பெஹ்லு கானின் மரண வாக்குமூலம் நிராகரிப்பு: பசு பயங்கரவாதிகள் வழக்கில் இருந்து விடுதலை

0

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் பகுதியில் பசு பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட பால் பண்ணை உரிமையாளர் பெஹ்லு கான் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இவர் தனது மரண வாக்குமூலத்தில் தன்னை தாக்கியவர்கள் என்று ஆறு வலது சாரி இந்து அமைப்புகளின் உறுப்பினர்கள் பெயரை குறிப்பிட்டிருந்தார். ஆனால் இவர்களை ராஜஸ்தான் காவல்துறை இந்த வழக்கில் இருந்து விடுவித்துள்ளது. பெஹ்லு கானின் மரண வாக்குமூலத்திற்கு எதிராக பசு பாதுகாப்பு மையம் ஒன்றின் ஊழியர் ஒருவர் கொடுத்த வாக்குமூலத்தை காவல்துறை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளது.

ஓம் யாதவ், ஹுகும் சாந்த் யாதவ். சுதிர் யாதவ், ஜக்மல் யாதவ், நவீன் ஷர்மா மற்றும் ராகுல் சைனி ஆகிய வலது சாரி இந்து அமைப்புகளின் உறுப்பினர்களை பசு பாதுகாப்பு மையம் ஒன்றின் ஊழியர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கில் இருந்து விடுவித்துள்ளது காவல்துறை. குறிப்பிட்ட அந்த ஊழியர் பெஹ்லு கான் மீதான தாக்குதல் சம்பவம் நடைபெற்ற போது இந்த ஆறு நபர்களும் தங்களுடைய பசு பாதுகாப்பு சாலையில் தான் இருந்தனர் என்று கூறியுள்ளார். இவரின் இந்த வாக்குமூலத்தின் அடிப்படியில் கொலை செய்யப்பட்ட பெஹ்லு கானின் வாக்குமூலம் புறம்தள்ளப்பட்டு இவர்கள் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறை அளித்த அறிக்கை ஒன்றில், “காவல்துறையினர் மற்றும் கோ சாலையின் ஊழிகர்கள் ஆகிய சாட்சியங்களின் வாக்குமூலங்கள் குறிப்பிட்ட இந்த நபர்கள் யாரும் தாக்குதல் நடைபெற்ற போது சம்பவ இடத்தில் இல்லை என்று நிரூபிக்கின்றது. மேலும் BTS எனப்படும் மொபைல் அழைப்புத் தகவல்களும் இந்தனை உறுதி படுத்துகின்றது. இதன் அடிப்படையில் இந்த ஆறு நபர்களும் குற்றமற்றவர்கள் என்று கூறி அவர்களின் பெயர்கள் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி பசு பாதுகாப்பு கும்பலால் சாலையில் வைத்தே அடித்து கொலை செய்யப்பட்டார் பெஹ்லு கான். இவரிடம் கால்நடைகளை கொண்டு செல்வதற்கு முறையான ஆவணங்கள் இருத்தும் இவரை பசு பயங்கரவாதிகள் அடித்துக் கொலை செய்தனர்.

இது தொடர்பான விசாரணையை மேற்கொண்ட குற்றப்பிரிவு CID தங்கள் விசாரணை அறிக்கைகளை ஆழ்வார் காவல்துறையிடம் வழங்கியது. அதில் இந்த ஆறு நபர்களின் பெயரை நீக்குமாறு அது கூறியது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த இந்த ஆறு நபர்கள் குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூபாய் 5000 பரிசு என்ற அறிவிப்பை ஆழ்வார் காவல்துறை ரத்து செய்துள்ளது.

இது குறித்து ஆழ்வார் காவல்துறை கண்காணிப்பாளர் ராகுல் பிரகாஷ் தெரிவிக்கையில், “இந்த ஆறு பேர் குறித்து தகவல் தருபவர்களுக்கு பரிசளிக்கப்படும் என்ற அறிவிப்பு CB-CID விசாரணை அறிக்கையை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

காவல்துறையின் இந்த முடிவு பெஹ்லு கானை இழந்த அவரின் குடும்பத்தினரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவர்கள் குற்றம் சாட்டப்பட்ட இந்த ஆறு நபர்கள் ஒருவருக்கு ஒருவர் பெயர் கூறி அழைத்ததை தாங்கள் கேட்டதாக கூறியுள்ளனர்.

“இந்த ஆறு நபர்கள் தான் தாக்குதலை தொடங்கியவர்கள். நாங்கள் தாக்கப்படும் போது இவர்கள் ஒருவருக்கொருவரை அவர்களின் பெயர் கூறி அழைப்பதை நான் கேட்டேன். அதில் ஒருவன், “ஹுகும் அவர்களை இங்கே இழுத்துவா” என்றும் “அவர்கள் வாகனத்தை நொறுக்கு” என்றும் கூறினான்.” என்று இந்த தாக்குதலில் காயமுற்ற பெஹ்லு கானின் மகன் கூறியுள்ளார். மேலும், தான் ஓம், ஹுகும், சுதிர் மற்றும் ராகுல் ஆகிய பெயரை தாக்குதலின் போது கேட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ,”காவல்துறையினர் அழுத்தத்தின் பெயரில் இதனை கூறுகின்றனர்.  நீதிக்கான எங்களது தேடல் இத்துடன் முடிந்து விடப்போவதில்லை. அந்த ஆறுபேரும் குற்றவாளிகள் என்று நிரூபிக்கும் வரை நாங்கள் எங்கள் போராட்டத்தினை தொடர்வோம்.” என்று பெஹ்லு கானின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பெஹ்லு கானின் வாக்குமூலம் நீதிபதி முன்பு அல்லாமல் காவல்துறை அதிகாரி முன்பு பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவும் கூட மரண வாக்குமூலமாக கருதப்படும் என்றும் அது நீதிமன்றத்தில் செல்லுபடியாகும் என்றும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

“விசாரணையின் இந்த கட்டத்தில் மரண வாக்குமூலம் காவல்துறையினரால் நிராகரிக்க முடியாது. மேலும் மரண வாக்குமூலமே ஆதாரங்களில் சிறந்தது  என்பது சட்டத்தில் நிறுவப்பட்டுள்ளது. மேலும் முன்னர் குற்றம் சாட்டப்பட்டவர்களை காவல்துறை அதிகாரி முன்பு கொடுக்கப்பட்ட மரண வாக்குமூலங்களை வைத்து குற்றவாளிகள் என்று நீதிமன்றங்கள் அறிவித்துள்ளன.” என்று ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி வினை பால் யாதவ் தெரிவித்துள்ளார்.

கைலாஷ் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து பெஹ்லு கான் கொடுத்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த ஆறு நபர்கள் மீதும் அடையாளம் தெரியாத 200 பேர் மீதும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பெஹ்லு கான் மீதான தாக்குதல் நடத்தப்பட்டு இரண்டு நாட்களில் அவர் உயிரிழந்தார்.

தற்போது இந்த வழக்கு பெஹ்லு கான் மீதான தாக்குதல் வீடியோ மூலம் அடையாளம் காணப்பட்ட ஒன்பது நபர்களுக்கு எதிராக தொடரும் என்று காவல்துறை அறிவித்துள்ளது. தற்போது இதில் ஏழு பேர் கைது செய்யப்பட்டும் இரண்டு பேர் தலைமறைவாகியும் உள்ளனர்.

Comments are closed.