சுதந்திரப் போராட்ட விடிவெள்ளி பகத் சிங்

 – இப்னு முகம்மது

1931 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி லாகூர் சிறையில் வழக்கதிற்கு மாற்றமாக பரபரப்பு காணப்பட்டது. எப்போதும் மாலை அடைப்பு 6 மணிக்குத்தான் துவங்கும். ஆனால் அன்றோ சிறையதிகாரிகள் சிறைவாசிகளை விரைந்து கொட்டறைகளில் அடைக்க ஆரம்பித்தனர். சிறிது நேரத்திற்குள் சிறையில் முடித்திருத்தும் தொழிலாளியான பர்கத் என்பவர் ஒவ்வொரு கொட்டறையாகச் சென்று தனக்கு இரகசியமாக கிட்டிய அச்சோகச் செய்தியை அறிவித்தார். சிறிது நேரத்திற்குள்ளாக லாகூர் சிறையெங்கும் அச்செய்தி காட்டுத்தீ போல் பரவி சிறையை சோகத்திலும், இருளிலும் ஆழ்த்தியது.

‘நாளை காலை தூக்கிலிடப்பட இருந்த விடுதலைப் போராட்ட தியாகிகளான பகத்சிங், ராஜகுரு மற்றும் சுக்தேவ் ஆகிய இளைஞர்கள் வெள்ளையரால் இன்று மாலை 7 மணிக்கே தூக்கிலிடப்பட உள்ளனர்’ என்பதே அச்செய்தி.

பகத்சிங்கிற்கு புத்தகம் வாசிப்பது என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று அதிலும் “கம்யூனிஸம்” மற்றும் “புரட்சி” சார்ந்த புத்தகங்கள் என்றால் உயிர். அன்று மாலை பகத்சிங்கை சந்திக்க வருகைப் புரிந்திருந்த அவரின் வழக்கறிஞர் மேத்தா பகத்திங்கிற்கு புரட்சிகர லெனின் என்ற புத்தகத்தை பரிசளித்தார்.

எந்த மக்களின் விடுதலைக்காக அந்நிய ஆட்சியினருக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டேனோ, அம்மக்களிற்காக நாளை காலை உயிர் துறப்பது என்பது எனக்கு மகிழ்ச்சியே! இன்று சில மணித்துளிகளே என் வாழ்வில் மீதமுள்ள நிலையில் பொன்னான அந்நேரத்தை வீணாக்காமல் புதிய புத்தகத்தைப் படித்து அறிவை விருத்தியாக்குவோம்” என்றெண்ணி அப்புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தார்.

பகத்சிங் ஒரு சிறுகுறிப்பு

1907 ம் ஆண்டு செப்டம்பர் 28ம் நாள் பகத் சிங் பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தார். தந்தை இஷன் சிங் மற்றும் மாமா சுவ்ரன் சிங் ஆகியோர் விடுதலைப் போராட்ட வீரர்கள். எனவே பகத்சிங் இயல்பிலேயே புரட்சிப் பாதையை தேர்ந்தெடுக்க வளர்ப்பும் சூழலும் உதவியது. 1923ல் லாகூர் நேஷணல் கல்லூரியில் இணைந்தார். கல்லூரியில் தனது புரட்சிக்கான சிந்தனைகள் மற்றும் மாணவர் போராட்டம் போன்ற களங்களின் மூலம் 16 வளயதிலேயே முழுமையாக தேசிய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

சந்திரசேகர் ஆசாத் என்பவர் இந்துஸ்தான் குடியரசு அமைப்பு (HSRA) எனும் போராட்ட இயக்கத்தின் முக்கிய அமைப்பாளராக இருந்தார். பகத்சிங்கிற்கு ஆசாத்துடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. 1924ல் கான்பூரில் வைத்து HSRA வில் இணைந்தார். அதன் பின் பகத்சிங்கின் பாதை புரட்சி மற்றும் ஆயுதப் போராட்டத்தின் மூலம் தேச விடுதலை என்று சென்றது. பகத்சிங்கின் வேகத்தை கண்டு அஞ்சிய அவரது தந்தை திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார். ஆனால் தேச விடுதலையே தன் தலையாய பணி என்று கூறி வீட்டை விட்டு வெளியேறினார்.

