புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள்: மும்பை உயர்நீதிமன்றம் விதித்த தடை நாடு முழுவதும் செல்லும். – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.!

0

சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக எழுந்து வந்தநிலையில், பேஸ்புக், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021ஐ கொண்டு வந்தது.

இந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, சுய ஒழுங்குமுறை நடைமுறையில் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்படும் செய்திகளை, சம்பந்தப்பட்ட வெளியீட்டாளரின் விளக்கம் கேட்காமல் முடக்கம் செய்ய தகவல் தொழில்நுட்ப துறை செயலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

“இது தன்னிச்சையானது. எனவே, செய்திகளை முடக்கம் செய்ய அதிகாரம் வழங்கும் பிரிவின் அடிப்படையில் தங்கள் சங்க உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். மற்றும் இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள தனி உரிமையை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.” எனவே, இந்த விதிகளை செல்லாது என அறிவிக்க கோரி கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, நாடு முழுவதும் உள்ள அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் உறுப்பினர்களாக உள்ள டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர்ஸ் அசோசியேஷன் மற்றும் பிரபல பத்திரிகையாளர் முகுந்த் பத்மநாபன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, ”ஊடகங்களை கண்காணிக்கும் நடைமுறை இருந்தால் ஜனநாயகத்தின் நான்காவது தூண் இல்லாமல் ஆகிவிடும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அப்போது மத்திய அரசு தரப்பில், “புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு மும்பை உயர்நீதிமன்றம் விதித்த தடை நாடு முழுவதும் பொருந்தும்” என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர்கள் தரப்பில், “மும்பை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு 15 நாட்கள் கழித்தும் மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது” என குற்றம்சாட்டப்பட்டது. வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், டிஜிட்டல் ஊடகங்களை ஒன்றிய அரசு கண்காணிக்க வகை செய்யும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு மும்பை உயர்நீதிமன்றம் விதித்த தடை நாடு முழுவதும் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ”வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதிக்காதபட்சத்தில் அக்டோபர் இறுதி வாரத்தில் விசாரிப்போம்’ என தெரிவித்தனர்.

Comments are closed.