சாகித்ய அகாதெமி விருது பெற்ற ‘எஸ்.ரா.’வுக்கு வாழ்த்தும் வேண்டுகோளும்

சாகித்ய அகாதெமி விருது பெற்ற ‘எஸ்.ரா.’வுக்கு வாழ்த்தும் வேண்டுகோளும்

அடியேனது பிரியத்திற்குரிய சகோதரர், அண்மையில் ‘சஞ்சாரம்’ நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது பெற்றவர் எஸ்.ராமகிருஷ்ணன். அவர் எழுதி விகடன் பிரசுரமாக (716) டிசம்பர் 2012இல் வெளிவந்த நூல் ‘எனது இந்தியா’. 464 பக்கங்கள். அந்த நூலில் பக்கம் 205இல் அலாவுதீன் கில்ஜி, மதுவை ஒழித்தது, உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தியது போன்ற பல சாதனைகளைப் பட்டியலிடுவார்.

அந்த நூலில் பக்கம் 63இல் அடியேனது ‘விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள்’ நூலைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். (அண்மையில் அந்த நூலை ‘இலக்கியச்சோலை’ மறுபதிப்பு செய்துள்ளது). ‘எனது இந்தியா’ என்ற அவரது நூலில் பக்கம் 232 முதல் 236 வரை வெளிவந்துள்ள கட்டுரை ‘செருப்பு ஊர்வலம்’. அதில் பக்கம் 234இல் முத்துவீரப்பர் காலத்தில் நடந்த முக்கியச் சம்பவம் பற்றி குறிப்பிடுவதாகச் சொல்கிறார். அவரே தொடர்ந்து சொல்கிறார்: ‘இதை நிரூபணம் செய்யும் சான்று எந்த வரலாற்று ஆவணத்தில் இருக்கிறது எனத் தெரியவில்லை.

‘முகலாயச் சக்கரவர்த்தி ஆலம் கீர் ஔரங்கஜேப் யானையை அலங்கரித்து அதன் முதுகில் பீடம் அமைத்து தங்கத் தாம்பாளத்தில் தனது செருப்பை வைத்து அனுப்புவார்; அதனை எல்லா மன்னர்களும் மதிக்க வேண்டும்’ என்ற கற்பனைக் கதையை விரிவாகவே எழுதியிருப்பார்.

1990களில் நெல்லையிலிருந்து வெளிவரும் ‘ஜமாஅத்துல உலமா’வில் ‘வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்’ எனும் தொடரினை ஏழு ஆண்டுகள் எழுதி நிறைவுற்ற பின் 6.4.1999 இல் அதனை அடியேனே நூலாக வெளியிட்டேன்.

உருவ வணக்கத்தை விரும்பாது, ஏற்காது இஸ்லாமிய மார்க்க நெறிமுறைகளின் படி அரசாட்சி புரிந்தவர் ஔரங்கஜேப். அவர் பிஜப்பூரை 12.9.1686இல் கைப்பற்றினார். 21.09.1687இல் கோல் கொண்டாவும் ஔரங்கஜேப் வழி வந்தது. பேராசிரியர் ஜாதுநாத் சர்க்கார் தனது ஔரங்கஜேப் வரலாற்று நூல் பாகம் IV, 1919 பக்கம் 352இல் இவற்றை தெரிவிக்கிறார். அதே நூலில் 1689 ஜனவரியில் சாம்பாஜி சிறைபிடிக்கப்பட்டது. (பக் 382) ராய்கர் கோட்டையைக் கைப்பற்றியது, 19.10.1689இல் (பக் 404) தக்காணம் முழுவதும் ஔரங்கஜேப் ஆட்சியன் கீழ் வந்தது ஆகிய தகவல்களை குறிப்பிட்டிருப்பார். 1689 இறுதியில்தான் (பக் 406, 407) ஸ்ரீரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர் காலம் கி.பி. 1682-&1689 (W. சத்திய நாத அய்யர் மதுரை நாயக்கர் வரலாறு, 1924, பக்கம் 191, 193)

செருப்பை வணங்கும் கதை குறித்து, வரலாற்றை சுவைபடச் சொல்லும் மனுச்சி எதுவும் கூறவில்லை. ரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர் காலத்தில் இந்த மாதிரியான சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை. இந்தச் சூழ்நிலையில் மேற்கூறிய செருப்புக் கதையின் உண்மை நம்பும் படியாகவே இல்லை. (W. சத்திய நாத அய்யர், முற்கூறிய நூல் பக்கம் 196, 197)

பின் விகடன் பிரசுரம் 755 ஆக அடியேனது நூல் (வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப்) ஆகஸ்ட் 2013இல் வெளிவந்தது. தொடர்ந்து அது பதிப்பிக்கப்பட்டு வருகிறது.