1928 சைமன் குழுவும் சாண்டர்ஸன் படுகொலையும்

1928 ம் ஆண்டு ஆங்கிலேயன் சைமன் என்பவரின் தலைமையில் பாராளுமன்ற குழு ஒன்று இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வருகை புரிந்தது. இந்தியாவிற்கு தன்னாட்சி வழங்குவது குறித்து ஆராய்வதற்காக அக்குழு வந்துள்ளது என்று கூறப்பட்டாலும் அது ஒரு கண் துடைப்பாகவும், இந்தியாவில் முழு சுதந்திரம் வேண்டி எழும் குரல்களை நீர்த்து போகச் செய்வதற்காகவுமே அக்குழு அமைக்கப்பட்டது. அக்குழு 1928 ம் ஆண்டு அக்டோபர் 30 ம் தேதி லாகூர் வந்தடைந்தது. ரயில் நிலையத்தில் அக்குழுவை எதிர்த்து ஐனநாயக முறைப்படி தங்கள் எதிர்பை காட்டுவதற்காக லாலா லஜபதிராய் உடன் இணைந்து பகத்சிங்கும் அவரது HSRAஅமைப்பைச் சேர்ந்தவர்களும் ஒன்று கூடினர்.

சைமன் குழு ரயில் நிலையத்திலிருந்து வெளியேறும் சமயம் பகத்சிங் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் அவர்களை முற்றுகையிட்டு ‘சைமன் திரும்பிச் செல்’ ‘முழுச் சுதந்திரமே எங்கள் இலக்கு’ என்று கோஷம் எழுப்பினர். இது அங்கு கண்காணிப்பு பணியிலிருந்த காவல்துறை அதிகாரி ஸ்காட்டுக்கு கோபத்தை ஏற்படுத்தவே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கடும் தடியடிப் பிரயோகம் நடத்த உத்தரவிட்டார்.

 பகத்சிங் உள்ளிட்ட இளைஞர்கள் கலைந்து போகாமல் தடியடியை எதிர்கொண்டு சிறிதும் அசையாமல் நின்ற இடத்திலேயே கோஷமெழுப்பினர். எனவே தடியடி மேலும் அதிகமானது. இத்தாக்குதலில் லஜபதிராய் படுகாயமுற்று ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பகத்சிங் உட்பட அனைவரையும் இச்சம்பவம் அதிர்ச்சிகுள்ளாக்கியது. தங்கள் கண்முன் நடந்த இக்கொடூரத் தாக்குதலைக் கண்டு இளைஞர்களின் கண்கள் சிவந்து இரத்தம் சூடேறியது. லஜபதிராய் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். 17 நாட்களுக்கு பிறகு ராய் மருத்துவமனையில் இறந்தார்.

இப்படுகொலைக்கு பகரமாக பழிக்குப் பழி வாங்க ஏகுகீஅ இளைஞர்கள் முடிவு செய்தனர். டிசம்பர் 17, 1928 பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள், லஜபதிராய் படுகொலைக்கு காரணமான கண்காணிப்பாளர் ஸ்காட்டை கொலை செய்ய சென்று தவறுதலாக துணைக் கண்காணிப்பளர் ÷ஐ.பி. சாண்டர்ஸை கொலை செய்தனர். ஆள் மாறிய போதும், அந்நிய ஆட்சிக்கு அவர்கள் விடுத்த செய்தி தெளிவாக இருந்தது. எதிரிகளும் அதனை உணர்ந்து அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

பகத்சிங்கும் பாசிச இந்துத்துவவாதிகளும்

லாலா லஜபதி ராய் அடிப்படையில் இந்துத்துவ கொள்கையுடையவர். 1920களிலேயே “ இந்திய தேசம் இந்து மற்றும் முஸ்லிம்களுக்கு என்று இரண்டாக பிரிக்கப்பட வேண்டும்” என்று வாதிட்டவர். அவரது அரசியலில் வகுப்புவாதம் மிகுந்திருந்தது. எனினும் அவர் காங்கிரஸில் ஒரு மதிப்புமிக்க தலைவராக கருதப்பட்டார்.

