பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்த ஸ்ரீரவீந்திர நாராயண் ரவி எனப்படும் ஆர்.என்.ரவி இயற்பியலில் முதுகலைப் பட்டத்தை நிறைவு செய்துவிட்டு பத்திரிகை துறையில் பணியாற்றியுள்ளார். பின்னர் 1976 ஆம் ஆண்டு இந்திய காவல் பணிக்குத் தேர்வாகி கேரளாவில் பணியாற்றினார். பின்னர் மத்திய அரசுப் பணியிலும், உளவுத்துறையிலும் பணியாற்றியுள்ளார். 2012 ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்று பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வந்தவர், பிரதமர் அலுவலகத்திலும் பணிபுரிந்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு கூட்டு புலனாய்வுக்குழுவின் தலைவராகவும், 2018 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராகவும் பணியாற்றினார். 2019 ஆம் ஆண்டு நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அங்கு நாகா போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, சமரச தீர்வை கொண்டு வர முயற்சித்த என ஆன்.என்.ரவியின் செயல்பாடுகள் பல்வேறு விமர்சனங்களை பெற்றன.
நாகலாந்தில் பா.ஜ.க. கூட்டணிக் கட்சிதான் ஆட்சியில் உள்ளது. ரவியை இடமாற்றம் செய்தது தொடர்பாக, அம்மாநில தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியின் தலைவர் அளித்த ஒரு பேட்டியில், “பெரும்பான்மை மக்களால் தேர்வு செய்யப்பட்ட எங்கள் அரசாங்கத்தில் ஆளுநர் ரவி தொடர்ச்சியாக தலையிட்டு வந்தார். அவரை இடமாற்றம் செய்தது எங்களுக்கு ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது” என்கிறார். இவரை தமிழ்நாட்டிற்கு ஆளுநராக நியமித்து அது ஏன் என்ற கேள்வி இப்போது எழுகிறது.
நாகாலாந்தில் உள்ள நாகா போராட்டக் குழுக்களுடன் ஆர்.என்.ரவி பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளார். அவர்கள் தனி நாடு கோரிக்கையை முன்வைக்கின்றனர். கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று அம்மாநிலத்தில் உள்ள 75 சதவிகித இடங்களில் சுதந்திர கொடி ஏற்றப்படவில்லை. தேசிய இனங்களின் விடுதலை, அதன் அடையாளம், உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதுதான் அம்மக்களின் கொள்கைளாக உள்ளன. அப்படிப்பட்ட போராட்டக் குழுவுடன் ஆர்.என்.ரவி பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் மேற்கொண்டதில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுகிறது.
நாகா போராட்டக் குழுவினருடன் இரட்டை ஒப்பந்தங்களை ஆளுநர் ஆன்.என்.ரவி போட்டுள்ளதை, போராட்டக் குழுவினர் கூறியுள்ளனர். அதாவது, பேச்சுவார்த்தையின்போது போராட்டக் குழுவினருடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் தனிக்கொடி, சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை ஏற்றுக் கொண்டதாக ஒன்றும் பிரதமர் மோடியிடம், நாம் சொன்னதை அவர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டதாக வேறு ஓர் ஆவணமும் கொடுத்துள்ளார். மோசடியான இந்த ஆவணம் ஜனநாயகத்துக்கு விரோதமாக உள்ளது. தேசிய இனங்களின் எழுச்சி பா.ஜ.க-வின் ஒற்றை இந்தியா என்ற கனவு முழக்கத்துக்கு எதிராக உள்ளது. தேசிய இனங்களின் எழுச்சியை ஒடுக்கும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ போன்ற கட்சிகளும் புதிய ஆளுநராக முன்னாள் காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரி ஒருவரை நியமிப்பது மூலம் மற்ற மாநிலங்களைப் போல் தமிழக அரசியலை சீர்குலைக்க பாஜக அரசு முயல்வதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
புதிய ஆளுநர் நியமனத்தின் மூலம் ஒன்றிய அரசு, தமிழகத்தில் எண்ணற்ற குழப்பங்களை ஏற்படுத்தி தமிழக அரசை சீர்குலைக்க முயல்வதாக பரவலாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
You must be logged in to post a comment.