அவைகளை அன்புச் சகோதரர் திரு. எஸ்.ரா. அவர்கள் படித்தறிந்து இனிவரும் காலங்களில் அவரது நூலில் தவறான தகவல்களை நீக்கிடச் செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இது கடந்த காலம். அண்மையில் அவருக்கு ‘சஞ்சாரம்’ நாவலுக்கு விருது கிடைத்துள்ளது; வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன். விருதினை புதுதில்லியில் பெறும் போது ‘தமிழ் மொழி வற்றாத ஜீவநதி’ என்று தமிழர்தம் பெருமையைப் பேசியதற்குப் பாராட்டுக்கள். தமிழர்களின் அடையாளமாகக் கருதப்படும் நாதஸ்வர இசைக்கலைஞர்களின் வாழ்க்கைத் துயரத்தை, வலியைப் பேசும் அற்புதமான நாவலை உயிர்மை பதிப்பகம் தனது 481 வது வெளியீடாக டிசம்பர் 2014இல் 375 பக்கங்களில் வெளியிட்டது. இப்போது கண்ணியத்திற்குரிய சகோதரர் எஸ். ரா. அவர்கள் தாமே நடத்தும் தேசாந்திரி பதிப்பகம் சார்பாகவும் அந்த நாவலை பதிப்பித்துள்ளார்.

சஞ்சாரம் நாவல் 34 தலைப்புகள் கொண்டது. அனைத்தும் ஊர்களின் பெயரே. இரண்டாவது தலைப்பு ‘அநட்டானம்’. பக்கம் 46இல் ‘அப்போது டெல்லியில் பாதுஷா கில்ஜியின் (அலாவுதீன் கில்ஜி) ஆட்சி நடந்து கொண்டிருந்தது. வேசையர் விடுதிகள் யாவையும் தடை செய்துவிட்ட கில்ஜி நகர மெங்கும் ஒருபால் புணர்ச்சியை அனுமதித்திருந்தார். கில்ஜி வெளிப்படையாகவே தனக்குப் பிடித்தமான ஆண்களோடு ஒன்றாகப் பவனி வரவும் பொது இடங்களில் அவர்களது அந்தரங்க உறுப்புகளோடு விளையாடவும் செய்கின்றவராயிருந்தார்” என்று எழுதுகிறார்.

கிஷோரி சரண்லால் மிகுந்த ஆய்வுக்கிடையே 1976இல் வெளியிட்ட 388 பக்கங்களைக் கொண்ட ஆங்கில நூல் Histroy of the Khaljis A.D. 1290-1320, Kishori Saran Lal, Asia Publishing House, New Delhi,அதில் பக்கம் 277இல் கூறுவர் ‘Similarly he put a ban on other evils like incest and adultery.

சென்னைப் பல்கலைக் கழகம் 1963இல் வெளியிட்டு, பல பதிப்புகள் கண்டு 2010இல் வந்துள்ள ‘ஆங்கிலம் -& தமிழ்’ சொற்களஞ்சியம் பக்கம் 9இல் ணீபீuறீtமீக்ஷீஹ் என்ற சொல்லுக்கு கூடா ஒழுக்கம் என்று பொருள் தரப்பட்டுள்ளது. அதே அகராதியில் பக்கம் 521இல் ‘வீஸீநீமீst’ என்ற வார்த்தைக்கு முறைதகாப் புணர்ச்சி, தடை விதிக்கப்பட்ட அணுக்க உறவினரிடையேயான கலவி என்று பொருள் தரப்பட்டுள்ளது.

முறைதகாப் புணர்ச்சியை முற்றிலும் ஒழித்த மன்னர் அலாவுதீன் கில்ஜியைப் பற்றி தங்களது சஞ்சாரம் நாவலில் போகிற போக்கில் சேற்றை இறைப்பது நியாயமா?

தகாப்புணர்ச்சியில் ஈடுபட்டிருந்த குற்றத்திற்காக இஸ்மாயிலி போராக்களை இரு துண்டுகளாக வெட்டிக் கொல்லுமாறு அலாவுதீன் கில்ஜி கட்டளையிட்டதை வரலாற்றில் அறிய முடிகிறது. (டில்லி சுல்தானியத்தின் வரலாறு கி.பி. 1206-&1320 முதல் பாகம், டி.ஆர். ராமச்சந்திரன், பச்சையப்பன் கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் 1977, பக்கம் 357) கே.எஸ். லாலும் தனது புத்தகத்தின் 277வது பக்கத்தில் இத்தகவலை குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றில் தெள்ளத் தெளிவாக அலாவுதீன் கில்ஜி ‘ஓரினச் சேர்க்கை’யை எதிர்த்தவர்; தவறு செய்பவர்களைத் தண்டித்தவர்; அத்தோடு அவர்களை இரு துண்டுகளாக துண்டித்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தகைய அரசர் மீது தாங்கள் ஆதாரமின்றி களங்கச் சேற்றை இரைக்கலாமா? வரும் பதிப்புகளில் அந்தப் பகுதியை தங்களது ‘சஞ்சாரம்’ நாவலில் இருந்து நீக்கிட வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.