பகத்சிங் மற்றும் HSRA இயக்கத்தினர் ஒரு பொது நோக்கத்திற்காகவே சைமன் குழுவை எதிர்ப்பதற்காக லாகூர் ரயில் நிலையத்தில் ஒன்று கூடி லஐபதிராயுடன் இணைந்து போராடினர். என்றாலும் பகத்சிங் ஒரு போதும் லஜபதிராயின் இந்துத்துவ கொள்கையை ஏற்றுக்கொண்டதில்லை. பகத்சிங் படித்த நேஷனல் கல்லூரி  லஜபதிராய் நடத்தியதாகும். முன்பே பகத்சிங்கிற்கு அவருடன் அறிமுகமிருந்தது. சமூகத்தில் இந்துத்துவ கொள்கை மற்றும் லஐபதி ராயின் செயல்பாடுகள் குறித்து விமர்சிக்க வேண்டிய தருணத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். லஜபதிராயும் HSRA போன்ற புரட்சி இளைஞர்கள் குறித்து விமர்ச்சித்துள்ளார்.

இந்துத்துவ கொள்கையை போற்றும் லாலா லஜபதி ராய் வெள்ளையரால் தாக்கப்பட்டு 17 நாட்கள் மருத்துவமனையிலிருந்த போதும் பாசிச இந்துத்துவவாதிகள் அவர் தாக்கப்பட்டதற்காக வெள்ளையரை பழிவாங்கவில்லை. ஒரு சிறு தாக்குதல்கூட வெள்ளையருக்கு எதிராக தொடுக்கவில்லை. இதிலிருந்தே அவர்கள் எந்தளவிற்கு வெள்ளையருக்கு கீழ்ப்படிந்து செயல்பட்டனர், தங்கள்  கொள்கையைச் சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்ட போதும் கூட வெள்ளையரை பழிவாங்கியதில்லை என்பதும் வரலாற்று உண்மை.

எந்த இளைஞர்களை லஜபதிராய் விமர்ச்சித்தாரோ அவர்கள்தான் அவரின் கொலைக்காக தங்கள் இன்னுயிரை பணயம் வைத்து பழிக்கு பழி வாங்கினர். ஆனால் இன்று இந்துத்துவவாதிகள் தங்கள் நிகழ்ச்சிகளில் வைக்கப்படும் பெரிய பேனர்களில் பகத்சிங் உருவ படத்தைப் பிரசுரித்து வரலாறு தெரியாத இளைஞர்களை தங்கள் இயக்கத்தில் கவர சதி செய்கின்றனர். உண்மை என்னவெனில் பகத்சிங் தன் இறுதி  மூச்சு உள்ளவரை பாசிச இந்துத்துவாதிகளை எதிர்த்து போராடினார்.

புரட்சியா தீவிரவாதமா?

பகத்சிங் செய்த பழிவாங்கல் ஆங்கிலேயர் கூறுவது  போல் தீவிரவாதமல்ல. ஏனெனில் அடக்கியாளும் அரசுகள் தங்களுக்கு எதிராக எழும் நியாயமான, ஜனநாயக ரீதியான குரல்கள் அனைத்தையுமே தீவிரவாதம் என்று முத்திரை குத்தி மக்களின் கவனங்களை திசை திருப்ப எண்ணுகின்றனர். ஆனால் தீவிரவாதத்திற்கும், புரட்சிக்கும் மத்தியில் பெரிய வேறுபாடு உண்டு.

