புரட்சியை ஏற்றுமதி – இறக்குமதி செய்ய முடியுமா?

0

இஸ்லாமிய இயக்க அறிவியல் – பகுதி 2
ரிழா

இஸ்லாமிய விருட்சத்தின் பயன்களை முஸ்லிம்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் பெற்றுத் தர உழைக்கும் பாரிய பொறுப்பு இஸ்லாமிய அறிஞர்களுக்கு உள்ளது. ஆனால் அவர்களை நெருக்கடியின் கீழேயே இஸ்லாத்தின் எதிரிகள் வைத்துள்ளனர். அவர்களின் அறிவும் அனுபவமும் முஸ்லிம்களின் வளர்ச்சிக்குப் பயன்படாமல், முஸ்லிம் சமூகத்தின் அடிப்படைகளை பாதுகாக்கும் தற்காப்பு நிலைக்கே அதிகமாக செலவழிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

கிலாஃபத்தை வீழ்த்தும் தருணத்தில் ‘மதச்சார்பின்மை அரசு’ குறித்த விவாதம் முஸ்லிம் உலகில் கிளப்பி விடப்பட்டது. துருக்கியில் இதற்கான விதை ஊண்றப்பட்டு, மற்ற முஸ்லிம் நாடுகளிலும் மதச்சார்பற்ற அரசு அமைக்கப்பட்டது. மதச்சார்பின்மைக்கு எதிராக இஸ்லாத்தை பிரச்சாரம் செய்வதிலேயே அப்போது வாழ்ந்த முஸ்லிம் அறிஞர்களின் நாட்கள், பெரும்பாலும் கழிந்தன. முஸ்லிம்களின் வாழ்வியல் மேம்பாடுகளுக்கு உழைப்பதற்கு பதிலாக மதச்சார்பின்மைக்கு விளக்கம் அளிப்பதிலும், மதம் மனிதனின் தனிப்பட்ட வாழ்வில் இடம்பெற வேண்டுமே தவிர, அரசாளும் கொள்கையாக இருக்க கூடாது என்ற வாதத்திற்கும் பதில் அளிப்பதிலுமேயே கழிந்தது.

சென்ற நூற்றாண்டின் மாபெரும் சிந்தனையாளர்களான மெளதூதி, செய்யித் குதுப், ரஷீத் ரிழா, முஹம்மத் குதுப், கொமெய்னி உள்ளிட்டோரின் எழுத்துக்களின் மையமாக இந்தச் சிந்தனை இருப்பதைக் காணலாம்.

மேற்கத்திய சித்தாந்தவாதிகளின் சூழ்ச்சிகளை தகர்த்து கொமெய்னி ஈரானில் (ஷியாக்களின் தலைமையிலான) அரசை அமைத்தார். அவசர அவசரமாக விழித்துக் கொண்ட மேற்கத்திய நாடுகள் இந்த எழுச்சி மற்ற நாடுகளுக்கு பரவாமல் பார்த்துக்  கொண்டன. மனித உரிமைகளை அந்த நாடு காலில் போட்டு மிதிப்பதாக கூறிய ‘அமைதியின் நாயகர்கள்’, ஈரானை சர்வதேச சமூகத்திடமிருந்து பிரித்து வைத்தனர். மேலும் சர்வாதிகார ஆட்சி நடந்து கொண்டிருந்த முஸ்லிம் நாடுகளில் மாற்றத்திற்கான சிந்தனை எழாமால் இருக்க, அந்தந்த நாடுகளில் கலாச்சார சீரழிவுகளை ஐரோப்பா இறக்குமதி செய்தது. புரட்சியின்பால் முஸ்லிம் சமூகத்தின் சிந்தனை செல்லாத அளவுக்கு உலகாயாத சிந்தனை ஆழமாக விதைக்கப்பட்டது.

ஈரானிய புரட்சியின் வழியில் மற்ற முஸ்லிம் நாடுகளை அழைத்துச் செல்லும் திசைவழியை முஸ்லிம் அறிஞர்கள் காட்டுவதற்கு முன்பாக, முஸ்லிம் நாடுகளில் மேற்கத்திய கலாச்சாரம் வேரூன்றி இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. இதனால் முஸ்லிம் அறிஞர்கள் மேற்கத்திய பண்பாட்டிற்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இதனிடையே ஆஃப்கனில் ரஷ்யாவின் தலையீட்டைத் தடுக்க இஸ்லாமிய போராளிகளை அமெரிக்க ஏகாதிபத்தியம் ஊக்குவித்தது. பின்னர் அந்தப் போராளிகளைக் காட்டியே ‘இஸ்லாமிய பயங்கரவாதம்’ என்ற சொல்லாடலைக் கட்டமைத்தது.

