பாட்லா ஹவுஸ் என்கௌண்டர் வழக்கு: ஒருவருக்கு மரண தண்டனை

பாட்லா ஹவுஸ் என்கௌண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆரிஸ் கான் என்பவருக்கு டெல்லி நீதிமன்றம் ஒன்று மார்ச் 15, 2021 அன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. செப்டம்பர் 19, 2008 அன்று புது டெல்லியின் பாட்லா ஹவுஸ் பகுதியில் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு நடத்திய என்கௌண்டரில் ஆதிஃப் அமீன் மற்றும் முகம்மது ஸாஜித் ஆகிய இருவர் கொல்லப்பட்டனர். ஒரு நபரை சம்பவ இடத்தில் கைது செய்த காவல்துறை ஏனைய இருவர் தப்பிச் சென்றதாகவும் கூறியது. இந்த என்கௌண்டரின் போது டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவின் இன்ஸ்பெக்டர் மோகன் சர்மாவும் கொல்லப்பட்டார்.
தப்பிச் சென்ற நபர்களில் ஒருவரான ஷெஹ்ஸாத் என்பவரை காவல்துறையினர் சில நாட்கள் கழித்து கைது செய்தனர். 2013இல் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. தப்பிச் சென்ற மற்றொரு நபரின் பெயர் ஜூனைத் என்றும் அவர் குறித்த தகவல்களை தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்திருந்தது. 2018இல் ஆரிஸ் கான் என்ற நபரை கைது செய்த காவல்துறை அவரை பாட்லா ஹவுஸ் என்கௌண்டரின் போது தப்பிச் சென்றவர் என்றும் அவர்தான் ஜூனைத் என்றும் கூறியது. சம்பவம் நடைபெற்ற இடம் மற்ற இடங்களில் இருந்து மிக உயரமானது என்றும் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு தப்பிச் செல்ல வாய்ப்பே இல்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
என்கௌண்;டரில் கொல்லப்பட்ட இருவரும் டெல்லி, ஜெய்ப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளுக்கு காரணமானவர்கள் என்று காவல்துறை கூறிய போதும் அதற்கான வலுவான ஆதாரங்கள் எதையும் சமர்ப்பிக்கவில்லை. சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஒருவரான ஸாஜித்தின் வயது 17 மட்டுமே. மிகப்பெரிய பயங்கரவாதிகளை பிடிக்கச் சென்ற இன்ஸ்பெக்டர் சர்மா புல்லட் புரூஃப் உடைகளை ஏன் அணியவில்லை, சில காவலர்கள் ஏன் துப்பாக்கிகள் இல்லாமல் சென்றனர் போன்ற கேள்விகளுக்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. ஆரிஸ் கானுக்கு தண்டனை வழங்கிய கூடுதல் செசன்ஸ் நீதிபதி சன்தீப் யாதவ் இக்கேள்விகளை தனது தீர்ப்பில் எழுப்பியிருந்தார்.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து ஏ.கே. 47 மற்றும் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்ட போதும் எதற்காக இந்த ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்தன என்பதை அரசு தரப்பில் நிரூபிக்கவில்லை என்று கூறிய போதும் நீதிபதி இத்தண்டனையை வழங்கியுள்ளார். இந்த வழக்கை அரிதினும் அரிதான வழக்கு என்று கூறிய நீதிபதி இன்ஸ்பெக்டர் சர்மாவை ஆரிஸ் கான் கொலை செய்ததாக குறிப்பிட்டுள்ளார். பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆரிஸ் கானுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி 11 இலட்சம் தண்டனையும் அதில் 10 இலட்சத்தை இன்ஸ்பெக்டர் சர்மாவின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இன்ஸ்பெக்டர் சர்மா மோசமான முறையில் கொல்லப்பட்டது சமூகத்தின் கூட்டு மனசாட்சியை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.டி.அன்சாரி தனது வாதத்தின் போது குறிப்பிட்டார்.