சவூதி அரேபியா IFF நடத்திய “நபிகளாரை நேசம் கொள்வோம்” நிகழ்ச்சி!

0

ஜித்தா: சவூதி அரேபியாவில் வாழும் இந்திய மக்களின் நலனில் அக்கறை கொண்டு அவ்வப்போது விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தி வருகின்றது இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம்.

நபி (ஸல்) அவர்களின் நற்போதனைகளையும் நற்குணங்களையும் ஏனைய மக்கள் அனைவரும் பின்பற்றி வாழ வேண்டும் என்ற நன்னோக்கில் “நபிகளாரை நேசம் கொள்வோம்” என்ற தலைப்பில் இஸ்லாமிய குடும்ப நிகழ்ச்சி மற்றும் சிறார்களுக்கான எழுத்துத் தேர்வு போட்டியென்றை இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் ஜனவரி 16, வெள்ளி மாலை 08:30 மணியளவில் ஜித்தா, ஸரபிய்யாவிலுள்ள லக்கி தர்பார் உள்ளரங்கில் நடத்தியது.

3

முன்னதாக இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரத்தின் உறுப்பினர் மவ்லவி நூருல் அமீன் உலவி அவர்கள் திருமறை குர்ஆனின் வசனங்களை ஓதி நிகழ்ச்சியை இனிதே துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரத்தின் செயற்குழு உறுப்பினர் முஹம்மது வசீம் அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தோர் அனைவரையும் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சி பற்றிய அறிமுக உரையை இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரத்தின் செயற்குழு உறுப்பினர் பஷீர் அஹமது அவர்கள் வழங்கினார். அவரது உரையில், இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரம் ஆற்றி வரும் தன்னார்வப் பணிகளை குறித்து விளக்கினார்.

2

தமிழகத்தில் அறிவகம் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக கடந்த டிசம்பர் 2014- 19, 20 & 21 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சகோதரத்துவ மாநாட்டு நிகழ்ச்சிகளைப் பற்றிய தொகுப்பினை இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரத்தின் ஜித்தா மாகாண செயலாளர் ஷேக் அப்துல்லாஹ் அவர்கள் நிழற்படம் மற்றும் அசைபடம் மூலம் தொகுத்தளித்தார். அவ்வமயம் அழைப்புப் பணியின் அவசியம் குறித்த செய்தியையும் பதிவு செய்தார்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாய் “நபிகளாரை நேசம் கொள்வோம்” என்ற தலைப்பில் ஜித்தா மாகாண இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரத்தின் தலைவர் கே.ஐ.எம். ஷரீஃப் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவரது உரையில் நபி (ஸல்) அவர்களின் பண்பு, குணம், சிறந்த நடைமுறைகள், தலைமைத்துவம், சகோதரத்துவம் என்று எழுத்திலடங்கா பல சிறப்புகளை சுட்டிக்காட்டியதுடன் அவர்கள் மீது நாம் எவ்வாறு நேசம் கொள்ள வேண்டும் என்பதை பல வரலாற்றுச் சுவடுகளுடன் கொடுக்கப்பட்ட விளங்கங்கள் வந்திருந்த அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

அதில் உம்மு அம்மாரா (ரலி) அவர்கள் நபிகள் மீது கொண்ட நேசம் அனைவரது மனதிலும் நம்மால் இப்படி நபிகளாரை நேசிக்க முடியுமா என்ற ஒரு கேள்வியை எழுப்பச் செய்தது என்றால் அது மிகையல்ல. தொடர்ந்து நபி (ஸல்) அவர்களை நம் உயிரினும் மேலாக நேசிக்க வேண்டும் என்பதை எளிய நடையில் அழகிய வரலாற்றுச் சம்பவங்களுடன் எடுத்துரைத்தார்.

முன்னதாக சிறார்களுக்கான நபி (ஸல்) அவர்கள் குறித்த எழுத்துத் தேர்வு அல் நூர் மெடிக்கல் சென்டர் அரங்கில் நடைபெற்றது. இதில் பெரும் ஆர்வத்துடன் எழுபதிற்கும் அதிகமான சிறார்கள் கலந்துகொண்டனர்.

இத்தேர்வில் முதல் பரிசினை மாணவி முஅஃப்ஃபிகா பெற்றார். இரண்டாவது பரிசினை மாணவி தன்சீராவும் மூன்றாவது பரிசினை மாணவர் முஹம்மது ஜாவித் மற்றும் மாணவி சித்தி ஃபாத்திமாவும் பெற்றார்கள்.

வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு, முதல் பரிசினை IFF ஜித்தா மாகாண தலைவர் K.I.M. ஷரீஃப் வழங்கினார். இரண்டாவது பரிசினை IFF ஜித்தா மாகாண செயலாளர் ஷேக் அப்துல்லாஹ் அவர்கள் வழங்கினார். மூன்றாவது பரிசினை IFF செயற்குழு உறுப்பினர் பஷீர் அஹமது அவர்கள் வழங்கினார். கலந்து கொண்ட சிறார்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரத்தின் மாணவரணியினர் நபிகளார் குறித்த பாடல்களை தங்களது இனிய குரல்களில் பாடினர். குழந்தைகளுக்கான போட்டிகளை சகோதரர் இப்னு அப்பாஸ் அவர்கள் நடத்தினார்.

இந்நிகழ்ச்சியினை IFF ஜித்தா மாகாண செயலாளர் ஷேக் அப்துல்லாஹ் அவர்கள் நெறிபடுத்தினார். இறுதியாக IFF செயற்குழு உறுப்பினர் ஷேக் மதார் அவர்கள்  நன்றியுரையாற்றினார்.

நிகழ்ச்சியில் 350க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு பறிமாறப்பட்டது.

இந்நிகழ்ச்சியினை இந்தியா ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரத்தின் தொண்டர்களும், விமன்ஸ் ஃப்ரேட்டர்னிட்டி ஃபோரத்தின் தொண்டர்களும் செவ்வனே நடத்தினார்கள்.

Comments are closed.