சோட்டா ராஜன் – உளவுத்துறை ஏஜென்சிகளின் உற்றத்தோழன்!

இந்தோனேஷியாவில் வைத்து கைது செய்யப்பட்ட சோட்டா ராஜன், தாவூத் இப்ராஹீமின் ‘டி’ கம்பெனியின் தகவல்களை பெறுவதற்காக இந்திய உளவுத்துறை ஏஜென்சிகளின் உபகரணமாக செயல்பட்டவர்.
தாவூதின் வலது கரமாக செயல்பட்ட சோட்டா ராஜன், மும்பை குண்டுவெடிப்பை தொடர்ந்து தாவூதிடமிருந்து பிரிந்தார்.பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியாவில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதால் தாவூதிடமிருந்து சோட்டா ராஜன் பிரிந்ததாக ராஜனுக்கு தேசப்பற்றாளர் பட்டத்தை கொடுத்து இந்தியாவில் ஒரு கதை பரப்புரை செய்யப்பட்டது. ஆனால், சோட்டா ஷக்கீல், சரத் ஷெட்டி ஆகியோருக்கு ‘டி’ கம்பெனியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ராஜன் பிரிந்தார் என்று ‘டி’கம்பெனி மற்றும் மும்பை க்ரைம் ப்ராஞ்ச் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தாவூதுடன் முரண்பட்ட சோட்டா ராஜனை இந்திய உளவுத்துறை ஏஜென்சிகள் நன்றாக பயன்படுத்திக்கொண்டன. துபாயில் இருந்து ராஜன் வெளியேறவும் உதவி செய்தன. பின்னர் தாவூதிடமிருந்து பிரிந்த ராஜன், தான் ஒரு தேசப்பற்றாளர் என்று தன்னைத்தானே புகழ்ந்துகொண்டார். அடுத்து ‘டி’ கம்பெனிகளின் பொருளாதார வளங்கள் மீது ராஜன் குறி வைத்தார். ஈஸ்ட் வெஸ்ட் ஏர்வேஸ் உரிமையாளர் தகியுத்தீன் வாஹித் உட்பட பல தொழிலபதிபர்கள் படுகொலைகளும் சோட்டா ராஜனின் அசைன்மெண்டாகவே கருதப்படுகிறது.

’டி’ கம்பெனி சம்பந்தப்பட்ட தகவல்களையெல்லாம் ஐ.பிக்கும்,’ரா’வுக்கும் சோட்டா ராஜன் அளித்துவந்தார். 2005-ஆம் ஆண்டிலும் அதற்கு பிறகும் ஷார்ப் ஷூட்டர்களான விக்கி மல்ஹோத்ரா, ஃபரீத் தனாசா ஆகியோரை பயன்படுத்தி இண்டலிஜன்ஸ் ஏஜன்சி தாவூதை கொலைச் செய்ய முயற்சித்தது.ஒருமுறை பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட இருவரும் கடைசி நிமிடத்தில் வாபஸ் பெறப்பட்டனர்.

2005-ஆம் ஆண்டு துபாயில் வைத்து நடந்த தாவூத் மகளின் திருமண நிகழ்ச்சியில் ஊடுருவி அவரை கொலைச் செய்யவேண்டும் என்பது அவர்களது திட்டம்.அதற்காக டெல்லியில் உள்ள ஐ.பி அலுவலகத்தில் ரகசியமாக தங்கவைக்கப்பட்டிருந்த சோட்டா ராஜன் குழுவினரை மும்பை போலீஸ் கைது செய்து அந்த முயற்சியை முறியடித்தது குறிப்பிடத்தக்கது.