தனியுரிமை (Privacy) அரசியல் சாசனம் வழங்கும் அடிப்படை உரிமை: உச்ச நீதிமன்றம்

தனியுரிமை (Privacy) தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இதில் தனியுரிமை என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியல் சாசனம் வழங்கும் அடிப்படை உரிமை என்று ஒருமனதாக நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். மேலும் இந்த தனியுரிமை சுதந்திரம் குடிமக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை அரசிடம் இருந்து பாதுகாக்கும் என்று கூறியுள்ளனர்.

இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள், இந்திய அரசியல் சாசனப்பிரிவு 21 இன் கீழும் பகுதி 3 இன் கீழும் தனியுரிமை சுதந்திரம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று கூரியுள்ளனர். மேலும் இதற்கு முன்னதாக MP ஷர்மா மற்றும் கரக் சிங் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் தனியுரிமை அடிப்படை உரிமை இல்லை என்று வழங்கப்பட்ட தீர்ப்பை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது இது சட்டத்தின் அடிப்படையில் சரியானதல்ல என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் தனியுரிமை என்பது அறுதியா ஒன்று அல்ல என்றும் அது தேச பாதுகாப்பு முதலிய விஷயங்களில் இதன் மீது தேவையான கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்றும் அதுவும் ஒவ்வொரு வழக்கை பொறுத்து மாறும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆதார் தொடர்பாக மத்திய பாஜக அரசு வாதிடுகையில் தனியுரிமை என்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை அல்ல என்று நீதிமன்றத்தில் வாதிட்டது. இந்நிலையில் தற்போது ஆதார் திட்டத்தின் கீழ் தனி மனிதனின் கைவிரல் ரேகை, கருவிழி ரேகை முதலிய தகவல்களை சேமிப்பது குறித்து மற்றொரு பெஞ்ச் முடிவு செய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு திட்டங்களை பெறவோ அல்லது வேறு எதற்குமோ ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தற்போதைய இந்த தீர்ப்பு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காலத்தில் தொழில்நுட்ப ரீதியிலான கண்காணிப்புகளில் இருந்தும் குடிமக்களை பாதுகத்துள்ளது, மேலும் ஒவ்வொரு தனிமனிதனுக்கு உணவுச் சுதந்திரத்தையும் வழிபாட்டுச் சுதந்திரத்தையும் உறுதி செய்துள்ளது. தற்போது தேசத்தின் பல மாநிலங்களில் உணவுப் பழக்கவழக்கங்களில் (மாட்டிறைச்சி) அரசு கட்டுப்பாடு விதித்திருக்கும் நிலையில் அந்த கட்டுப்பாடு மீதான இந்த தீர்ப்பின் தாக்கத்தை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.