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நவீனத்துக்கு எதிரான ‘அடிப்படைவாதமாக’ இஸ்லாம் பார்க்கப்பட்டது. நூற்றாண்டின் இறுதியில் ‘பயங்கரவாதமாக’ இஸ்லாம் தோற்றமளித்தது.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதல் பின்னணியில் ‘பயங்கரவாதம்’ என்ற கடும் சுழலுக்குள் இஸ்லாமிய உலகம் சிக்கிக் கொண்டது.
இப்பொழுது இதற்கு எதிராக, அதாவது இஸ்லாம் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான மார்க்கம்’ என்ற பெரும் பிரச்சாரத்தை இஸ்லாமிய அறிஞர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஆக ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலம் முஸ்லிம்களின் முன்னேற்றம் குறித்து இஸ்லாமிய அறிஞர்களால் சிந்திக்க முடியவில்லை.

உறுதியான அளவில் முஸ்லிம் சமூகத்தின் மனித வளத்தை பயன்படுத்தி, சமூகத்தின் மேம்பாட்டுக்கு அவர்களால் பங்களிப்பு செய்ய இயலவில்லை. அழுத்தத்துடனேயே கழிந்த சிறந்த இஸ்லாமிய அறிஞர்களின் சேவைகள் இந்த எல்லைக்குள்ளேயே மட்டுப்படுத்தப்பட்டன. இந்திய அளவில் இதற்கு சிறந்த உதாரணத்தை கூறுவதென்றால் அபுல் ஹஸன் அலீ நத்வி அவர்களை குறிப்பிடலாம். அரசியல், அதிகாரம், அதனூடாக இறைத்தூதர் காட்டித் தந்த உன்னதமான சமூக அமைப்பை உருவாக்குதல் என்பதெல்லாம் இஸ்லாமிய அறிஞர்களின் கனவாகவே தொடர்கிறது.

இது ஒரு புறம். மற்றொரு புறம் சில இயக்கங்கள் வலுவான கட்டமைப்புடன் இஸ்லாமிய எழுச்சியை நோக்கி வீறுநடை போட்டது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த இயக்கங்களில் எல்லாம் ஒருவித சந்தேக மனம் கொண்ட செயல் வீரர்கள் எழுச்சியை முனை மழுங்கச் செய்தனர் என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இஸ்லாமிய எழுச்சி தவறென்றோ, அதனை முடக்க வேண்டும் என்பதோ சந்தேக மனம் கொண்டோரின் நோக்கம் கிடையாது. மாறாக, அவர்கள் இஸ்லாமிய வரலாற்றினடியாக சந்தேகங்களை தங்கள் மனங்களில் வளர்த்துக் கொண்டது எழுச்சியை துரிதப்படுத்தவில்லை.

1) மக்கா கால கட்டம். 2) மதீனா கால கட்டம். 3) கிலாஃபத் ஆட்சி.

இந்த மூன்று வரலாற்றுக் கட்டங்களையும் இஸ்லாமிய எழுச்சியோடு தொடர்புபடுத்தி, தற்போதைய கால கட்டத்தோடு ஒப்பு நோக்கும் மனப்பாங்கு இஸ்லாமிய செயல் வீரர்களின் மனங்களில் சந்தேக எண்ணங்களை வளர்த்துள்ளன.

இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தனக்கு அளிக்கப்பட்ட பணியை, இந்த மூன்று கட்டங்களூடாக நிறைவேற்றினார்கள். மக்காவிலும், மதீனாவிலுமாக அவர்களது காலத்திலேயே குர்ஆனும் முழுமையாக இறக்கியருளப்பட்டு விட்டது.

இஸ்லாத்தின் அடிப்படைகளான தவ்ஹீத், ரிஸாலத், ஆஃகிரத் ஆகியவற்றை நபி (ஸல்) அவர்கள் மக்காவில் பிரச்சாரம் செய்தது போல, நாம் வாழும் பிரதேசங்களில் பிரச்சாரம் செய்ய வேண்டும். பின்னர் மதீனா-வைப் போல ஒரு களத்தை கண்டுபிடித்து அங்கு இஸ்லாமிய சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என சந்தேக மனம் கொண்டோர் இஸ்லாமிய எழுச்சிக் கட்டங்களை உருவகப்படுத்தி வைத்துள்ளனர்.