தீவிரவாதம் என்பது ஒரு நபரோ, அரசோ அல்லது இயக்கமோ தனது சுயலாபத்திற்காக மக்களை  அச்சுறுத்தி, அழிவுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு நாசகர வேலைகளில் ஈடுபடுவதாகும். அச்செயலால் எவ்வித ஆக்கப்பூர்வமான விளைவுகள் ஏற்படுவதில்லை. நாசம் மற்றும் அச்சுறுத்தல் இரண்டு மட்டுமே பிரதானம். அதன் மூலம் ஒரு சமூகத்தையோ, மக்களையோ அடக்கியாள்வது தீவிரவாதம். ஆனால் புரட்சி என்பது வேறு.

புரட்சி என்பது மக்களுக்கு நீதி, சமாதானம் மற்றும் பொருளாதார ரீதியில் சம முன்னேற்றத்தை வழக்காடி ஒரு நிறுவப்பட்ட அரசையோ அல்லது அரசியல் அமைப்பையோ முற்றிலும் நீக்கி நீதி, சமாதானத்தின் அடிப்படையில் புதிய அரசை, அரசியல் முறையை நிறுவுவதற்காக மக்களை அணி திரட்டி, விழிப்புணர்வு அடையச் செய்து ஜனநாயகம் மற்றும் அரசியல் ரீதியான எல்லா வழிமுறைகளிலும் போராடுவதாகும். இதில் சுயநலமின்றி மக்கள் நலன், சமூக நலன், சமூக நீதி மட்டுமே பிரதானமாக இருக்கும்.

பழிக்குப் பழி தீர்வாகுமா?

பழிக்குப் பழிவாங்குதல் தீர்வாகுமா? ஒருவரைக் கொல்வதால் என்ன பெரிய மாற்றம் வந்திடப்போகிறது? இது தீவிரவாதமாகாதா?

இல்லை நிராயுதபாணிகளாக ஐனநாயக ரீதியில் போராடிய மக்கள் மீது காவல்துறையினர் பலப்பிரயோகம் செய்து வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு ஒரு முதிய மனிதரைக் கொன்றதே தீவிரவாதம். வெள்ளையர் அரசு இந்திய மக்களை அச்சுறுத்த வேண்டும், எவரும் சுதந்திரத்திற்காக போராடக்கூடாது. அதை மீறி போராடினால் விளைவு இப்படித்தான் இருக்கும் என்று உணர்த்தவே அப்படுகொலையை நிகழ்த்தினர். இவ்வன்முறைக்கு பதிலடி வழங்கி அவர்களின் தீமையின் பலனை அவர்கள் உணரச் செய்து, தீமையிலிருந்து விலகிட வேண்டி தம் கரத்தால் தடுப்பது புரட்சியின் ஒரு பகுதியாகும்.

கொலையுண்ட சாண்டர்ஸன் தனி நபரல்ல, தீவிரவாதத்தை கட்டவிழ்த்துவிட்ட ஆங்கிலேய அரசின் ஓர் பிரதிநிதி. கொலைக்கு பின் பகத்சிங் வெளியிட்ட அறிக்கையில் “ஒரு மனிதனின் இறப்பிற்காக வருந்துகிறோம். ஆனால் இம்மனிதன் குரூரமான, கீழான ஒரு அரசின் பிரதிநிதியாவார். உலகில் மிக சர்வாதிகாரமான அரசான பிரிட்டீஷ் இந்தியாவின் ஏஜெண்ட் ஆவார் இறந்த இம்மனிதர். ஒரு மனித உயிரின் இரத்தம் சிந்தியதற்காக வருந்துகிறோம். ஆனால் அனைவருக்கும் விடுதலையைக் கொண்டுவரும் புரட்சியில், மனிதனை மனிதன் சுரண்டுவதை தடுப்பதற்காக தனிநபர்களின் தியாகம் தவிர்க்க இயலாதது” என குறிப்பிட்டார்.

சாண்டர்ஸ் சம்பவத்திற்கு பிறகு பகத்சிங் மற்றும் தோழர்கள் லாகூரிலிருந்து தப்பி கல்கத்தா வந்தடைந்தனர்.

