தேசப் பக்த பட்டமும் கோட்சேவும்

1982 ஆண்டு ரிச்சர்ட் அன்ட்டன்பரோவின் இயக்கத்தில் வெளிவந்த காந்தி என்னும் திரைப்படம் காந்தியின் வாழ்க்கையை மிகவும் தத்ரூபமாக பதிவு செய்து உலக அளவில் பேசப்பட்டது. காந்தி ஏன் சுட்டு கொல்லப்படுகிறார் என்பதை இத்திரைப்படத்தில் ஏனோ விளக்கவில்லை. காந்தியின் இப்படுகொலை சம்பவம் பல ஆண்டுகாலமாக மறைக்கப்பட்டே வந்திருக்கிறது.

இன்றைக்கு கூட பள்ளிப் பாடங்களில் கோட்சே என்ற ஒற்றை மனிதன் காந்தியை சுட்டுக் கொன்றான் என்பதோடு முடித்துக் கொள்வார்கள். ஆனால் நாதுராம் கோட்சே என்பவன் தனிமனிதனல்ல, அவனுக்கு பின்னால் வெறிபிடித்த

சித்தாந்தவாதிகள் இருந்து இயக்கினார்கள் என்பதை வரலாறு நமக்கு பதிவு செய்கிறது.

ஆனால் இந்த வரலாற்று உண்மைகளை 66 ஆண்டகாலமாக மறைத்த சங்க பரிவாரங்கள் இன்றைக்கு அந்த உண்மையை ஒப்புக் கொள்கிறார்கள்; மட்டுமல்லாமல் அதனை நியாயப்படுத்துகிறார்கள். காந்தியை கொன்ற கோட்சே தேச பக்தனாம்! பா.ஜ.க., எம்.பி சாக்சி மகாராஜ் என்ற சாமியார் கூறுகிறார். அதோடு விடவில்லை. நாடு முழுவதும் கோட்சேயின் சிலைகளை நிறுவப்போவதாக எகானமிக் டைம் என்ற இதழுக்கு இந்து மகா சபா தலைவர் சந்திர பிரகாஷ் கௌசிக் பேட்டி கொடுக்கிறார்.

இது போதாதென்று, ஜனவரி 30 அன்று கோட்சே குறித்த திரைப்படம் ஒன்றையும் வெளியிடுவதாக இந்து மகா சபை அறிவித்துள்ளது. இத்தனை வருடங்களாக கோட்சேவிற்கு சிலை எழுப்ப திராணி இல்லாத இந்த கும்பலுக்கு இப்பொழுது அடித்த யோகம், இப்படியெல்லாம் பேசச் நொல்லுகிறது.

அதிகார போதை கண்களை மறைக்கும் என்பார்கள். நாட்டின் தேசப் பிதா என்று போற்றப்படும். காந்தியை கொன்றக் கொடியவன் கோட்சேயை தேச பக்தன் என்கிறார்கள். நாடே கொந்தளிக்கிறது. அடுத்து சில நாட்களில் இன்னொருவன் சிலை எழுப்ப போகிறோம் என்கிறான். இந்த செய்திகளை எல்லாம்  பா.ஜ.க அரசு சொல்லித்தான் செய்கிறார்களோ என்கிற எண்ணம் நமக்கு தோன்றுகிறது.

நாதுராம் கோட்சே யார்? அவன் ஏன் காந்தியை கொலை செய்ய வேண்டும்? இன்றைய இளைய சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த பதிவு.

