டெல்லி: தொடரும் கைது படலம்

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலிலும் டெல்லி காவல்துறை தனது கைது படலத்தை நிறுத்தவில்லை. தற்போதுள்ள சூழலை பயன்படுத்தி சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டவர்களை டெல்லி காவல்துறை தொடர்ந்து கைது செய்து வருகிறது. ஜாமிஆ மில்லியா மாணவர்கள் ஸஃபூரா ஸர்கர் மற்றும் மீரான் ஹைதர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ஜாமிஆவின் முன்னாள் மாணவர்கள் அமைப்பின் தலைவர் சஃபியுர் ரஹ்மானும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் அனைவரும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (யு.ஏ.பி.ஏ.) கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஜாமிஆ ஆராய்ச்சி மாணவி ஸஃபூரா கர்ப்பமாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்ட சஃபியுர் ரஹ்மானை டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு கைது செய்தது. டெல்லியில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற கலவரத்தில் இவருக்கு தொடர்புள்ளதாக கூறி காவல்துறை யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைது செய்தது. மேற்கொண்டு இவரிடம் விசாரணை செய்வதற்காக பத்து நாள் காவல்துறை கஸ்டடியை நீதிமன்றம் வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலர் தாஹிர் ஹூஸைனும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரில் இச்சட்டத்தில் பா.ஜ.க. அரசாங்கம் கொண்டு வந்தது. அதன் பிரகாரம் தனி நபர்களையும் தீவிரவாதிகளாக பாவிக்கும் திருத்தம் இச்சட்டத்தில் கொண்டு வரப்பட்டது. இது யாரையும் குறிவைத்து கொண்டு வரப்படவில்லை என்று பா.ஜ.க. கூறிய போதும் தற்போது சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இச்சட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக கைது செய்யப்படுகின்றனர்.