பேரறிஞர் முஹம்மது அல் கஸ்ஸாலி (ரஹ்)

 நாகூர் ரிஸ்வான்

இஹ்வான் அல் முஸ்லிமீன் இயக்கத்தின் முன்னோடியாக மட்டுமே தமிழக மக்களால் அறியப்படும் முஹம்மது அல் கஸ்ஸாலி (ரஹ்), மிகச் சிறந்த இஸ்லாமிய அறிஞர். இருபதாம் நூற்றாண்டு கண்ட முஜத்தித் அவர்.

எகிப்து நாட்டின் புஹைரா மாநிலத்தில் 1917 செப்டம்பர் 22ஆம் நாள் முஹம்மது அல் கஸ்ஸாலி பிறந்தார். 10 வயதில் ஆரம்பக் கல்வியைக் கற்கத் தொடங்கிய அவர் வரலாற்றுச் சிறப்புமிக்க பல்கலைக்கழகமான அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி கற்றார். 1941ல் அல் அஸ்ஹரிலிருந்து வெளியேறி, தனது மேற்படிப்பைத் தொடர்ந்தார். கல்வி கற்றதற்கு பின்னர் கல்லூரிகள் பலவற்றில் அசிரியராகவும் ஆலோசகராகவும் பணியாற்றி வந்தார். அரபு மொழி, அல் குர்ஆன், ஹதீஸ், ஸீரா, பிக்ஹ், தாரிஹ், தஸவ்வுஃப் இவை அனைத்திலும் ஆழமான அறிவும் பரிச்சயமும் பெற்றிருந்தார். பேரறிஞர் முஹம்மது அல் கஸ்ஸாலி (ரஹ்) எந்தத் துறையையும் விட்டுவைக்கவும் இல்லை. அதே சமயம், அவற்றில் அவர் நுனிப்புல் மேயவும் இல்லை.

மரபுவழிச் சிந்தனையில் தங்கிவிடாமல், நவீனகால தேவைக்கு ஏற்ப இஸ்லாத்தை முன்வைத்தார். அல் கஸ்ஸாலியின் சிந்தனையை பாரம்பரிய அறிஞர்களால் ஜீரணிக்க இயலவில்லை. இருப்பினும், தனது பிரச்சாரத்தின் வீரியத்தை அவர் குறைத்துக் கொள்ளவில்லை.

இஸ்லாத்தை தீர்வு திட்டமாக முன்வைக்காததே முஸ்லிம்களின் வீழ்ச்சிக்கு காரணம் என்று கூறிய அல் கஸ்ஸாலி (ரஹ்), இஸ்லாத்தை அறிவுப்பூர்வமாக முன்வைப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தாம் வாழும் உலகு, அதன் பிரச்னைகள், அங்கு மோதும் சிந்தனைகள் போன்றவற்றை ஆழமாக ஆராய்ந்து, இஸ்லாமியத் தீர்வுகளை முன்வைத்தார். கஸ்ஸாலி, சவூதி அரேபியாவில் பணிபுரிந்த காலத்தில் ‘இஸ்லாமும் பொருளாதார நிலைகளும்’ என்னும் தனது முதல் நூலை எழுதினார்.

கஸ்ஸாலி 94 புத்தகங்களை எழுதியுள்ளார். அவை அனைத்தும் அவரது ஆழமான சிந்தனைகளைப் பிரதிபலிக்கும் வண்ணம் அமைந்திருக்கின்றன. மேலும், கருத்துச் செரிவுள்ளதாகவும் இவரது நூல்கள் இருக்கின்றன. எழுத்தில் மட்டுமல்லாமல் களப்பணியிலும் முனைப்பாக செயல்பட்டதால் இவரது எழுத்துகளில் மூல நூல்களின் மேற்கோள்கள் குறைவாகவே காணப்படும்.

எகிப்து நாட்டு கல்லூரிகள் மட்டுமின்றி அரபு நாடுகள் பலவற்றிலும் கல்விப் பணியாற்றியுள்ளார். அந்நாடுகளின் தொலைக்காட்சிகளிலும் கருத்தரங்குகளிலும் பங்குகொண்டு இஸ்லாமியப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

கஸ்ஸாலி (ரஹ்) அழைப்பாளர்களை பெரிதும் விமர்சிப்பார். போதிய அறிவில்லாமல் பிரச்சாரம் செய்பவன் இஸ்லாமியத் தூதுக்கு துரோகம் இழைப்பவன் என்பார். எனது அழைப்பு பணியின் அடிநாதமாக சுயவிமர்சனத்தையே ஆக்கியிருக்கிறேன் என்றும் கூறுவார்.

மேலும், இஸ்லாமிய அழைப்பு பணி மேற்கொள்வோரை விளித்து “இன்றைய தஃவாப் பணியை இஸ்லாமிய ஆர்வமுள்ளவர்களால் மட்டும் முன்னெடுக்க இயலாது. அதை அவர்களால் நினைத்துப் பார்க்கவும் முடியாது. இன்றைய டிஜிடல் உலகில் தஃவாவைச் சுமக்க ஆசைப்படுவர்கள், அறிவைத் தமது மிகப் பலமான ஆயுதமாக எடுத்துக் கொள்ள வேண்டும். தற்காலச் சிந்தனை சிக்கல்களையும் கருத்தியல் சவால்களையும் எதிர்கொள்ளும் ஆற்றல் அவர்களுக்கு தேவை. தஃவாக் களத்தில், இஸ்லாமிய கலைகளில் ஆழ்ந்த பரிச்சயம் இருப்பது மட்டும் போதாது. அதற்கப்பால், நவீன சமூக, மானிடவியல் கலைகளிலும் அவர்களுக்கு ஈடுபாடு அவசியம். இந்த எதார்த்தத்தை புறக்கணிப்பவர்கள் இஸ்லாத்திற்கு துரோகமே இழைப்பார்கள் என்றார்”.