நாதுராம் கோட்சே புனே மாவட்டம் பாரமதியில் பிறந்தவன். இவனுடைய தந்தை வினாயக் வாமன்ராவ் கோட்சே ஒரு தபால் அலுவலக ஊழியர். கோட்சேவும் அவன் சகோதரர்களும் சிறு வயது முதலே தீவிர ஹிந்துத்துவ பார்ப்பன சித்தாந்தத்தை நேசிக்கக்கூடியவர்களாகவே வளர்ந்தார்கள். அதுதான், அவன் காந்தியை படுகொலை செய்ய காரணமாக இருந்தது. அவனுடைய தம்பி கோபால் கோட்சேக்கும் காந்தி கொலை வழக்கில்  14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

காந்தியை கோட்சே கொன்றதை ஏதோ எதிர்பாராத ஒற்றை மனிதனின் வெறுப்பாக பார்க்கக் கூடாது. காந்தியை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டு பல அமர்வுகள் சிந்தித்து மிகுந்த பொருளாதாரத்தை செலவு செய்து பலமுறை அது தோல்வியை தழுவி இருக்கிறது. இச்சதி திட்டத்திற்குப் பின்னால், மிகப்பெரிய கும்பல் செயல்பட்டுக் கொண்டிருந்தது என்பது இங்கு நினைவு கூறத்தக்கது.

இறுதியாக கோட்சே, ஜனவரி 30, 1948 அன்று மாலை நேரம் பிரார்த்தனை கூட்டத்தில் காந்தியை மண்டியிட்டு வணங்குவது போல பெரேட்டா என்னும் இத்தாலிய அரைத் தானியியங்கி கை துப்பாக்கியால் காந்தியை மூன்று முறை சுட்டுக் கொலை செய்தான்.

முன்னூறு முதல் நானூறு பேர் கொண்ட கூட்டத்தின் முன்னிலையில் திறந்த பகல் வெளிச்சத்தில் கோட்சே காந்திஜியின் மீது சுட்டான். உடனே, கோட்சே தப்பி ஓடுவதற்கு முயற்சி செய்யவில்லை. அதற்கு அவசியம் இல்லை. தனது கையில் ‘இஸ்மாயில்’ என்று அவன் பச்சை குத்தி இருந்தான். இதன் காரணமாக கூட்டத்தில் உள்ளவர்கள் அவனை எப்படியும் கொன்று விடுவார்கள். தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்படுவார்கள் என்ற எண்ணத்திலேயே அவன் இவ்வாறு கையில் பச்சை குத்திக் கொண்டான்.

கோட்சே என்பவன் கருவியாகத்தான் இருந்தான். அவனை இயக்கும் சக்தி ஆர்.எஸ்.எஸ். என்பது மூடி மறைக்கப்பட்டது. அதற்கு காரணம் அன்று காங்கிரசில் இருந்த ஹிந்துத்துவ ஆதரவாளர்களின் நெருக்குதல்.

காந்தியின் படுகொலையை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். நாடு முழுவதும் இனிப்புகள் வழங்கி கொண்டாடியது ஒரு புறம். மறுபுறம் காந்தியை கொன்றது ஒரு முஸ்லிம் என்று சொல்லி கலவரத்தில் ஈடுபட்டு பல அப்பாவி முஸ்லிம்களின் உயிர்களை எடுத்தனர். இதில் நேரு, பெரியார் போன்றோர் தலையிட்டு உண்மையை சொல்லியிருக்காவிட்டால், நாடு மிகப் பெரிய பேர் அழிவை சந்தித்திருக்கும். எனவே சங்கபரிவாரத்தின் இரண்டு சூழ்ச்சிகள்  அன்றைக்கு நிறைவேறவில்லை.

தேசத்தந்தை மரணம் இதுவரை பேசப்பட்டதாக தெரியவில்லை. காந்தியை நான் ஏன் கொன்றேன் என நிதிமன்றத்தில் கோட்சே கொடுத்த வாக்குமூலம் பின்னர் ‘மே இட் பிளீஸ் யுவர் ஹானர்’ என்ற தலைப்பில் அவனின் தம்பி கோபால் கோட்சேவால் 1977ல் வெளியிடப்பட்டது. பாகிஸ்தானிற்கு சேர வேண்டிய 55 கோடி ரூபாயை கொடுக்க காந்தி வற்புறுத்தினார். இதற்காகத்தான் காந்தி கொலை செய்யப்பட்டார் என்று கூறப்பட்டாலும் தங்களின் அகண்ட இந்து ராஜ்ஜிய சிந்னைக்கு காந்தி எதிர்ப்பாக இருப்பார் என்பதை இந்துத்துவவாதிகள் உணர்ந்தாலேயே அவரை கொலை செய்தனர்.

