில் எந்த பகுதியை சார்ந்த யூதர்களும் இஸ்ரேலுக்கு வரலாம், குடியுரிமையை பெறலாம், நிலங்களை வாங்கலாம். ஆனால் தலைமுறை தலைமுறையாக அங்கு வசித்து வரும் ஃபலஸ்தீனியர்களுக்கு அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டு அவர்கள் அகதிகள் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்தியாவில் பாசிச பா.ஜ.க. அரசு கொண்டு வரத்துடிக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தையும் தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் நாம் இத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
அல் அக்ஸா பள்ளிவாசல் சாலமன் கோயிலை இடித்து கட்டப்பட்டது, அதன் மிச்சங்கள் இன்னும் அக்ஸா பள்ளிவாசலின் கீழ் உள்ளன என்று கூறி அகழ்வாராய்ச்சியை நடத்தியவர்கள் சியோனிசவாதிகள். அக்ஸா பள்ளிவாசலை கைப்பற்றி சாலமன் கோயிலை மீண்டும் கட்டுவோம் என்ற பிரச்சாரத்தை அவர்கள் நித்தமும் மேற்கொண்டு வருகின்றனர். இங்கும் பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் இது பின்பற்றப்பட்டதையும் ஏனைய பள்ளிவாசல்களின் பட்டியல் இந்துத்துவாவாதிகளின் கைகளில் உள்ளதையும் நாம் மறந்துவிட முடியாது.
எனவே, மனித குலத்திற்கு எதிரான சியோனிசத்தையும் இந்துத்துவத்தையும் எதிர்ப்பதற்கான உத்வேகத்தை சர்வதேச குத்ஸ் தினம் நமக்கு வழங்கட்டும். நீதிக்கான குரல்கள் ஓங்கி ஒலிக்கட்டும்.