கருப்புச் சட்டங்களுக்கு எதிராக பகத்சிங்

1929 ம் ஆண்டு ஆங்கிலேய அரசு இரண்டு கருப்புச் சட்டங்களை  பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முனைந்தது. அதில் பொது பாதுகாப்பு சட்டம் என்பது மிகுந்த அடக்குமுறைகள் கொண்டதாக, போதிய ஆதாரமின்றி எவரையும் கைது செய்யவோ, சிறையிலடைக்கவோ காவல்துறைக்கு அதிகாரம் வழங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இன்று மத்திய அரசு கொண்டு வந்துள்ள UAPA என்ற கருப்புச் சட்டத்தை போன்றது அன்றைய பொது பாதுகாப்புச் சட்டம் எனவே அச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எந்த பாராளுமன்றத்தில் அச்சட்டங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றதோ அங்கு பெரும் சப்தத்தை எழுப்பக்கூடிய கையெறி குண்டுகளை வீசி வெடிக்கச்  செய்து அதன் மூலம் செவிடர்கள் போன்று நடிக்கும் ஆட்சியாளர்களின் செவிகளை திறக்கச் செய்யவும், மக்களின் கவனத்தை ஈர்த்து அச்சட்டத்தின் தீமைகளை  வெளி உலகிற்கு விளக்கிடவும் பகத்சிங் மற்றும் HSRA இயக்கத்தினர் முடிவு செய்தனர்.

பகத்சிங் பலிகடா ஆக்கப்படல்

பாராளுமன்றத்தில் நடத்தப் போகும் போராட்டத்திற்கு HSRA இயக்கத்தினர் ஆலோசனை சபை கூட்டி விவாதித்த போது முதலில்  வேறு இரண்டு நபர்களே அப்பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் இயக்கத்தின் மூளை என்று கருதப்பட்ட சுக்தேவ் தான், பகத்சிங் இப்பணியை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு பின் ஒரு காரணமுமிருந்தது. சாண்டர்ஸன் கொலைக்கு பின்பு இயக்கத்தில் பகத்சிங் ஒரு முக்கிய நபரானார். மேலும் அவரது செயல் வேகமும் நுண்ணறிவும் அவரை  விரைவில் பிரபலப்படுத்தியது. பகத்சிங்கின் இவ்வசுர வளர்ச்சி சுக்தேவை அச்சுறுத்தியது. எனவே ஆபத்து வாய்ந்த இப்பணியில் பகத்சிங்கை ஈடுபடுத்துவதன் மூலம் தனக்கு நிகராக வளர்வதை தடுத்து அவரை ஆட்டத்திலிருந்து நீக்கிவிடலாம் என்று எண்ணினார். ஆனால் விதி சுக்தேவையும் சேர்த்து வீழ்த்தியது.

பகத்சிங் சாண்டர்ஸன் கொலையில் ஈடுபட்ட முக்கிய நபர். இச்சமயத்தில் பாராளுமன்றத்தில் கையெறி குண்டுகளை வீசி தப்பியோடாமல் அங்கேயே நின்று அரசிற்கு எதிராக கோஷம் எழுப்பி, துண்டு பிரசுரங்களை வீசுவது என்பது தற்கொலைக்கு சமம். எனினும் பகத்சிங் இப்பணிக்கு அதன் ஆபத்தை உணர்ந்து, இதனால் தனக்கு மரண தண்டனை கிடைக்கும் என்று அறிந்தே சம்மதித்தார்.

