புதிய நாடாளுமன்ற கட்டிட வளாகம்: பள்ளிவாசல்களின் நிலை?

தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் அந்த பகுதியில் உள்ள பள்ளிவாசல்களின் நிலைகுறித்த கவலைகளை பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதனை தொடர்ந்து டெல்லி ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினரும் டெல்லி வக்ஃப் வாரிய தலைவருமான அமானதுல்லாஹ் கான், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஜூன் 3 அன்று எழுதப்பட்ட கடிதத்தில், நாடாளுமன்ற புதிய வளாகம் கட்டப்படும் பகுதியில் உள்ள பழமையான பள்ளிவாசல்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார். இந்தியா கேட் அருகில் உள்ள சப்தா கன்ஜ் பள்ளிவாசல், துணை ஜனாதிபதி இல்ல வளாகத்தில் உள்ள பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளிவாசல்கள் இடிக்கப்படலாம் என்ற அச்சத்தை சமூக வலைதளங்களில் மக்கள் பதிவிட்டனர். சமீபத்தில் உத்தர பிரதேசத்தின் பாராபங்கி மற்றும் முஸஃபர்நகரில் உள்ள பள்ளிவாசல்கள் இடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த அச்சம் முஸ்லிம்களிடம் அதிகரித்துள்ளது.
281 ஆண்டுகள் பழமையான சப்தா கன்ஜ் பள்ளிவாசலை சுற்றி வேலைகள் நடைபெற்று வருவதை இந்தியன் எக்ஸ்பிரஸ் உறுதிப்படுத்தியது. நூறாண்டுகள் பழமையான கட்டிடங்களை இந்த பணிகளின் போது இடிக்க மாட்டார்கள் என்ற உத்தரவாதம் இருப்பதால் இந்த பள்ளிவாசலுக்கு பாதிப்புகள் ஏற்படாது என்று அந்த பள்ளியின் இமாம் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் ஏனைய பள்ளிவாசல்களின் நிலை குறித்து எந்த தெளிவும் இல்லை.
(புகைப்படத்தில் சப்தா கன்ஜ் பள்ளிவாசல. நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்)