தேசம் மறந்த தலைவர் அபுல்கலாம் ஆசாத்

 – நியாஸ்

இந்தியாவில் வாழ்ந்த அனைத்து சமூக மக்களையும் அரவணைத்து சென்று, புதிய ஒரு அரசியல் சரித்திரம் படைத்த மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்களை  நினைவுபடுத்தும் விதமாகவும், இத்தருணத்தில் அவரின்  ஆளுமைகள் பற்றி இன்றைய இளைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடனும் இக்கட்டுரை எழுதப்படுகிறது.

பண்டித ஜவஹர்லால் நேரு, மௌலானா அபுல் கலாம் ஆசாத்  இவ்விரு தலைவர்களிடையே அநேக ஒற்றுமை இருக்கின்றது. இவர்கள் இருவரும் ஒத்த வயதுடையவர்கள்; ஒரே கோணத்தில் பிரச்சனைகளை கையாளுபவர்கள்; இரண்டு தலைவர்களும் சமூக தூரநோக்கு பார்வையுடையவர்கள். மௌலானாவின் 125வது வருட பிறந்த தினம் நவம்பர் 11. அதேபோல் பண்டித ஜவஹர்லால் நேருவின் 124வது வருட பிறந்த தினம் நவம்பர் 14ம் கொண்டாடப்பட்டது என்பதை விட  நம்மை கடந்து சென்றது என்று சொன்னால் அது மிகையாகாது.

இவ்விரு தலைவர்களின் தியாகங்களை அவர்கள் சார்ந்த காங்கிரஸ் கட்சி மறந்து போனதன் விளைவு இன்றைக்கு பி.ஜே.பி. போன்ற நாட்டை காட்டிக் கொடுத்த கயவர்கள் சுதந்திரத்தை பற்றி பேச துணிந்து விட்டனர். காங்கிரஸ் அரசுடைய இந்த அலட்சியத்தின் விளைவு உண்மை தியாகத்தின் வரலாறு பொது மக்களுக்கும், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் மறக்கடிக்கப்பட்டது.

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில், உண்மை போராட்ட வீரரை காட்டிக் கொடுத்த வாஜ்பாயிக்கு பிரதமர் பதவி, அதுபோல விடுதலை போராட்ட வீர வரலாற்றில் ஆங்கிலேயனுக்கு அடி பணிந்து அவனுக்கு மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தது மட்டுமல்லாமல், தேசத் தந்தை காந்தியடிகளின் கொலையில் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சாவர்கருக்கு பாராளுமன்ற வளாகத்தில் காந்தியின் புகைப்படத்திற்கு நேர் எதிராக  புகைப்படத்தை திறந்து வைத்து அழகு பார்ப்பது என்பதும் நிகழ்கால நிகழ்வுகள். இன்று உண்மை வரலாற்றை பேசக்கூடிய தைரியத்தில் காங்கிரஸ் கட்சி இல்லை.

சுதந்திரத்திற்காக நேரு, அபுல்கலாம் ஆசாத் ஆகிய இரு தலைவர்களும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறைச்சாலையில் கழித்திருக்கின்றனர்.

ஜவஹர்லால் நேருவை அறிந்த அளவுக்கு அபுல்கலாம் ஆசாத்தை மக்கள் அறியவில்லை என்பதுதான் உண்மை. அறியப்படாத அந்த வரலாற்றை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

அபுல்கலாமின் அரசியல் பயணம்

1888ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி மௌலானா கைருத்தீனுக்கும், ஆலியாவுக்கும் மகனாக பிறந்தார் மௌலானா அபுல்கலாம்

ஆசõத். அவரது கல்வியறிவை கெய்ரோவில் உள்ள அல் அஹ்ஸர் பல்கலைக்கழகத்தில் கற்றார். இந்தியா சுதந்திரம் அடைந்த பின் மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதல் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார். 1947 முதல் 1958 வரை கல்வி அமைச்சர் பதவியில் இருந்தார்.

1907ம் ஆண்டு தன்னுடைய 19வது வயதில் அரசியலுக்கு அபுல்கலாம் ஆசாத் வருகிறார். ஆங்கிலேய எதிர்ப்பு கொள்கையை எதிர்கொள்ளும் முறையில், புரட்சியை தேர்வு செய்கிறார். 1920 காலக்கட்டத்தில்  அபுல்கலாம் ஆசாத் காந்தியை சந்திக்கிறார். தன்னை ஒத்த தேச விடுதலை போராட்ட தலைவர்களில் சிறு வயதில் விடுதலை எதிர்ப்பு போரை தொடங்கியவர் ஆசாத்.