★மதீனா ஹிஜ்ரத்துக்கு முன்பு நிகழ்ந்த அபிசீனியா ஹிஜ்ரத்தை, அதுவும் இரண்டு குழுக்களாக நபித் தோழர்கள் ஹிஜ்ரத் செய்ததை இவர்கள் மறந்து விடுகின்றனர்.

★மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்லும் முன், அபூதாலிப் கணவாயில் முஸ்லிம்கள் மூன்று ஆண்டுகள் வாழ்ந்தது இவர்கள் நினைவுகளிலிருந்து வசதியாக அகன்று விடுகிறது.

★மதீனாவுக்கு முன் முஹம்மது (ஸல்) அவர்களின் சிந்தையில் தெரிந்தது, அவர்கள் விரும்பியது தாயிஃப் நகரைத் தான்…

★மதீனாவில் இஸ்லாமிய அரசு உருவான நிலையில், மக்காவில் ‘குஃப்ரின் பிடியில்’ முஸ்லிம்கள் வாழ்ந்ததையும் கவனத்தில் கொள்ள இவர்கள் தவறி விடுகின்றனர்.

★முஹம்மத் (ஸல்) அவர்கள் இறுதியாக மற்ற நாட்டு மன்னர்களுக்கு இஸ்லாத்தின் அழைப்பை எத்தி வைத்ததற்கு பதிலாக, சில முஸ்லிம்களை அந்தந்த பிரதேசங்களுக்கு அனுப்பி மக்காவில் தூதுத்துவத்தின் தொடக்க நாட்களில் பிரச்சாரம் செய்தது போல பிரச்சாரம் செய்யுங்கள்; பின்னர் இஸ்லாத்தை ஏற்ற மக்களை மதீனா மாதிரி ஒரு பகுதியை கண்டுபிடித்து அவர்களை ஹிஜ்ரத் செய்யச் சொல்லுங்கள் என பணிக்கவில்லை.

★ கலீஃபாவை தேர்ந்தெடுப்பதில் திட்டவட்டமான ஒரு வழிமுறையை திணிக்காமல் நெகிழ்ச்சியான வழிமுறையை இஸ்லாம் அறிமுகப்படுத்தியதை இவர்கள் நினைவில் கொள்ள தவறி விடுகின்றனர்.

பாரசீக மன்னன் கிஸ்ராவுக்கு இஸ்லாமிய அழைப்பை விடுத்த நபி (ஸல்) அவர்கள், “அவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் அவரது கட்டுப்பாட்டில் உள்ளதை அவருக்கே சொந்தமாக்கி விடுவேன். அவரது இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு அவரையே அரசனாக்கி விடுவேன்” என்றார்கள்.

அதே நபியவர்கள் யமாமா நாட்டு மன்னன் ஹவ்தா, அதிகாரத்தில் பங்கு கேட்ட போது, “அவன் பூமியில் சிறுபகுதியைக் கேட்டாலும் கொடுக்க மாட்டேன்” என சீறினார்கள்.

நபித் தோழர் அமர் இப்னு அல் ஆஸ் (ரழி) அவர்கள் ஓமன் நாட்டுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சென்றார்கள். ஓமன் நாட்டு மன்னரும், அவரது குடும்பத்தினரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின், அங்கு உடனடியாக ஸகாத் வசூலிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதே நபியவர்கள், முஆத் (ரலி) அவர்களை யெமன் தேசம் நோக்கி அனுப்பிய போது இப்படி கட்டளையிட்டார்கள்:
வேதங்கள் அளிக்கப்பட்ட மக்களிடையே நீர் செல்கின்றீர். அவர்களை நீர் அடைந்ததும் இறைவன் மட்டுமே வணக்கத்துக்குரியவன் என்றும், முஹம்மது அவனது தூதர் என்றும் சாட்சி கூறும்படி அவர்களை அழையும். உமது அழைப்புக்கு அவர்கள் இணங்குவார்களாயின், இரவிலும் பகலிலுமாக ஐந்து வேளைகள் தன்னைத் தொழும்படி இறைவன் கட்டளையிட்டுள்ளாதாகக் கூறும். அதையும் அவர்கள் ஏற்பார்களாயின் இறைவன் அவர்கள் மீது ஸதகாவை (ஸகாத்) விதியாக்கி, செல்வம் படைத்தோரிடமிருந்து பெற்று, அவர்கள் மத்தியிலுள்ள வறியோர்க்கு வழங்கும்படி கட்டளையிட்டுள்ளதாகக் கூறும்.