பகத்சிங் பாராளுமன்றத்தில்

1929, ஏப்ரல் 10ல் பகத்சிங் மற்றும் பி.கே. தத் ஆகிய இளைஞர்கள் இந்திய பாராளுமன்றத்தில் கையெறி குண்டுகளை வீசியும், பிரிட்டீஷ் அரசு நிறைவேற்றப்படவுள்ள கருப்புச்சட்டங்களுக்கு எதிராக கோஷமெழுப்பியும், துண்டுப்பிரசுரங்களை வீசியும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் பகத்சிங்தான் சான்டர்ஸன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்பதை அறிந்த போது அதிர்ச்சியடைந்தனர். HSRA இயக்கத்தினர் நாடெங்கும் கைது செய்யப்பட்டனர். சுத்தேவ், ராஜ்குரு மற்றும் பகத்சிங் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பிரிட்டீஷ் இந்திய நீதிமன்றங்களில் நீதி கிடைக்காது என்பதை உணர்ந்த அவர்கள், வழக்கு நடைபெற்ற சமயத்தில் நீதிமன்ற குற்றவாளிக் கூண்டையே தங்கள் பிரச்சார மேடையாக பயன்படுத்தி ஆங்கிலேயே அரசின் தீமைகளை, அநீதிகளை உலகிற்கு வெட்ட வெளிச்சமாக்கினர். இதனால் கண்துடைப்பு விசாரணை நடத்தி பகத்சிங்கை விரைவில் தூக்கிலிட வேண்டும் என்று அரசு ஆர்வம் காட்டியது. எனவே குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு போதிய வாய்ப்பு வழங்காமல் வழக்கை துரித வேகத்தில் நடத்தி பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுத்தேவுக்கு மரண தண்டனையும் மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை முதல் 10 ஆண்டு தண்டனை வழங்கி நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

சிறை சீர்த்திருத்தத்திற்காக போராட்டம்

பிரிட்டீஷ் இந்தியாவில் சிறையில் கூட வெள்ளையர், இந்தியர் என பாகுபாடு காட்டப்பட்டது. ஆங்கிலேயே குற்றவாளிகளுக்கு எல்லா சலுகைகளும் வழங்கப்பட்டன. அதே சமயம் இந்தியர்கள் சிறையில் அடிமைகள் போன்று நடத்தப்பட்டனர். கடுமையான வேலை, சுகாதõரமில்லாத உணவு, போதிய மருத்துவ வசதியின்மை, படிப்பதற்கோ, எழுதுவதற்கோ சுதந்திரமின்மை என்று சிறையில் காட்டுச் சட்டம் நடைமுறையிலிருந்தது. எனவே இக்கொடுமைகளை எதிர்த்து பகத்சிங்கும், தோழர்களும் தொடர் உண்ணாவிரதம் இருந்ததே சாதனையாக  கருதப்பட்டது. 116 நாட்கள் தொடர் உண்ணாவிரதத்திற்கு பின் உறுதி குலையாது பகத்சிங் உயிருடன் இருந்தது அவரது மனவுறுதிக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

 பகத்சிங்கின் மனித உரிமைப்போராட்டத்திற்கு தேசமெங்கும் ஆதரவு பெருகவே இறுதியில் வேறுவழியின்றி பிரிட்டீஷ் அரசு பணிந்தது. இந்திய சிறைவாசிகளையும் கண்ணியத்துடனும், அவர்களின் மனித உரிமைகளை மதிக்கும் விதமாகவும், சுகாதாரமான உணவு வழங்கவும் அரசு சம்மதித்தது. தனக்கு மரணதண்டனைக்கு நாள் குறிக்கப்பட்ட நிலையிலும் எஞ்சிய நாட்களில் சுகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கழிக்காது போராட்டத்திலும், பசியிலும், துன்பத்திலும் கழித்து புரட்சியாளர்களுக்கு ஒரு மிகச்சிறந்த வழிகாட்டியாக மாறினார்.

மரண தண்டனைக்கு எதிராக

தொடர் போராட்டத்தின் காரணமாக வெளிஉலகில் பத்திரிகைகளின் வாயிலாக பகத்சிங்கின் புகழ் பரவியது.  அவரை தூக்கில் போடக்கூடாது என்ற குரல் இந்தியாவெங்கும் ஓங்கி ஒலித்தது. பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர்களான முகமது ஆலம் மற்றும் கோபிசந் ஆகியோர் பகத்சிங்கை தூக்கிலிட எதிர்ப்பு தெரிவித்து தங்கள் பதவியை இராஜினாமா செய்தனர்.