1907 முதல் 1947 வரையிலும் கிட்டதட்ட  ஆறு முறை சிறை சென்றுள்ளார் கலாம். மொத்தத்தில்  பத்து ஆண்டுகளும் ஏழு மாதங்களும் சிறையில் கழித்துள்ளார்.

1920களுக்கு முன்னதாக தனி ஒரு ஆளாக சுதந்திர போராட்டத்தில் பிற  கட்சிகளின் பின்னணி இல்லாமல் போராடியவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்.  இப்போராட்டம் தான் ஆங்கிலேயரை மிகவும் எரிச்சலடைய வைத்தது. சிந்தனை ரீதியாக மக்களை ஒருங்கிணைக்கும் பணியில் கலாம் ஈடுபட்டார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்தது பத்திரிகை துறை.

கலாமும் பத்திரிகை துறையும்

மௌலானா அவர்கள் இளம் வயதிலேயே திருமறை குர்ஆனை மனனம் செய்தவர். மார்க்க கல்வியில் சிறந்து விளங்கிய போதிலும் உலக கல்வி விஷயத்தில் சற்று அதிகமாக தெளிந்த பார்வையும் தெலைநோக்கு சிந்தனையும் மக்களை எளிதில் வசீகரிக்கக் கூடிய பேச்சு மற்றும் எழுத்தும் ஒருங்கேபெற்ற நபராக திகழ்ந்து விளங்கியவர்.

கூர்மையான நினைவாற்றலையும், எதையும் பகுத்தறியும் திறனையும் சிறு வயதிலேயே ஆசாத் கைவரப்பெற்றிருந்தார். பால்ய காலம் முதலே தீவிர வாசிப்பிலும், ஆய்வுகளிலும் தன்னை ஈடுபடுத்தி வந்தார். வயதை மீறி அவரிடம் காணப்பட்ட பக்குவமும், நிதானமும்தான் பிறரிடமிருந்து அவரை வேறுபடுத்திக் காட்டிய அம்சங்கள்.

ஆசாதின் சகோதரி பாத்திமா பேகம் ஆர்ஸு, “ஆசாதுக்கு குழந்தைப் பருவம் என்ற ஒன்று இருக்கவில்லை எனச் சொல்வதே சரியாக இருக்க முடியும். அந்த சின்ன புஜங்கள், பெரிய பெரிய சிந்தனைகளின் மூட்டைகளை எப்போதும் சுமந்திருந்தன, ஆசõத் பிஞ்சிலேயே பழுத்தவராக இருந்தார்”. (அடீடுச்டூ, குஞுணீt 1959) என்று குறிப்பிடுகிறார்.

1913 காலக்கட்டத்தில் ஆங்கிலேய எதிர்ப்பை பொது மக்களிடம் தன்னுடைய அல் ஹிலால் எனும் பத்திரிகை மூலம் வெளிப்படுத்தினார். இவ்விதழில் ஆங்கிலேய எதிர்ப்பும், மக்களை விடுதலை போராட்டத்தில் பங்கு பெற வேண்டிய கருத்துக்களும் முக்கிய இடம் பிடித்தன. இது ஆங்கிலேயர்களை மிகவும் வெறுப்படைய செய்தது. தொடங்கப்பட்ட ஒரே ஒரு வருடத்தில் 30,000 பிரதிகளை தொட்டு அல்ஹிலால் பத்திரிகை சாதனை படைத்தது.

கலாம் தொடர்ந்து சுதந்திர போராட்ட உணர்வூப்பூர்வமான கட்டுரைகளை எழுதியதை தொடர்ந்து ஆங்கிலேய அரசு வெறுப்புற்றது. அல் ஹிலால் பத்திரிகை அரசுக்கு எதிராக செயல்படுகின்றது என காரணம் காட்டி 1914ல் அதிகமான பிணைத்தொகை செலுத்த வேண்டுமென்று அபராதம் விதித்தது ஆங்கிலேய  அரசு.

மனம் தளராத ஆசாத் அல் ஃபலாஹ் என்னும் மற்றொரு பத்திரிகையை உடனடியாக தொடங்குகிறார். காந்தியுடனான சந்திப்பு மிகப்பெரிய வரலாற்று நிகழ்வாக இருந்தது.  சந்தித்த முதல் சந்திப்பிலேயே ஆசாத்தின் திறமையையும் போராட்ட குணத்தையும் கண்டு வியந்தவர் காந்தி. தன் இறுதி நாள்  வரை கலாம் அவர்களை கூடவே வைத்து கொண்டார் காந்தி.

காங்கிரஸ் தலைவர்

கூர்மையான நினைவாற்றல், எந்த ஒரு செயலையும் பகுத்தறிவோடு சிந்திக்கும் ஆற்றலை பெற்ற மௌலானா தன்னுடைய 35வது வயதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் குறைந்த வயதில் இப்பதவியை பெற்ற ஒரே தலைவர் கலாம் ஒருவரே ஆவார்.