இப்புத்தகத்தில் பார்ப்பனியத்தையும் ஹிந்துத்துவத்தையும் பாதுகாக்க தன் உயிரை துச்சமென கருத வேண்டும் என கோட்சே குறிப்பிடுகிறான். இதில் வேடிக்கை என்னவென்றால், காந்தியை ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் தங்கள் சுய லாபத்திற்கு போற்றலாம். அவர்களின் அரசியல் பிரிவு பி.ஜே.பி. தங்கள் அரசியல் தந்திரத்திற்காக வானளாவ புகழலாம். ஆனால், கோட்சே காந்தியை இந்து விரோதி எனவும் அவர் இந்தியாவில் வாழ தகுதி அற்றவர் என்றும் அந்தப் புத்தகத்தில் குறிப்பிடுகிறான்.

உலகப் புகழ்பெற்ற தலைவரை கொலை செய்ய ஒரு தனி நபரால் எப்படி முடியும் என்ற கேள்விக்கு இன்று விடை கிடைத்திருக்கின்றது. “கோட்சேவிற்கு நாங்கள்தான் (ஆர்.எஸ்.எஸ்)  துப்பாக்கி வழங்கினோம். டெல்லி, மும்பைக்கு விமானத்தில் பறந்து செல்ல பண உதவி செய்ததும் நாங்களே. அதேப்போன்று ஹிந்துத்துவா வெறியை மக்களிடம் ஊட்ட பத்திரிகை நடத்த உதவியதும் நாங்களே” என்று சாக்சி மகாராஜின் வார்த்தையை கொண்டு உலகம் இவர்களை புரிந்து கொண்டுள்ளது.

காந்தியின் கொலையில் சாவர்க்கரின் பங்கு

ஆரம்பம் முதல் காந்தியை கொலை செய்யும் திட்டத்தின் சூத்திரதாரியே சாவர்க்கர்தான். கோட்சே என்பவனை இயக்கியவர்   சாவர்க்கர். அதேபோல், கோட்சே சாவர்க்கரைதான் தன்னுடைய மானசீக குருவாக ஏற்றுக் கொண்டிருந்தான். இதனை மெய்ப்பிக்கவே காந்தி கொலையில் தனக்கு மட்டுமே பங்குள்ளது என்று ஆணித்தரமாக கூறினான். கோட்சே நீதிமன்றத்தில் என்ன மாதிரி வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்பது உட்பட அனைத்தையும் சாவர்க்கர் பார்த்துக் கொண்டார். இதனடிப்படையில் 1949 பிப்ரவரி 10 சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பை வாசித்தார். அதன்படி, நாதுராம் கோட்சேவிற்கும், நாராயண ஆப்தேவிக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. விஷ்ணு கர்கரே, மதன் லால் பாவா, கோபால் கோட்சே, சங்கர் கிச்திய, டாக்டர் பச்சுரே ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், சாவர்க்கர் விடுவிக்கப்பட்டார்.

இந்த தீர்ப்பை கேட்ட அனைவரும் சாவர்க்கரின் காலில் விழுந்து வணங்கினார்கள். எவ்வளவு மரியாதை வைத்திருந்தால் அவர்கள் காலில் விழுந்திருக்க வேண்டும். அதே விசுவாசம்தான் இன்றைக்கு பாராளுமன்றத்தில் அவரை புகைப்படமாக அமர வைத்திருக்கிறது.

