சுவிட்சர்லாந்தில் முகத்திரைகளுக்கு தடை

முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் எனப்படும் முகத்திரைகள் உள்ளிட்ட முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு சுவிட்சர்லாந்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் 7 அன்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 51.2 சதவிகித மக்கள் தடைக்கு ஆதரவாகவும் 48.8 சதவிகித மக்கள் தடைக்கு எதிராகவும் வாக்களித்தனர். சுவிட்சர்லாந்தின் வலதுசாரி கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி மதவாதத்தை தடுக்க வேண்டும் என்று கூறி இந்த கோரிக்கையை முன்வைத்தது. சுவிஸ் அரசாங்கம் இதற்கு எதிராக இருந்த போதும் வாக்கெடுப்பில் பெரும்பான்மை மக்கள் முகத்திரைக்கு தடை விதிக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தெருக்கள், கடைகள் மற்றும் உணவகங்களில் மக்கள் முகத்திரையை அணிவதற்கான தடை என்று கூறப்பட்டாலும் முஸ்லிம்களை குறிவைத்தே இத்தடை கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. சுவிட்சர்லாந்தின் 86 இலட்சம் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் ஐந்து சதவிகிதம் உள்ளனர். அவர்களில் 30 பெண்கள் மட்டுமே நிகாப் அணிவதாக லுகர்னே பல்கலைக்கழகம் தனது ஆய்வில் குறிப்பிடுகிறது. ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமோஃபியா எனும் இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்பே இது போன்ற சட்டங்களுக்கு காரணமாக கூறப்படுகிறது. ஏற்கெனவே பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகள் பெண்கள் பொது வெளியில் நிகாப் மற்றும் பர்தா அணிவதற்கு தடை விதித்துள்ளன. சுவிட்சர்லாந்தின் இந்த சட்டத்தில் இஸ்லாம் குறித்து நேரடியாக கூறப்படாவிட்டாலும் ஊடகங்களும் இதனை ஆதரித்து பிரச்சாரம் செய்பவர்களும் இதனை ‘பர்தா தடை’ என்றே குறிப்பிடுகின்றனர்.
உடல் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக அணியப்படும் முகத்திரைகளுக்கு இத்தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இத்தடை தெரு வன்முறைகள் மற்றும் முகத்தை மறைத்து வன்முறையில் ஈடுபடும் கால்பந்தாட்ட குண்டர்களை தடுக்கும் என்று தடைக்கு ஆதரவான சிலர் கூறினாலும் இத்தடை அரபு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கையை குறைத்துவிடும் என்று சுற்றுலாத்துறையை சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.
2009இல் சுவிட்சர்லாந்தில் மினாராகளை கட்டுவதற்கு தடை கோரி அதில் வெற்றியும் அடைந்த எகர்கின்கன் கமிட்டியே 2016இல் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. மினாராகளை மத மற்றும் அரசியல் இஸ்லாத்தின் அடையாளம் என்று கூறி வலதுசாரி கட்சிகள் இத்தடைக்கு ஆதரவாக இருந்தன. சுவிட்சர்லாந்தில் உள்ள மொத்தம் 150 பள்ளிவாசல்கள் மற்றும் தொழுகை நடைபெறும் இடங்களில் வெறும் நான்கு மினாராகள் மட்டுமே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.