இஸ்லாமிய கருத்துகளில் இரண்டாம் தரத்திலுள்ளவற்றை முதன்மைப்படுத்தி விவாதிப்பதைக் கண்டித்தார். எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதில் முஸ்லிம் சமூகம் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும் என வலியுறுத்தி வந்தார். காரணம், இஸ்லாத்தின் எழுச்சிக்கு இவை பெரிதும் தடையாக இருக்குமென கருதினார். தீவிரவாதப் போக்கையும் மார்க்கத்தை இறுக்கமாக ஆக்கிக் கொள்வதையும் தக்க ஆதாரத்தோடு எதிர்த்தார். இவரது படைப்புகள் மக்களை நடுநிலைப் போக்கை மேற்கொள்ளத் தூண்டுவதாக அமைந்திருக்கின்றன.

சமூக மாற்றம் என்பது தனி மனிதனிடமிருந்தே தொடங்குகிறது என்றார். வீழ்ந்த கிலாஃபத்தை கட்டியெழுப்ப, உம்மத்தை சரியாக உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், “ எனது கருத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சிக்கு ஒட்டுமொத்த இஸ்லாமிய சீர்திருத்தப் பணியில் ஒரு வீத பெருமானத்தைத்தான் வழங்குவேன். ஏனைய 99 வீதமான பணிகள் அனைத்தும் பலவீனப்பட்டுள்ள சமூகக் கட்டமைப்பை புனர்நிர்மாணம் செய்வதற்கே ஒதுக்குவேன்” என்றார்.

ஆட்சியை மட்டுமே இலக்காக கொண்டிருப்பவர்களை குறித்து கூறும்போது, இவர்களை தான் அச்சத்தோடு நோக்குவதாகவும் இஸ்லாத்தின் எதிர்காலம் இவர்களிடம் சிக்கி இஸ்லாத்தின் வெற்றி இருள் சூழ்ந்ததாக மாறுமென தான் அஞ்சுவதாகவும் கூறி வருத்தப்பட்டார்.

இஸ்லாமிய சமூகக் கட்டமைப்பில் உள்ள குறைகளை பகிரங்கமாக உரைத்தார். முஸ்லிம் சமூகத்தை ஆட்கொண்டிருக்கும் கடும் போக்கு, பெண்ணடிமைத்தனம், கலை பற்றிய தவறான புரிதல், கருத்து வேறுபாடுகள் முதலிய அனைத்தையும் அச்சமின்றி பொது வெளியில் பேசினார். இஸ்லாமிய மூலதாரங்களின் ஒளியில் இவற்றைக் களைவது மிகவும் அவசியமானது என்று வலியுறுத்தினார். தனது பேச்சிலும் எழுத்திலும் இவற்றை தயக்கமின்றி வெளிப்படுத்தினார். ஆட்சியாளர்களுக்கு அல்லது சலஃபிகளுக்கு அவர் பயப்படவில்லை. பொது மக்களின் மனோ இச்சைக்கும் அவர் இணங்கிப் போகவில்லை.

இருபதாம் நூற்றாண்டின் முஜத்திதுகளான ஷஹீத் ஹசனுல் பன்னா, மௌலானா மௌதூதி முதலான அறிஞர்கள் இஸ்லாமியக் கொள்கை மற்றும் அரசியல் குறித்து ஆராய்ந்து பேசியும் எழுதியும் வந்துள்ளனர். இவர்களுடன் ஒப்பிடுகையில், அல் கஸ்ஸாலியின் சிந்தனைப் போக்கு தனித்துவத்தைக் கொண்டது. இவர் சமூகப் பண்பாடு, கலை, கலாச்சார தளங்களில் இஸ்லாத்தை நிகழ்கால சூழலுக்கேற்ப முன்வைப்பதில் வித்தகராக இருந்தார். கஸ்ஸாலியின் சிந்தனையின் தொடர்ச்சியாக பல அறிஞர்கள் களத்தில் செயல்பட்டு வருகின்றனர். அவர்களுள் தாஹா ஜாபிர் அல்வானி, அப்துல ஹமீது அபூ சுலைமான், முஹம்மத் இமாரா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

அல் கஸ்ஸாலியின் சிந்தனைகளும் கருத்துகளும் பலரை எழுப்பிவிட்டன. இஸ்லாம் எதிர்பார்க்கும் சமூகத்தைக் கட்டியெழுப்ப அவர் பெரும் பங்காற்றினார். இக்வான் அல் முஸ்லிமீன் இயக்கத்தில் வீரியமாக பணியாற்றினார். சில காலம் சிறை கொட்டகையிலும் வாழ்ந்திருக்கிறார். இறுதியாக, 9 மார்ச் 1996 சவூதி அரேபியாவில் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது அவர் இறைவனடி சென்றார். மதீனாவில் ஜன்னதுல் பகீயில் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் மண்ணறை அருகில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

(அக்டோபர் 2015 இதழில் வெளியான கட்டுரை)