காந்தி படுகொலையில் குற்றவாளியான சாவர்க்கரின் புகைப்படம் கடந்த பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியின் போது பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டது. தற்போதைய ஆட்சியில் கோட்சேயின் சிலை நாடு முழுவதும் வைக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இந்த இழிநிலை ஏற்படாமல் தடுக்க வேண்டியது மதச்சார்பற்ற சக்திகளின் கடமையாகும். கோட்சேயை வெளிப்படையாகவே ஆதரிக்கும் போக்கு உருவாகியுள்ள நிலையில், சுதந்திர இந்தியாவின் இந்த முதல் தீவிரவாதியையும் அவன் சõர்ந்த இயக்கத்தையும் அதன் தற்போதைய வார்ப்புகளையும் அனைவருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டியது தேச நலனில் அக்கறை கொண்ட அனைவரின் கடமையாகும்.

அதன் அடிப்படையில் 1994ல் ஃப்ரண்ட்லைன் இதழுக்கு கோட்சேயின் சகோதரன் கோபால் கோட்சே கொடுத்த பேட்டியை இங்கு மீண்டும் பதிவு செய்கிறோம்.

 

BOX NEWS

 

“நாதுராம் ஆர்.எஸ்.எஸ்.சை விட்டு வெளியேறவில்லை”

 

நீங்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சார்ந்தவரா?

நாங்கள் சகோரர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்.ல் இருந்தவர்கள்தாம். நாதுராம் (கோட்சே) பட்டாரிய்யா நான், கோவிந்த் ஆகிய நாங்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்.ஐ சார்ந்தவர்களே. நாங்கள் எங்கள் வீடுகளில் வளர்ந்ததைவிட ஆர்.எஸ்.எஸ்.ஸில்தான் அதிகமாக வளர்ந்தோம்.

நாதுராம் (கோட்சே) ஆர்.எஸ்.எஸ்.ஸில் இருந்தாரா? அவர் ஆர்.எஸ்.எஸ்.ஐ விட்டு விலகிடவில்லையா?

நாதுராம் ஆர்.எஸ்.எஸ்.ல் (காரியவாஹ்)  செயலாளராக இருந்தான். அவன் காந்தி கொலை வழக்கில் கொடுத்த வாக்குமூலத்தில் தான் ஆர்.எஸ்.எஸ்.ஸிலிருந்து விலகி விட்டதாகக் குறிப்பிடுகின்றõர். அவர் அப்படி சொன்னதற்கு காரணம் ஆர்.எஸ்.எஸ்.ன் அப்போதைய தலைவர் கோல்வால்கரும், ஆர்.எஸ்.எஸ்.ஸும், காந்திஜியின் கொலைக்குப்பின் பயங்கர கொடுபிடிகளுக்கு ஆளாகி நின்றார்கள். ஆனால், நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ்.ஐ விட்டு வெளியேறவில்லை.

அண்மையில் அத்வானி, கோட்சேவுக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸிற்கும் சம்பந்தமில்லை என்று கூறி இருக்கின்றாரே?

நான் அவருக்குப் பதில் சொல்லி இருக்கிறேன், மறுத்திருக்கிறேன். அதில் அத்வானி  சொல்வது கோழைத்தனம் எனக் கூறி இருக்கிறேன். நீங்கள் ஒன்றை வேண்டுமானால் சொல்லலாம். “நீ போய் காந்திஜியை கொலை செய்” என்று ஆர்.எஸ்.எஸ். கூறிடவில்லை. ஆனால், அவரைக் (கோட்சேயை) கைவிடுவது சரியல்ல. இந்து மகாசபை அவரைக் கைவிடவில்லை. 1944ம் ஆண்டு முதல் இந்து மகா சபைக்காகப் பணி செய்யத் தொடங்கினான். அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலும் பணி செய்யத் தொடங்கினான். ஆர்.எஸ்.எஸ்.ல் காரியவாஹ் என்ற அறிவுதுறை செயலாளராகவும் இருந்தான்.

காந்திஜியைக் கொலை செய்யும் திட்டம் எப்போது போடப்பட்டது?

