மதவெறிக்கு எதிராக இந்திய அறிவு ஜீவிகள்

இந்தியாவில் சங்பரிவார கும்பல்களால் தூண்டப்பட்டு அதிகரித்து வரும் மதவெறிக்கு எதிராக பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பிரபல எழுத்தாளர்கள் தங்களது விருதுகளை துறந்தார்கள். இதனை தொடர்ந்து ஏறத்தாழ 400 கலைஞர்களின் குழு ஒன்று இந்தியாவில் அரங்கேறி வரும் மதவெறிக்கு எதிராக அறிக்கை கொடுத்துள்ளது.

அதில் அவர்கள் “நாங்கள், நாட்டை விட்டு விரட்டப்பட்டு வெளிநாட்டில் உயிர்நீத்த ஓவியர் எம்.எஃப். ஹுசைன் அவர்களுக்காக நடத்திய போராட்டத்தை என்றும் மறக்க மாட்டோம். இந்நாட்டின் சிறந்த கலை கூடங்களில் ஒன்றான பரோடா கலை பள்ளியை வலது சாரிகள் ஆக்கிரமித்து அங்கு இருந்த சுதந்திரத்தை சிதைத்தது எங்கள் நினைவில் இருக்கிறது” என்று கூறியுள்ளனர். மேலும் “பெருமாள் முருகன் போன்ற எழுத்தாளர்கள் மிரட்டப்பட்டு அவரது எழுத்துலக வாழ்க்கையையே துறக்க வைக்கப்பட்டது இந்த சமுதாயத்தின் வெட்கக்கேடு” என்று கூறியுள்ளனர்.

“சங்பரிவார் மற்றும் அதன் இந்துத்துவ கும்பல் அரசாங்கத்தின் அனுமதியுடன் அதன் உதிரிகள் வாயிலாக செயல்படுகின்றனர்” என்று கூறியுள்ளனர்.

“வேற்றுமையை சகித்துக்கொள்ள முடியாத, ஒடுக்கப்பட்டோரின் உயிர் உடமைகளுக்கு பாதுகாப்பு அளித்திடாத எந்த ஒரு அரசாங்கமும் அதன் ஜனநாயக தன்மையை இழந்துவிடும். இன்று அத்தகைய ஒரு சூழ்நிலையே இந்நாட்டில் நிலவி வருகிறது” என்று தெரிவித்துள்ளனர்.

இதே போல விஞ்ஞானிகளின் கூட்டமைப்பு ஒன்று இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் கடந்த வாரங்களில் நிகழ்த்தப்பட்ட மதவெறி வெறி வன்முறைகளுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

அதிகம் பிளவுபட்ட ஒரு சமுதாயம் என்பது வெடிக்க காத்திருக்கும் ஒரு அணுகுண்டைப் போல என்றும் மனித நேயத்திற்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கை மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், அதை தூண்டுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஜனாதிபதியிடம் அளிக்கப்பட மனுவில் ” விஞ்ஞானிகளான நாங்கள், சமீபகாலமாக அதிகரித்து வரும் சகிப்புத்தன்மையற்ற, சமுதாய பிளவு மற்றும் அப்பாவி பொதுமக்கள், அறிவுஜீவிவிகளை கொலை செய்வதில் முடியும் மதவெறி பிரசாரங்களை குறித்து கவலை கொண்டுள்ளோம்” என்று கூறியுள்ளது.

“மாட்டுக்கறி உண்பதற்காக அப்பாவிகள் கொல்லப்படுவதும், மூடநம்பிக்கைகளை எதிர்க்கும் அறிவுஜீவிகள் கொல்லப்படுவதையும், தகவல் அறியும் உரிமை போராளிகள், மற்றும் அரசாங்க குற்றங்களை வெளியுலகுக்கு அறிவிப்பவர்கள் போன்ற பல மதிப்புமிக்க உயிர்கள் கொல்லப்படுவது உடனே நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
பா.ஜ.க ஆட்சிக்கு வந்து அரங்கேறிவரும் அரசியல் அடாவடிகளுக்கு எதிராக பலதரப்பு மக்களிடையே கிளம்பும் எதிர்ப்பு ஒரு இந்திய ஜனநாயக நாட்டின் மீது நம்பிக்கையை தருகிறது.