பாராளுமன்றத்தில் முகமது அலி ஜின்னா போன்ற தலைவர்கள் பகத்சிங்கை தூக்கிலிட எதிர்ப்பு தெரிவித்து வீரமிக்க உரையாற்றினார்கள். ஆனால் ஆங்கிலேயே அரசு சிறிதும் செவிமடுக்கவில்லை. அச்சமயத்தில் ஆங்கிலேயே வைசிராய் இர்வின் பிரபுவிற்கும் காந்திக்கும் இடையில் அரசியல் ரீதியான ஒப்பந்தத்திற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. எனவே நாட்டு மக்கள் அனைவரும் பகத்சிங் தூக்கிலிடப்படாமல் காந்தி காப்பாற்றுவார் என்று எண்ணினர்.  கோரிக்கை விடுவித்னர். சில வரலாற்றாய்வாளர்கள், காந்தி வலியுறுத்தி பேசியிருந்தால், ஒப்பந்தத்திற்கான நிபந்தனையாக பகத்சிங் தூக்கை ரத்து செய்ய கோரியிருந்தால், இர்வின் பிரபு மரணதண்டனையை ஆயுள் தண்டணையாக குறைத்திருப்பார் என்று பதிவு செய்துள்ளனர். பின்னாளில் இர்வின் பிரபுவின் செயலாளர் ஹெர்பர்ட் எமர்ஸன் தனது குறிப்பில் காந்தி வெறும் கோரிக்கை மட்டுமே வைத்தார். நிபந்தனை ஏதும் விதிக்கவில்லை, எனவே காந்தியின் மிதமான கோரிக்கையை வைஸ்ராய் பொருட்படுத்தவில்லை எனும் கருத்திற்கேற்ப அன்று நடந்தவைகளை பதிவு செய்துள்ளார். எனினும் பத்திரிகையாளரான குல்தீப் நய்யார், காந்தி பகத்சிங்கை காப்பாற்ற தன்னால் இயன்றதை செய்தார் என்று குறிப்பிடுகிறார்.

லட்சிய மரணம்

தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்பாக திடீரென மாலை சிறை அலுவலர் பகத்சிங் முன் தோன்றி இன்றே தூக்கு என்று அறிவித்த போது, பகத்சிங் மனம் கலங்கவில்லை. தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடிவிட்டு புன்முறுவலுடன் அவருடன் தூக்கு மேடைக்குச் சென்றார். ஒரு லட்சியவாதி மரணத்தை கண்டு அஞ்சமாட்டான் என்பதை பகத்சிங் வாழ்ந்து கட்டினார். அவரது உறுதி, பக்குவம் நம்மை வியக்க வைக்கிறது. தூக்கு மேடைக்குச் செல்லும் போது ‘நாங்கள் சுதந்திரம் பெறும் போது அந்தாள் வரும்,

இவ்வானமும், பூமியும் எங்களுடையதாக இருக்கும்

ஷஹீதுகளின் மண்ணறைகளில் மக்கள் ஒன்று கூடுவர்.

தங்களின் நிலத்திற்காக உயிர் துறந்த அனைவரையும் நினைவு கூர்வதற்காக!

என்று பாடியவர்களாக சென்றனர். அவர்களின் குரல் சிறையெங்கும் எதிரொலித்தது இன்றும் எதிரொலிக்கின்றன. அவர்களின் உடலைக் கூட பெற்றோரிடம் வழங்காமல் சட்லஜ் நதிக்கரையில் வைத்து எரியூட்டினர். அன்று “பொது பாதுகாப்பு சட்டம்” UAPA போன்ற கருப்புச்சட்டத்திற்கு எதிராக போராடிய பகத்சிங் இன்று இருந்திருந்தால் UAPA போன்ற கருப்புச்சட்டத்திற்கு எதிராகவும், குஜராத் படுகொலைகளுக்கு எதிராகவும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஆதரிக்கும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகவும் பேராடியிருப்பார்.

(விடியல் ஆகஸ்ட் 2014ல் வெளியான கட்டுரை)

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று குறிப்புகள் அனைத்தும் குலதீப் நய்யார் எழுதிய என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.