நாதுராம் இந்துராஷ்டிரா என்ற நாளிதழின் ஆசிரியர். பத்திரிகையின் ஆசிரியர் என்ற அளவில் அவனுக்கோர் டெலிபிரிண்டர் இருந்தது. அதில் அவனுக்கு ஒரு செய்தி வந்தது. அந்த செய்தி காந்திஜி அடுத்தநாள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறியது. (காந்திஜி பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாயை இந்திய அரசு தந்திட வேண்டும் என்பதற்காகவே அன்று உண்ணாவிரதம் இருக்கவிருந்தார்.

இந்தப் பணம் பாகிஸ்தானுக்கு இந்திய அரசு கொடுக்க வேண்டியது. ஆனால், காஷ்மீர் பிரச்னை தீரும் வரை அந்தப் பணத்தை பாகிஸ்தானுக்கு தருவதில்லை என இந்திய அரசு முடிவு செய்திருந்தது) காந்திஜிக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டியதுதான் என்ற எண்ணம் நாதுராமுக்கு தோன்றியது. அதுதான் திருப்புமுனை.

ஆனால், அதற்கு முன்னால் பல சூழ்நிலைகளிலும் காந்திஜியைக் கொலை செய்ய வேண்டும் என எண்ணி இருக்கலாம். அகதிகள் முகாமில் அப்படியொரு எண்ணம் தோன்றி இருக்கலாம். அவர்தாம் நமக்கு இந்த அவலங்களைக் கொண்டு வந்தவர். அதனால், அவரை ஏன் கொலை செய்யக்கூடாது? இதுபோன்ற சிந்தனைகள் பலமுறை தோன்றி இருந்தது.

மேகங்கள் சூல் கொண்டு ஒரு திசையில் ஒதுங்குகின்றன. இதனால், அடுத்த 15 நிமிடத்துக்குள் மழை பொழியும் என நாம் நினைக்கிறோம். அந்த மழையும் பெருமழையாய் அமையும் எனக் கருதுகிறோம். ஆனால், நடப்பவை வேறாக இருக்கின்றன. பெருங்காற்று வீசுகின்றது. எந்தத் திசையிலிருந்து என்பது நமக்குத் தெரியவில்லை. அத்தனை மேகத்தையும் அழைத்துச் சென்றுவிடுகின்றது. அந்த மழைக்கு என்ன தேவைப்பட்டது? ஒரு குறிப்பிட்ட சீதோஷ்ண நிலை. ஒரு குறிப்பிட்ட அளவு உஷ்ணம். இவை அந்த மேகங்களோடு இருந்திட வேண்டும். அப்போதுதான் அந்த மேகக்கூட்டம் மழையைப் பொழியும்.

ஆகவே சதிக்குமேல் சதிகள் என சதிகள் நடந்திருக்கலாம். கலைந்து சென்றிருக்கலாம். ஆனால், எல்லா சூழ்நிலைகளும் சரியாக இருந்தால் அந்தச் சதிகள் பலனளிக்கலாம். சதிகாரர்களைப் பொறுத்தவரை பலன் தந்தது என்பதுதான் பொருள். சதியை நிறைவேற்றிட முடிந்தது. இலக்கை அடைய முடிந்தது என்பனவாகும்.

சாவர்க்கருக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

இப்படியொரு கேள்விக்கே இடமில்லை. நாங்கள் அனைவரும் அவரை எங்களுடைய ‘குரு’ என பாவித்து பேசிக் கொண்டிருந்தோம். நாங்கள் அவருடைய எழுத்துக்களையும் படிப்போம். நாங்கள் சாவர்க்கரை முழுமையாக புரிந்து கொண்டோம் என்று கூறினால், இதனை செய்ய வேண்டும் என்று அவரிடம் அனுமதி கேட்பது மடத்தனமாக தெரியும். ஞ்

(ஆதாரம்: ஃப்ரண்ட்லைன், ஜனவரி 28, 1994)