தற்போது குர்ஆன் முழுமையாக நம்மிடையே இருக்க மக்கா காலகட்டம், மதீனா காலகட்டம் என இஸ்லாமிய எழுச்சிக்கு கால வரம்பு நிர்ணயிப்பது வரலாற்றையும், தூதுத்துவ இயங்கியலையும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

இஸ்லாம் ஒரு முழுமையான தோற்றமடைந்த பின், பிற பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு ஓர் அரசியல் சக்தியாக இஸ்லாம் மாற்றம் பெறுவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் இதுதான் திட்டவட்டமான வழி என எதுவும் கிடையாது. இது அல்லாஹ் முஃமின்கள் மீது சொறிந்துள்ள அருட்கொடையாகும்.

அதே போல, தலைமைத்துவத்தை (கலீஃபாவை) நிர்ணயம் செய்வதிலும், அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவி கூறும் உதாரணம் நினைவு கூரத்தக்கது: முஸ்லிம் நோயாளி ஒருவர், இஸ்லாமிய அரசொன்று அமைந்த பின், அது வழங்கும் சேவையின் கீழ்தான் மருத்துவம் பார்க்க வேண்டும் என சந்தேக மனம் கொண்ட செயல் வீரர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஸஹீஹ் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்தச் செய்தியை நினைவில் நிறுத்துவோம்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தை (கலீஃபா உமர் (ரலி) அவர்கள்) தாக்கப்பட்டு (படுக்கையில்) இருந்தபோது அவர்கள் அருகில் நான் இருந்தேன். அப்போது அவர்களை மக்கள் பாராட்டிப் பேசினர். மேலும், “அல்லாஹ் உங்களுக்கு நற்பலனை வழங்கட்டும்” என்று கூறினர். அதற்கு என் தந்தை “(என்னைப்) பிடித்தோ பிடிக்காமலோ (பாராட்டுகிறீர்கள்)” என்று கூறினார்கள். அப்போது மக்கள், “நீங்கள் உங்களுக்குப் பின் யாரையாவது உங்கள் பிரதிநிதியாக (ஆட்சித் தலைவராக) நியமியுங்கள்” என்று கூறினர். அதற்கு, “நான் உயிரோடு இருக்கும்போதும் இறந்த பிறகும் உங்கள் விவகாரத்திற்குப் பொறுப்பேற்க வேண்டுமா? நான் வகித்த இந்தப் பதவியில் (இறைவனிடம்) எனது பங்கு எனக்குச் சாதகமாகவும் வேண்டாம்; பாதகமாகவும் வேண்டாம்; சரிக்குச் சமமாக அமைந்தால் போதும். நான் எவரையேனும் எனக்குப் பின் ஆட்சித் தலைவராக நியமித்தால் (அதற்கும் முன்மாதிரி உண்டு). ஏனென்றால், (எனக்கு முன்பு) என்னைவிடச் சிறந்தவர் (அதாவது அபூபக்ர் (ரலி) அவர்கள்) அவ்வாறு ஆட்சித் தலைவரை (என்னை) நியமித்துச் சென்றார்கள். (ஆட்சித் தலைவரை நியமிக்காமல்) அப்படியே நான் உங்களை விட்டுவிட்டால், (அதற்கும் முன்மாதிரி உண்டு). ஏனெனில், என்னைவிடச் சிறந்தவரான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறுதான் (உங்களுக்கு யாரையும் நியமிக்காமல்) உங்களை விட்டுச் சென்றார்கள்” என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். என் தந்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நினைவுகூர்ந்தபோது, என் தந்தை யாரையும் தமக்குப் பின் ஆட்சித் தலைவராக நியமிக்கமாட்டார்கள் என்பதை நான் அறிந்து கொண்டேன்.

பிரதேசம், சூழல் என்பவைகளை கணக்கில் கொண்டு இஸ்லாமிய அரசு உருவாக சாத்தியப்படும் அனைத்து வழிகளையும் பயன்படுத்த வரலாறு நமக்கு கற்றுக் கொடுக்கிறது. இஸ்லாமிய மார்க்கம் என்பது காலம், தேசம் என்ற வரையறைகளை கடந்தது என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்; மிக அறிந்தவன். (அல்குர்ஆன் 2:115)

விசாலமான வழிகளை விடுத்து, இஸ்லாமிய எழுச்சியை அடையும் வழிகளை குறுக்குதல் தகுமா?

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”
(அல்குர்ஆன் 2:286)

Comments are closed.