1923ல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் இந்து  முஸ்லிம் எனும் இரு பெரும் சமூக மக்களுக்கு விடுதலை உணர்வூட்டி போராட்டத்திற்கு மக்களை அணி திரட்டினார்.

அரசியலில் நேருவின் வருகை

இந்த காலக்கட்டத்தில் தான் நேரு போன்றவர்கள் தீவிர அரசியலில் தங்களை இணைத்துக் கொண்டனர். நேரு இதனை  தன் இளமை நாட் குறிப்புகள் என்ற நூலில் இப்படி கூறுகிறார்:

1919ம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலையின் போது, தான் விடுதலை போராட்ட அரசியலில் இல்லை என்பதனை குறிப்பிடுகிறார். அதேவேளை நேருவின் அரசியல் பிரச்சாரம் 1930களுக்கு பின்னர்தான் வீறு கொண்டது என வரலாறு பதிவு செய்கிறது

ஆனால், இதே காலக்கட்டத்தில் ஆசாத் விடுதலை போராட்டத்தில் எழுச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

வெள்ளையனே வெளியேறு

1940களில் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவி ஆசாத்தை தேடி வந்தது.  1942ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கம் என்ற வீரமிக்க போராட்டத்தின் பங்கு சுதந்திர போராட்ட வரலாற்றில் அளப்பறியது.

தேசப் பிரிவினை என்ற பேச்சுக்கு இடமில்லை என்று தொடர்ந்து குரல் கொடுத்தவர் ஆசாத் ஆவார். ஆனால், நாட்டை துண்டாக்க நினைத்தவர்கள் துண்டாக்கினர். அதில் வெற்றியும் கண்டனர். அதன் பழியை முஸ்லிம்கள் மீது  போட்டு பலனை  அடைந்தனர். இதற்கு நல்ல உதாரணத்தை ஆசாத் கூறுவதை பாருங்கள். பிரிவினை தொடர்பாக ஜின்னாவின் கருத்துக்களை பட்டேல் ரசிக்கவில்லை என்றாலும் பட்டேல் பிரிவினையில் முழு நம்பிக்கையுள்ளவராக மாறிவிட்டிருந்தார். தற்பொழுது நிலவும் எல்லா பிரச்சனைக்கும் பிரிவினை தான் ஒரே தீர்வு என்று

சொல்லும் போதெல்லாம் பட்டேலின் முகத்தில் ஒரு மௌன சம்மதம் கசிவதை மவுண்ட்பேட்டன் யூகித்திருந்தார்.பிரிவினைக் கொள்கையோடு மவுண்ட்பேட்டன் வருவதற்கு முன்பே அதன் ஐம்பது சதவீத ஆதரவாளராக பட்டேல் மாறிவிட்டிருந்தார்.முஸ்லிம்களுடன் இனி ஒரு போதும் ஒத்துப்போக முடியாது என பட்டேல் அடிக்கடி கூறி வந்தார்.

இப்படி நிலைப்பாடுகள் இருக்க தற்பொழுது பிரிவினைக்கு முஸ்லிம்கள் காரணம் என கூறும் கயவர்களின் கயமைத்தனம் இரட்டை தன்மை கொண்டது.

நாட்டை துண்டாக்க தூண்டிய முதல் அழைப்பு இந்து மகா சபா என்பதை மூடி மறைத்து வரலாற்றை திரித்து முஸ்லிம்கள் தான் பாகிஸ்தானை பிரித்தார்கள் என்ற பொய்யான  சொல்லாடலை சொல்லி பெரும்பான்மையான இந்தியர்களிடத்தில் பரப்பி விட்டனர்.

பிரிவினையை காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் ஆதரித்த வேளையில் அதனை ஏற்காமல் பிரிவினை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஆணித்தரமாக குரல் கொடுத்தவர் கலாம் ஆவார். 1947 ஆகஸ்ட் 15க்கு பிறகு நாடுகள் பிரிந்துபோன போது மவுண்ட் பேட்டன் சதிவலையில் ஜின்னா, பட்டேல் போன்றோர் சிக்கி கொண்டனரே  என நேரடியாக கூற கலாம் தவறவில்லை; மட்டுமல்லாமல், பிரிவினையை எதிர்த்து உண்ணாவிரதத்தை தலைநகர் டெல்லியில் மேற்கொண்டார் என்பது எத்தனை நபர்களுக்கு இன்று தெரியும்.

சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர்

நாட்டின் பிரிவினையில் ஏற்பட்ட கலவரத்தை பட்டேல் போன்றோர் கட்டுப்படுத்த தவறிவிட்டதாக பட்டேலிடமே கலாம் கடிந்து கொண்டார். காந்தி, நேரு போன்றவர்களிடம் மிக சகஜமாக சாதுர்யமாக தன்னுடைய கருத்தை தெரிவிக்கும் அளவிற்கு உரிமை பெற்றிருந்தார் கலாம். காந்தி எப்படி நேருவை தன்னருகில் வைத்து அழகு பார்த்தாரோ அதைப்போல் நேரு அபுல்கலாம் ஆசாத்தை தன்னருகில் வைத்து அழகு பார்க்க தவறவில்லை.

நேருவின் முதல் அமைச்சரவையில் கல்வி அமைச்சர் பதவி  கலாம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

1947 காலகட்டத்தில் இந்திய மக்களில் கல்வி கற்போர் சதவீதம் மிக குறைவாக இருந்தது. இதனை அதிகரிக்க அரும்பாடுபட்டார்.

அபுல்கலாம் ஆசாத் அவர்கள்  கல்வி அமைச்சராக இருக்கும் பொழுது கொண்டு வந்த பரிந்துரைகள்:

* எல்லா மாணவர்களுக்கும் சாதி, மத, இன பாகுபாடின்றி தரமான கல்வி வழங்க வேண்டும்.

* அனைத்து கல்வி திட்டங்களும் மத சார்பற்ற அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றார்.

* 14 வயது வரை இலவச கல்வி கொடுக்க வேண்டும்.

* தொழில்கல்வி, வேளாண்கல்வி மேலும் உயர்கல்வி (வெளிநாட்டு) கூடங்கள் நிறுவ வேண்டும் என பரிந்துரை செய்தார்.

வெறும் பரிந்துரையோடு நின்று விடõமல் தன்னுடைய 11 ஆண்டுகால அமைச்சர் பதவியில் வருங்கால சந்ததிகள் நலனுக்காக மிக நீண்ட நெடிய தூரநோக்கு பார்வையுடன் கலாம் செயல்பட்டார் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். அன்றைக்கு கலாம் அவர்களால் உருவாக்கப்பட்ட பல முன்னணி கல்வி நிறுவனங்களும் கல்வி சாலைகளும். இன்றைக்கு இந்தியாவை உலக அரங்கில் மின்னச் செய்கின்றன.

இந்திய பாரம்பரிய கலாச்சாரத்தை ஒரு போதும் அழிக்க முடியாது என்பதை உணர்ந்த கலாம் அதனை  பாதுகாக்க  உருவாக்கியது தான் ‘லலித் கலா அகடமி’.

இதன் நோக்கம் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவை ஓவியமாக பாதுகாக்கப்பட்டன. வரலாற்றை எழுதக் கூடியவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கும் அகடமி விருதினை ஏற்படுத்தி கொடுத்தார்.

கலை, பண்பாடு, இலக்கியம் என நின்று விடாமல் வருங்கால மாணவர்களை அறிவியல் துறை, ஆராய்ச்சி துறை மாணவர்களாக உருவாக்க வேண்டும் என நினைத்து அறிவியல் தொழில்நுட்ப சோதனை கூடங்களை நிறுவினார்.

உலகத் தரமான, ஐரோப்பிய மாணவர்களுக்கு இணையாக உயர் கல்வி கூடங்கள், ஐ.ஐ.டி. களை உருவாக்கிய பெருமை கலாமை சாரும். இப்படிப்பட்ட உன்னதமான தலைவரின் வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

காங்கிரஸின் ஆட்சிக்காலத்தில் கல்விக்காக சேவை செய்த இந்த மகத்தான தலைவனை காங்கிரஸ் மறந்தது வரலாற்று பிழை. வெறும் ஒருதின நினைவுடன் முடித்துவிடக் கூடியது அல்ல அபுல் கலாம் ஆசாத்தின் வாழ்க்கை.

இவரின் வாழ்க்கையை நாம் வாசிக்க வேண்டும். அவர் கட்டிக்காத்த கொள்கைகளை பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால் வரலாற்றை மாற்றும் வரலாறு தெரியாதவர்கள் நாட்டை நிர்மூலமாக்கி விடுவார்கள்.

கலாம் அவர்களின் உழைப்பு இந்திய அரசிற்கு 1991ல் தான் தெரிந்தது போலும், அப்பொழுது தான் கலாம் அவர்களுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட்டது. ஆனால், இதைக்கூட உரிய மரியாதையோடு கொடுத்ததா என்றால்  இல்லை எனலாம்.  அந்த விருதினை தபாலில் அனுப்பியதாக கூறப்படுகிறது.

கடமைக்கு கல்வி தினமாக ஒரு நாள் நினைவு கூறப்படுகிறது.

(2013 டிசம்பர் மாத விடியலில் வெளியான கட்டுரை)