பீகாரில் கவிழ்ந்தது தாமரை

பீகார் மாநிலத்திற்கு ஐந்து கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு பதிவுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான மாக கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது.
சமீபத்திய நிவலரங்களின் படி மகா கூட்டணி ஏறத்தாழ ஐம்பது இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 130 இடங்களில் முன்னணி பெற்று வருகிறது. எனவே ஆட்சி அமைப்பதற்கு தேவையான 122 இடங்களை இந்த கூட்டணி எளிதாக பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் பாரதிய ஜனதா கூட்டணி ஏறத்தாழ 15 இடங்களில் வெற்றி பெற்று 45 இடங்களில் முன்னணி பெற்றுள்ளது.
பாரதிய ஜனதாவின் இந்த தோல்வியை அவர்களின் சகிப்புதன்மைக்கு எதிரான தோல்வி என்றும் மக்களை பிரித்தாளும் அவர்களின் சூழ்ச்சிகளுக்கு கொடுக்கப்பட்ட அடி என்றும் அரசியல் கட்சி தலைவர்களும் பொதுமக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். பாரதிய ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா, பீகாரில் பாரதிய ஜனதாவின் தோல்விக்கு பிரதமர் மோடிதான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது பீகார் முழுவதும் பிரதமர் மோடி 31 இடங்களில் பேசினார். ஒரு மாநில தேர்தலுக்காக பிரதமர் ஒருவர் இத்தனை இடங்களில் பேசியது இதுதான் முதல்முறையாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா 76 கூட்டங்களிலும் மத்திய உள்துறை அமைச்சர் 50 இடங்களிலும் பேசினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேர்தலின் ஆரம்ப கட்டத்தின் பாரதிய ஜனதா கட்சிக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தாத்ரி சம்பவமும் அதை தொடர்ந்து இடஒடுக்கீடு மற்றும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் தொடர்ந்து பேசியதை மக்கள் அங்கீகரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையிலேயே பா.ஜ.க. கூட்டணி தோல்வியை தழுவும் என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்த போதும் அவர்களால் வெற்றி பெறமுடியவில்லை. தேர்தலுக்கு பின்னர் நடத்தப்பட்ட கருத்து கணிப்புகள் இரு கூட்டணிகளுக்கும் மத்தியில் கடுமையான போட்டி இருக்கும் என்றும் சிலர் பாரதிய ஜனதா கூட்டணிதான் வெற்றி பெறும் என்றும் தெரிவித்திருந்தனர். முடிவுகள் வெளியான ஆரம்ப நேரத்தில் கூட பல ஆங்கில சேனல்கள் பாரதிய ஜனதா கூட்டணி முன்னணியில் இருப்பதாக காட்டின. ஆனால் மக்களின் தீர்ப்பை அவர்களால் நீண்ட நேரம் மறைக்க முடியவில்லை.
இந்த தேர்தலில் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா கட்சி பீகாரில் தான் இழந்த செல்வாக்கை திரும்ப பெற்றுள்ளது. 101 இடங்களில் போட்டியிட்ட இக்கட்சி 80 இடங்களில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற முறை 91 இடங்களில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி இம்முறை 50 இடங்களைதான் கைப்பற்றும் நிலை உள்ளது. அதன் கூட்டணி கட்சிகளான லோக் ஜனசக்தி, இந்துஸ்தானி அவாமி மோச்சா மற்றும் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி ஆகியவை ஐந்து இடங்களுக்கும் குறைவான இடங்களில் வெற்றி பெறும் நிலை உள்ளது.
பீகார் வெற்றியை தொடர்ந்து நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மோடி அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் இயக்கத்தை உருவாக்க உள்ளதாக லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.